வியாழன், 29 அக்டோபர், 2009

முதல் எழுத்து!

பெண் எலியின் கருமுட்டையை எடுத்து உயிரணு தோற்றுவித்து, அதனை வேறொரு பெண் எலியின் கருமுட்டையில் செலுத்தி எலிக்குஞ்சி தோற்றுவித்துள்ளார் ஜப்பான் விஞ்ஞானி “டோமகிரோ”
-செய்தி-

இச்சோதனை, முறையே மனிதர்களுக்கும் நிகழ்த்திப் பார்க்கப் படுமாயின், அப்படிப் பிறந்த குழந்தை தன் அவலம் பாடுவதாக இக்கவிதை...

மாலையிட்டு மஞ்சம் கண்டு
மசக்கை கொள்வது –வெட்டி
வேலையென்று எண்ணிவிட்ட
டோமகிரோ நில்லடா!

தந்தையின்றி தாய்கள்கொண்டு
சனித்த பிள்ளைநான் –இந்த
விந்தைசெய்யும் எண்ணமுன்னில்
விளைந்த தேனடா?

அன்றுசெண்டில் தேனெடுத்து
வண்டு சேர்த்தது –இன்று
செண்டில்செண்டு தேனெடுத்து
சேர்த்து வைக்குது!

இயற்கையென்னும் காண்டிபத்தை
இரண்டு செய்தவா! –உறவின்
இயல்புமாற்றி இனம்பெருக்கும்
அவலம் ஏனடா?

அன்னையிருவர் ஆனதாலே
அன்பில் திளைக்கிறேன் –அன்பு
தந்தையொருவர் இல்லையென்று
தவித்து நிற்கிறேன்!

எதிர்த்தவீட்டு ஏழைப்பிள்ளை
தந்தை தோளிலே –என்னை
உதயம்செய்த தந்தையிங்கு
அன்னை உருவிலே!

மின்னலொன்று மின்னிமின்னி
மனதில் மோதுதே! –விழி
சன்னல்மீதில் சோகமேகம்
சாரல் போடுதே!

காதுகிள்ளி ஓடும்சேயைத்
தாய் அடிக்கலாம் –பிள்ளை
பாதுகாப்பு கருதிதந்தை
போர்வை நுழையலாம்!

தாயடிக்க தாயைச்சேரும்
தமையன் நானடா –என்றன்
காயம்பட்ட இதயத்திற்குக்
களிம்பு பூசடா!

சிறுவர்க்கூட்டம் வீதியெங்கும்
சிற்றல் ஆடுதே –என்னை
அருவருக்கும் பார்வைபார்க்கும்
அவலம் நேருதே!

விதவிதமாய்ப் பெயரும்சூட்ட
விழையும் அன்னைகாள் –என்றன்
முதலெழுத்து என்னவென்று
முதலில் சொல்லுங்கள்!

இடியாய்என்னுள் இதயத்துடிப்பு
இரங்கத் துடிக்கிறேன் –மரண
விடியல்தேடி வாழ்க்கைத் தீயில்
விழுந்து கிடக்கிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக