திங்கள், 8 செப்டம்பர், 2025

 உச்சாவும் போக

உடாம அடிக்கிறான்
லுச்சாப் பயல் புதின்;
லூசான - பச்சா ட்ரம்ப்
வேடிக்கை பாக்குறான்;
வீழும் ஜெலன்ஸ்கிக்கு
நாடிக்கை நீட்டவில்லை
நட்பு!

 நக்கல் புடிச்சவன் நான்!

‘தப்பாப் புடிச்சிருக்கான்
தம்பியந்த புத்தகத்த
இப்போ’, எனயாரும்
ஏசாதீர்; – அப்படியே
கண்ணால் படமாய்க்
கருத்தில் நெறச்சிடுவேன்;
உண்மையில் அத்திறமை
உண்டு! 01
அச்சடிச்ச புத்தகத்த
அப்படியே நாம்படிச்சி
உச்சரிப்ப தோட
உடமாட்டேன்; – சச்சரவில்
சிக்கத் தலைகீழாச்
செப்புவேன்; ரொம்பவே
நக்கல் புடிச்சவன்
நான்! 02
மல்லாக்கத் தாம்படுத்து
வாசிச்சாப் பாடமிடும்
நல்லாவே மண்டைக்குள்
நங்கூரம்; – பொல்லாப்புப்
பத்திக் கவலைப்
படமாட்டேன்; என்னோட
புத்திக் கிதுசரிதான்
போ! 03
தலைகீழா நாம்படிச்சிச்
சாதிப்பேன்; எந்த
நிலையிலும் வீழாம
நிப்பேன்; – அலைக்கஞ்சி
ஆடலாம் கப்பல்,
அடிவானம் ஆடுமா?
ஊடறுப்ப தென்குணம்தான்
ஓடு! 04
சுதியோடு வாசிக்குஞ்
சூறா வளிநான்
மதிநெறய வாய்ச்ச
மழலை; – கதியில்
நகத்தாலக் கீறி
நதிவற்றச் செய்வேன்;
எகத்தாளம் ஜாஸ்தி
எனக்கு! 05
விஞ்ஞானி ஐன்ஸ்டீன
விஞ்சுகிற நுண்ணறிவ
பிஞ்சி வயசுலயே
பெற்றாலும் – நெஞ்சோரம்
தற்பெரும இல்லாத
தம்பிப் பயலெந்தன்
நற்பெரும பேசலயே
நாடு! 06
நித்தமொரு புத்தகத்த
நித்திரைக்கு முன்னால
புத்தியில ஏத்தும்
புலவன்நான் – மத்தியச்
சோறே எனக்குச்
சுவடிதான்; ஏழெனக்கு;
ஆறே பிறருக்கு
அறிவு! 07
சாஞ்சிப் படுத்துத்
தரவாப் படிப்பேன்நான்
மாஞ்சிப் படிக்கிறவன்
மத்தியில; – மூஞ்சிபுக்கில்
நேரத்தப் போக்காம
நீயும் எனைப்போலப்
பாரத்த விட்டுப்
படி! 08
கம்பனுக்கே பாடங்கள்
கத்துத் தருகின்ற
கொம்பனையார் வெல்வது
கோதாவில்? – வெம்புலி
வெண்பா எனக்கு
விளையாட்டுப் பொம்மையே
வெண்பால் நிலவெனக்கு
வீடு! 09
வலமிருந்து கூடநான்
வாசிப்பேன்; நூலத்
தலைகீழா வச்சும்
படிப்பேன்; – கலைபல
தேர்ந்தஎங் கூட
தெகிரியமாப் போட்டியிட்டுத்
தேர்வுல வென்றவனத்
தேடு! 10

ப‍ப்பு!

 பப்புஎனும் இந்தப்

பரதேசி கால்படி
உப்பும் பொறாத
உப்புமா; - எப்பொழுதும்
இந்திய தேசத்தை
எள்ளி நகையாட
அந்நியன் ஏவுகிற
அம்பு! 01
சவார்க்கருக்குப் பப்பு
சளைத்தவன் இல்லை;
அவாள்களில் பப்பும்ஓர்
ஆள்தான்; - நவாப்பழ
செந்தமிழா! இந்தத்
திருட்டுப் பயலையெல்லாம்
சிந்தையில் ஏற்பதும்
தீட்டு! 02
உள்ளூர் உதயநிதிக்கு
ஒன்றும் குறைவில்லாப்
பிள்ளைதான் பப்பிவனும்
பித்தன்தான் - அள்ளித்
தலையிலே வைத்தல்
தரித்திரம்; ஈழம்
இலையென வாக்கியதை
எண்! 03
ஓரறிவே கொண்ட
உயிரினம் தான்ராகுல்;
பேரறிவன் என்கின்ற
பேத்தல்விடு - தீர
விசாரித்துப் பார்த்தால்
விவகார மான
பிசாசுதான் பப்புஎனும்
பேய்! 04
வயதிற்குண் டான
மதியில்லா மாடு;
பயனற்று வாழும்
பகடு; - முயன்றாலும்
ஆட்சியைக் கைப்பற்ற
ஆகாத தற்குறி;
காட்சிப் பிழையிவன்
காண்! 05
கத்திக் கதறுகிற
காட்டுப் பெரும்பன்றி;
புத்தி சிறிதுமில்லாப்
பூச்சாண்டி; - மத்தியில்
மண்கவ்வ நாளும்
மமதையில் வாயாடும்
பண்பாடு பேணாப்
பயல்! 06

என்நிலமை மோசந்தான் இன்று

 என்நிலமை மோசந்தான் இன்று

பச்சக் குழந்தையென்னப்
பாத்துக்க வேலையாள்
வெச்சிட்டு போறல்ல
வேலைக்கி? - நச்சரிச்சி
நாளுநாள் நானழுதும்
நாணயந்தான் முக்கியம்னு
தோளுமேல் தோல்பை
சுமந்து! 01
தூக்கி எனைக்கொஞ்சித்
தோளுல தூங்கவெச்சிப்
பாக்குறது எல்லாம்
பணிப்பெண்தான்; - ஏக்கத்தில்
கேக்குறன் உன்மடி
கிட்டாதா நாந்தூங்க?
தூர்க்கிறதா உன்னன்பைத்
துட்டு!? 02
சந்தைக்கிப் போயித்
தவிட்டுக் கெனைவாங்கி
வந்ததுதான் உண்மை;
மறுபடியும் - சந்தையில
வித்துடுங்க நான்வேற
வீட்டுக்குப் போயிடுறேன்;
எத்தனதான் நாம்பொறுப்பேன்
இங்கு!? 03
பாலூட்டி என்னப்
படுக்கவெச்சி நாந்தூங்கத்
தாலாட்டுப் பாடித்
தனிமையில - மாலாகக்
கொஞ்சிக் கிறிங்க;
குலவிக் கிறிங்க;எனை
வஞ்சிக் கிறிங்கநல்லா
வச்சு! 04
பால்சோறு வேணாம்;
பழச்சாறும் வேணாமே;
பால்புட்டி வேணாம்
பசியில்ல; - வால்பய,ன்னு
பால்பல் மொளச்சயென்னப்
பாடாப் படுத்தறிங்க;
கால்நடையா நாம்போறேன்
காடு! 05
பத்திரமாப் பாத்துக்கப்
பாட்டியில்ல; தேடுகையில்
அத்தனில்ல; கொஞ்சவும்
அம்மையில்ல; - மொத்தத்தில்
பொம்மைக்குப் பஞ்சமில்ல;
பொய்களுக்கும் பஞ்சமில்ல;
உம்மைக்கே பஞ்சமுள்ள
ஊடு! 06
எங்கட்சி சேர,
எனக்காகப் பேச,ஒரு
தங்கச்சிப் பாப்பா
தரவில்ல? - எங்கிட்டப்
பேச்சுக் கொடுத்துவெறுப்
பேத்தநெனைக் காதிங்க
ஏச்சுக் கொடுத்தெனை
ஏய்ச்சு! 07
முத்துன்னும் தேச
முதல்வன்னும் நாம்பெத்த
சொத்துன்னும் ஏதேதோ
சொல்றீங்க; - அத்தனையும்
பொய்யாக்கி வேலைக்குப்
போறீங்க; ஏதிலிபோல்
மெய்யாகத் தேயிறன்நான்
வெந்து! 08
கூட இருந்தென்னைக்
கொஞ்சி, ஒளிஞ்சிவிளை
யாட மகிழ்ச்சி
அரும்பாதா? - வாடவிட்டு
வாரக் கடைசியில
வாரி அணைச்செடுத்து
ஆரத் தழுவுறதா
அன்பு? 09
பொம்மை இருக்கு
பொழுதும் விளையாட;
அம்மைமட்டும் தானே
அருகிலில்ல; – இம்மையில்
என்னிளமை இப்படியா
ஏக்கத்தில் தேயணும்
என்நிலமை மோசந்தான்
இன்று! 10

நம்பிப் பொறுகொஞ்ச நாள்!

 
நம்பிப் பொறுகொஞ்ச நாள்!

மொட்டு விழியோடு
முத்து மலரேநீ
சொட்டிக்கண் ணீரைச்
சொரிவதேன்? – திட்டியே
அம்மா அடித்தாளா?
அப்பா முறைத்தாரா?
இம்மாம் விசனம்
எதற்கு? 01
புன்னகை சிந்தாத
பூவுண்டா? கண்ணீர்ஏர்
கன்னம் உழுவது
தான்நன்றா? – இன்னமும்
நெஞ்சில் நிறைவேறா
நேசக் கனவுண்டா?
அஞ்சி அழலாமா
அஞ்சு!? 02
சின்ன மகராணிக்கு
என்ன பெருஞ்சோகம்?
சொன்னால் குறையும்
துயர்யாவும்; – அன்றாடம்
ஆட்டத்தில் சேர்க்காத
அண்டை மழலையரால்
வாட்டமடைந் தாயா?சொல்
வாய்! 03
ஆராரோ பாடுகையில்
அன்னை உனைப்பற்றிப்
பாராட்டிப் பாடிய
பொய்பலவும் – நேராத
சோகத்தி லாகண்ணீர்
சிந்துகிறாய்? ஏதோஒர்
வேகத்தில் சொன்னாள்;
விடு! 04
நண்டு பிடித்துனக்கு
நல்கிடவா? பூமேற்பொன்
வண்டு பிடித்து
வழங்கிடவா? – கண்டொரு
தும்பி படித்துத்
தரவா? எதைநினைந்தும்
வெம்பிப் பிடிக்காதே
வீம்பு! 05
பாடம் புரியலையா?
பள்ளி சரியிலையா?
மேடம் விரட்ட
மிரண்டாயா? – தேடரிய
பொன்னே! சிறுகரடிப்
பொம்மை தொலைத்தாயா?
என்னேஉன் ஏக்கம்
இயம்பு! 06
அத்தை அடித்தாளோ
அல்லிப்பூச் செண்டாலே;
சித்தி அடித்தாளோ
சிண்டாலே; – ஒத்தையில்
தம்பி துணைகேட்டுத்
தான்வெம்பு கின்றாயோ?
நம்பிப் பொறுகொஞ்ச
நாள்! 07

நெஞ்சிற் குரைத்தல்!

 வாரம் முழுதும் உழைத்துக் களைத்தவன் வார இறுதி நாளில் பத்துமணிவரை தூங்கிப் பரவசமடையும் வாய்ப்பு, வள்ளுவன் சுட்டும் ‘பின்தூங்கி முன்னெழும் பேதை’க்கு வாய்த்ததென்றால்...

(பாவையின் மனவோட்டம் பாக்களாக)
நெஞ்சிற் குரைத்தல்!
வாசல் தெளித்துவிடும்
வானம்; வளர்தென்றல்
தூசைப் பெருக்கித்
துடைத்துவிடும்; – ஆசையுடன்
பூமரம் போட்டுவிடும்
பூக்கோலம்; கண்துஞ்சும்
மாவரம் வாங்கி
மயங்கு! 01
பால்வழங்கு கின்ற
பசு,நாளைக் காலையில்
தேவழங்க உத்தரவு
செய்தாச்சு; – கால்வலிக்கப்
பாழடுப்பைத் தேடிப்
பதற்றம் அடையாமல்
வாழலாம் தூக்கத்தில்
வைத்து! 02
பெட்டையிடம் பேசிவிட்டேன்
பித்துப் பெருஞ்சேவல்
கட்டைக் குரலெடுத்துக்
கத்தாது; – வட்டக்
கதிரெழுமோ வென்ற
கவலைகள் இன்றி
மதியம்வரை தூக்கம்
வளர்! 03
வெம்புலிதான் என்று
வெருளாதே; ராவுலவும்
அம்புலிதான் நெஞ்சே!
அலறாதே; – கம்பளிக்குள்
நூறு கனாவாங்கி
நோகாமல் கண்தூங்கி
ஆறுமணி தாண்டி
அயர்! 04
தூரத்துப் பேராழி
துள்ளும் அலைச்சத்தம்
பாரத்தைக் கூட்டிப்
படுத்தாது; – வாரத்தின்
ஏழ்நாள் உறக்கத்தை
இன்றே உறங்கியெழு
வாழ்நாள் கனவிது
வாய்! 05
சிற்றுண்டி செய்து
சிரமப் படவேண்டாம்
வெற்றுண்டி யோடு
விழிதூங்கு; – மற்றபடி
மத்திய வேளை
வயிறார சாப்பிடலாம்
பத்தியம்போல் கொஞ்சம்
பசிக்கு! 06
மாரன் கணைக்கு
மறுப்பு வரைந்துவிட்டேன்
ஈரத் துணியோடு
இமையிரண்டுஞ் – சேர
விரித்த படுக்கை
விரிப்புக் கசங்கா
அரிதான தூக்கம்
அடை! 07
அடுத்தநாள் பற்றிய
அச்சங்கள் நீக்கி
இடுப்பொடிக்கும் வேலைகள்
இன்றிக் – கடுக்கும்
பகற்கனவு கொண்ட
பதவி பிடுங்கி
அகமே! உறக்கத்தில்
ஆழ்! 08