வெள்ளி, 4 ஜூன், 2010

யார்சொல்லிக் கேட்டதிந்த உலகம்!

யார்சொல்லிக் கேட்டதிந்த பாரே –பெரி
யோர்சொற்கள் விழற்கிறைத்த நீரே!
யார்வழியில் நடந்ததிந்த பாரே –சிறி
யோர்போலே நடந்ததன்றி வேறே?
(யார்சொல்லிக்)
நூலறிவு வாய்த்தவர்சொல் எதையும் –கேட்டால்
நூதனமாய்ப் பார்த்தெள்ள விழையும்!
வாலறிவு வாய்த்ததுபோல் எதையும் –செய்து
வருந்திப்பின் துன்பத்தில் புதையும்!
(யார்சொல்லிக்)
மாயத்தில் மந்திரத்தில் அமிழும் –அந்த
மடமையினைச் சுட்டுவோர்மேல் உமிழும்!
தேயத்தைச் சீர்திருத்த விழையும் –எவரும்
தீண்டத்தகார் என்றுவசை பொழியும்!
(யார்சொல்லிக்)
ஆழ்கிணற்றின் தவளைகளாய் மக்கள் –இதை
அறிந்துரைப்போர் வாழ்வினிலே சிக்கல்
சூழ்ந்திழைக்கப் புகுமிவரா மக்கள்? –இல்லை
தோற்றத்தால் வளர்ச்சிபெற்ற மாக்கள்!
(யார்சொல்லிக்)
தானென்று தறுக்குவதில் நாட்டம் –என்றும்
தன்னலமே பேணிபொருள் ஈட்டும்!
மானமுள்ள பேர்களையே வாட்டும் –இந்த
வஞ்சகரின் பைந்நிறைய தேட்டம்!
(யார்சொல்லிக்)
வாய்நிறைய வாய்மையினை மொழியும் –நெஞ்சில்
வைத்துவளர் பொய்மையினால் இழியும்!
நாய்வாலாய் வல்லான்முன் குழையும் –ஏழை
நல்லாரை ஏய்த்திடவே விழையும்!
(யார்சொல்லிக்)
தன்மதமே பெரிதாமென் றார்க்கும் –பிறர்
தன்மதத்தின் வளர்ச்சிகண்டு வேர்க்கும்!
பொன்மனத்தைப் புதைகுழியாய் ஆக்கும் –இந்தப்
புல்லர்களால் தடம்புரளும் நாக்கும்!
(யார்சொல்லிக்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக