வியாழன், 21 ஆகஸ்ட், 2025

சரீரத்தில் கோவணம்மிச் சம்!

 

காடு ஒருவருசம் ஆடு ஒருவருசம்

தேடு பொருளையெல்லாம் தேச்சதுன்னா – பாடுபட்டு

என்னத்தைச் செய்ய? செவனேன்னு இருக்கவும்

என்னால ஆகலையே இங்கு! 01

 

விதைச்ச வயலில் விளைச்சலில்லை; கொன்னு

புதைச்ச‍இடம் போல்முளைக்கும் புல்லே! – விதைச்சதெல்லாம்

நெல்விளையத் தானே; நெடுவயல் எங்கும்நீ;

சொல்!என்ன தானுனது சோக்கு!? 02

 

மண்பாத்து நிக்கும் மணிக்கத் தரியிடையே

விண்பாத்து நிக்கின்ற வெண்டைபோல் – மண்பாத்து

நாணும் பயிருக்கு நட்ட நடுவிலே

காணுமிட மெல்லாம் களை! 03

 

மாடா உழைச்சி மணிக்கணக்கா வேர்வைசிந்தி

ஓடா இளைச்சமிச்சம் ஒன்னுமில்லை; – காடாவுங்

காடில்லை; ஆடாவும் ஆடில்லை; வீடாவும்

வீடில்லை என்னசெய் வேன்? 04

 

போட்ட‍உரத் துக்குப் பொசபொசன்னு வாரதெல்லாம்

காட்டைச் செதைக்குங் களையேதான் – ஆட்டைவிட்டு

மேச்சிடலா முன்னா விதைச்சதில் ஒன்னுரெண்டு

காச்சிச் சிமிட்டுதே கண்! 05

 

வெள்ளாடு போட்ட வெடக்குட்டி நோய்ப்பட்டுத்

தள்ளாடிப் போச்சு தலைதொங்கி – வெள்ளணையத்

தூக்கிப் புதைச்சதுல தாயோடு எடுக்கவில்லை

ஏக்கத்தில் நானும் இரை! 06

 

நாலாட்டை வெச்சி நலமாக வாழலான்னா

காலாடாய் மாறிக் கதைமுடிக்கும்; – ஏலாப்

பரீகத்தில் வீழ்ந்துநான் பட்டது போகச்

சரீரத்தில் கோவணம்மிச் சம்! 07

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக