வியாழன், 21 மே, 2009

தமிழ் எங்கள் தமிழ்! (2)

மனமொன்றிப் போற்று மணித்தமிழை; நாளை
இனமுன்னைப் போற்றும் இசைந்து!

இசைமகள் தேடி இணைவாய்; வேண்டா
வசைமகள் நாடும் வழு!

வழுவமைதி இந்நாள் வரைவிலகி நின்ற(து)
எழுஅமைதி ஏனோ? இழுக்கு!

இழுக்குவரின் சாவர் இசைசான்றோர்; நீயும்
பழக்குன்னைப் பைந்தமிழ்நூல் பார்த்து!

பார்த்தால் வருமோ பழிநற் குறள்கற்றுத்
தேர்ந்தால் எழுமோ திமிர்!

திமிர்வகற்றி நாலடியுந் தேர்ந்துசிலம் போதி
நிமிர்வெய்தல் வேண்டும் நிலைத்து!

நிலையா உலகில் நினையழிக்கும் நூற்கள்
மலையாக் குவியும் மலிந்து!

மலிந்த சுவடிகள் மாண்பென நாடாய்
பொலிந்தநன் னூலுட் புகு!

புகுவாய் கவிக்கம்பன் பூந்தோட்டத் தேனை
வெகுவாய்ப் பருக விரை!

விரைந்தோடி ஒளவை வியத்தகு சித்தர்
உரையறிந்து போற்றி உயர்!


அகரம்.அமுதா

2 கருத்துகள்:

  1. குறளமுதம் உண்மையில் அமுதமாகவே இருக்கிறது. மரபு எழுதுபவர்கள் குறைந்து வரும் சூழலில் உஙள் வெண்பாக்கள் ஆறுதலளிக்கின்றன. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு