செவ்வாய், 14 ஏப்ரல், 2026

உறவு!


விழுதெனவே நமைத்தாங்க
விழைவதுதான் உறவு - நாளும்
பழிபேசிப் பரிகசிக்கும்
பண்பதுவா உறவு?
இரும்பெனவே அமைந்தஓடு
ஆமையதன் உறவு - வாழை
மரத்திற்கே கூற்றுவனாய்
வரும்குலையா உறவு?
இறக்கையிலும் உடனிருக்க
இசைவதுதான் உறவு - கையில்
இருப்பிருக்க இன்புறவை
இணைவதுவா உறவு?
வற்றிவிட்ட குலத்துடனே
வாழும்புல் உறவு - தண்ணீர்
முற்றுமின்றேல் எழுந்தோடும்
புள்ளினமா உறவு?
காசினியில் நற்குணத்தைக்
கண்டுவரல் உறவு - நெஞ்சில்
மாசைவைத்து முகத்தளவில்
மலருவதா உறவு?
அகத்தளவில் கலந்திருக்க
அமைவதுதான் உறவு - இனிக்கப்
பகருகின்ற வெற்றுரைக்காய்ப்
பழகுவதா உறவு?
கருமேகம் அற்றபோதும்
காணும்வில் உறவு - வானில்
இருளகன்றால் ஒளிந்துகொள்ளும்
விண்மீனா உறவு?
கண்ணிமையாய் அருகிருந்து
காணவேண்டும் உறவு - அன்றிப்
புண்ணெனவே வலிதந்தால்
பூணவேண்டும் துறவு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக