ஞாயிறு, 25 அக்டோபர், 2009

ஹைக்கூ!

தந்தையின் ஊதியம் சாம்பலாகிறது
மகனின் விரல்களில்
சிகரெட்!

புகைக்கத் தடை
பலகை எச்சரித்தும்
புகைத்தபடி வாகனங்கள்!

இரவில் தேடிவந்து
இலவச ஊசிகுத்தும்
கொசு!

விழிப்புணர்ச்சியோடிருந்தும்
கருத்தரித்து விடுகிறது
காதல்!

நாட்டின் கணிசமான குழந்தைகளைத்
தத்தெழுத்துக் கொண்டிருக்கிறது
குப்பைத் தொட்டி!

வனமெனும் கற்பினைக் காக்கும்வரை
பெய்யெனப் பெய்யும்
மழை!

மற்றவர்கள் அமர
நின்றுகொண்டிருக்கிறது
நாற்காலி!

மின்னல் தோன்றுமுன்
இடியோசை
கொலுசுச் சத்தம்!

பூமி பொய்த்தும்
வானம் விளைகிறது
விண்மீன்கள்!

உயிர்களின் மெய்களில்
எழுதப்படுகின்ற உயிர்மெய்
விதி!

ஒவ்வொரு காலையிலும்
அவளுக்காக வழிந்தபடி
பனிமலர்!

அகரம் அமுதா

2 கருத்துகள்:

  1. அற்புதமான உவமைக் கற்பனைகள் .. மனதைக் கொள்ளை கொண்டன.
    குறிப்பாக .. மின்னல் & பூமி ..

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றிகள் சாதனா அவர்களே. அடிக்கடி வருக ஆதரவு தருக

    பதிலளிநீக்கு