திங்கள், 31 மே, 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (12)நலிவு புரிந்தும், நமைத்தடை செய்தும்
களிக்கின்ற காடையர் காண –உலகம்
வியக்கும் விதத்தில் விரிநீர் நடுவில்
இயக்கம் வளர்த்தாய் இயன்று! (111)


இயல்வது செய்தெம் இனத்தவரைக் காக்க
முயல்வது போலும் மொழிவார் –முயல்வதெம்
மக்களை மாய்க்கும் வழியறிய வேயந்தக்
குக்கலைக் கொல்வதுன் கோள்! (112)

குக்கள் –நாய்கள்; கோள் –குறிக்கோள்.

கோரிக்கை வைத்தும் கொடுத்திடார்; எம்மக்கள்
வாரிக்கை கூப்பியும் வந்துதவார்; -சீறித்
தடைபோடும் ஆங்கு நுகர்பொருட்கே; மீறி
நடைபோடும் நம்மினம் நன்கு! (113)


நன்றாக வாழ்ந்தகுடி நாடற்ற சிங்களர்கள்
சென்றங்கு சேர்ந்ததனால் சீரிழந்தார் –இன்றளவும்
கன்னித் தமிழினம் கண்ணீர் வடிக்கிறதே!
எண்ணிமுன் னேறும்நாள் என்று? (114)

எண்ணித் துணிந்தாய்! எடுத்தடி வைத்துவிட்டாய்!
திண்ணிய போர்மரபைத் தேர்ந்தீழ –மண்ணில்
கடற்படையும் வான்படையும் கட்டி எழுப்பித்
தடையகற்றி ஆண்டுவந் தாய்! (115)

தாயானாய் தந்தையும் தானானாய் மூத்தோர்க்குச்
சேயானாய்; பாவலர்க்குப் பாப்பொருள் –நீயானாய்;
பட்டினி பஞ்சத்தைப் பார்த்தகற்றிப் பார்புகழ
விட்டினி(து) ஆண்டாய் விழைந்து! (116)

விழைந்து* கொடுத்திடினும் வெல்ஈழ நாட்டில்
குழைந்து பெறுவார் இலரே! –உழைத்துப்
பெறுவார் பொருளன்றிப் பின்சென்றால் ஐயம்*
தருவார் எனவிழையா தார்! (117)

விழைதல் –விரும்புதல்; ஐயம் –பிச்சை.


தாங்கிப் பிடிக்க தலைவன்நீ உள்ளதனால்
ஏங்கித் தவிப்பார் எவருமில்லை; -ஆங்கெவரும்
ஐயம் இடுவதில்லை; அண்டிப் பெறுவதில்லை;
கையிரண்டை நம்பியதால் காண்! (118)

கண்டு வியந்தேற்றும் காசுள்ள நாடுகளும்
கொண்டால் இவன்போல் கொளவேண்டும் –மன்னனென
ஏற்றும் பலஇனமும், ஏக்கமுறும் சிங்களமும்
மாற்றம் நிகழ்த்தியநீ மன்!* (119)

மன் –மன்னன்.

மன்னே! மறனே! மருள்நீக்கும் மாமதியே!
அன்னே!* எமைக்காத்(து) அருள்வோனே! –உன்னால்
அறனும், அறிவும், அருள்மிகும் அன்பும்,
மறனும் வளர்த்தோம் மனத்து! (120)

அன்னே –அத்தகையவனே.
அகரம் அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக