சனி, 12 ஜூன், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (13)மனத்தில் உரனும், மதியில் தெளிவும்,
நினைப்பில் நெறியின் நிறைவும், –முனைந்தே
உயரும் உழைப்பும், உதவும் குணமும்
இயல்தமிழர்க்(கு) ஊட்டினாய் இங்கு! (121)

இங்ஙனம் நாட்டை இனிதுற ஆளவும்
சிங்களர் நெஞ்சம் தியங்கினார்* –எங்ஙனம்
மாத்தமிழர் மாள வழியொன்று காண்பதெனக்
காத்திருந்தார் உள்ளம் கரந்து! (122)

தியங்குதல் –கலங்குதல்.

கரப்பில்* மனத்தனுனைக் கண்டு கலங்கித்
திறத்தில் இழிந்தோர் திகைத்தார் –உரத்தில்*
உனக்கிணை இல்லாதார் ஓர்ந்து* பிறரைத்
தனக்குத் துணைகொண்டார் தாழ்ந்து! (123)

கரப்பில் –குற்றமில்லாத; உரம் –வலிமை; ஓர்ந்து –உணர்ந்து.

தாழ்ந்தோர்க்(கு) உதவ தகையில்லாச் சீனரும்
பாழ்மன பாகிசுத் தானியரும் –சூழ்ந்தாங்(கு)
உருசிய நாடும் உகந்தவற்றைச் சீய
மிருகத்திற்(கு) ஈவும் விரைந்து! (124)

சீயம் –சிங்கம்.

விரைந்து படையணியை வீணர்க்(கு) உதவும்
திரைமறைவில் இந்திய தேயம் –புரைநெஞ்சர்*
முன்நின்று போர்புரிய முப்படைக்கும் ஆனவரை
பின்நின்(று) உதவும் பெரிது! (125)

புரைநெஞ்சர் –குற்றமுடைய நெஞ்சை உடையவர் (சிங்களரைக் குறித்தது)

பெருவான் வழியே பெரும்போர் புரிந்து
கருமா மனத்தர் களித்தார் –தரையில்
எதிர்நின்று தோற்றங்(கு) எமன்கண்ட தாலே
விதிர்த்திட்ட* தோளர் விரைந்து! (126)

விதிர்த்தல் –நடுங்குதல்.

விரையும் உலங்கூர்தி வீசிடும் குண்டால்
தரையில் தமிழர் தகர்வார் –வரைவில்*
அழிவைப் புரிந்தும் அடங்காக் கொடியர்
பொழிவார் நெடுவான் புகுந்து! (127)

வரைவில் –முடிவில்லாத.

புகலிடம் இன்றிப் புழுங்கிப் புறம்போய்
தகைசால் தமிழிர் தவிக்க –பகைவர்
நவை*யின் வழியினையே நத்தி*க் குமை*செய்(து)
உவப்பார் அவரை ஒழித்து! (128)

நவை –குற்றம்; நத்துதல் –விரும்புதல்; குமை –துன்பம்.


ஒதுங்கிடம் ஆங்கேஎம் ஒண்டமிழர்க்(கு) இல்லை
பதுங்கு குழியில் படுப்பார் –பிதுங்கிக்
குடல்சரிய சாதற்குக் குண்டள்ளி வீசும்
நெடுவானில் வானூர்தி நின்று! (129)

நின்றெதிர்த்துப் போரிடும் நெஞ்சுரம் இல்லாதார்
சென்றுவான் ஊர்திவழி சீரழித்தார் –பொன்றுவான்*
ஈழத் தமிழனதில் இன்பம் அடைந்திடுவான்
சீய*த் தலைவன் சிரித்து! (130)

பொன்றுதல் –இறத்தல், அழிதல்; சீயம் –சிங்கம்.
அகரம் அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக