புதன், 20 ஆகஸ்ட், 2025

நாய் வெண்பா! 1



ஏங்க! எசமா(ன்)?
எலும்புங் கறிச்சோறும்
வாங்கித் தரத்தான்
மனசில்லே; - நாங்கெடக்கேன்
தோலும் எலும்புமா;
தோய்ந்த வயிறுமா;
பாலுக்கும் இல்லே
பணம்!?
நீதின்ன மிச்சந்தான்
நேந்திருக்கா என்உணவா?
நாந்திங்க வாங்கித்தா
நல்கணவா; - ச்சே!திங்க
பீட்சாவா நாங்கேட்டேன்?
பிஸ்கோத்து தாங்கேட்டேன்;
'VAT'வரிக்கா யஞ்சிறியா?
What?
பெஸ்டி எனக்குண்டா?
பேஸ்புக் கணக்குண்டா?
ஒர்ஸ்ட்;ஒரு நாளேனும்
ஓய்வுண்டா? - இஷ்டத்திற்கு
ஊர்சுற்றக் கூடுதா?
ஊளையிட வாகுதா?
பேர்எனக்கு 'சிம்பா'வாம்;
பேஷ்!
சோக்காநீ வீட்டுக்குள்
தூங்குறியே! வாசலிலே
நேக்கா எனைக்காவல்
நிப்பாட்டி; - காக்காசும்
வாங்காத கூர்க்காவாய்
வைத்துள்ளாய் கால்ஷூவாய்;
போங்காட்டம் ஆடுகிறாய்
போ!
பேயுலவு போகின்ற
பின்னிரவு வேளையிலும்
நாயுளவு பார்த்து
நவில்கின்றேன்; - பாயுறவைப்
பாழ்நான் படுத்துவதாய்ப்
பல்லைக் கடித்தபடி
சூழ்ந்தெடுக் கின்றாய்
சுளுக்கு!
வீர'முனி யாண்டி
விலாஸ்'பிரி யாணியொன்னு
கீரவாணி ராகத்தில்
கேட்டாலும் - ஓரமாப்
போய்க்குந்த வக்கிறே
போன்லெஸ் கொறிக்கிறே
வாய்க்குருசி யாத்தரியா
வந்து!?
பின்னங்கால் தூக்கிமுச்சா
பெய்யணும்நான்; பெட்டைநாய்
பின்னோடிக் காதல்
பிதற்றணும்தான்; - என்னுடைய
கட்டை அவிழ்த்துவிடு
காற்றாய்ப் பறக்கவிடு
லொட்டெனத் தட்டாதே!
'லொள்!'
இத்தனை கஸ்டத்த
ஏன்நான் சகிச்சபடி
ஒத்தயில இங்க
உழலுறன்னா - பெத்தமவ
'நல்லாப் படிக்கலன்னா
நாய்க்குத்தான் கட்டிவெப்பேன்'
சொல்கேட்ட தாலே
சுருண்டு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக