புதன், 20 ஆகஸ்ட், 2025

மாலும் ஜீசஸும்!

 மால் :-

ஆடு களைமேய்க்கும்
ஆள்நீயும் பால்பீய்ச்சும்
மாடு களைமேய்க்கும்
மால்நானும் - போடுமொரு
செல்பிக்கு லைக்கு
செமையா வரவேணும்
பல்பிதுக்கிப் பண்ணோர்
படம்! 01
ஜீசஸ் :-
குளிர்ச்சி தருகின்ற
கூலிங் கிளாஸ்போட்டு
இளிச்சிஒரு செல்பி
எடுப்போம் – குளிச்சிவெகு
நாளானா என்ன
நமதுடம்பு நாறுமா
தோளோடு தான்பொருத்து
தோள்! 02
மால் :-
அவனவன் எண்ணம்போல்
அப்படியே நம்மை
உவமையாய்த் தீட்டி
உவப்பான்; – கவனமாய்
நம்முருவை நாமே
நயமாய்ப் படமெடுத்து
நம்குலத்தார்க் கீவோமா
நன்கு!? 03
ஜீசஸ் :-
மழிச்சமொகம் கண்டு
மயங்கித்தான் போனேன்
மழிக்க மலச்சவன்நான்
மாலே! – விழிச்சிரிப்பை
வீணாக்கா திப்போ
விரும்பி எடுக்கலாம்
காணாத தன்படம்
கண்டு! 04
மால் :-
ஆரத் தழுவிக்கொள்
ஆண்டவரே! உள்ளங்கள்
சேரக் கலந்துநில்
ஜீசஸே! – ஊரவரும்
நம்நட்பைப் பார்த்தேனும்
தம்நட்பைப் பேணட்டும்
இம்மையில் வேற்றுமைகள்
இற்று! 05
ஜீசஸ் :-
ஆசி வழங்கல்போல்
அந்தக் கரத்தைவை
பூசிமெழு காதுவை
புன்சிரிப்பை – காசினிக்குக்
காட்சி கொடாதநாம்
கைப்பேசிக் குக்கொடுப்போம்
மாட்சி பெருகிடு
மாறு! 06
மால் :-
ஆடுகளை மேய்த்தநீ
ஆண்டவன் ஆனாய்;பால்
மாடுகளை மேய்த்தநான்
மாலானேன் - ஏடுகளில்
நாலெழுத்துக் கற்றதுகள்
நம்தொழிலைக் கேலிசெஞ்சி
மேலெழப் பாக்குதுகள்
மீண்டு! 07
ஜீசஸ் :-
தரைலோக மக்கள்
பரலோகம் வேண்டி
அரைகுறையா வாழ்ந்துவீண்
ஆகி – நரைதிரை
மூப்பிலே வீழ்ந்ததெல்லாம்
முன்னாளில்; இந்நாளில்
நாப்பிடுங்கக் கேட்டுவைப்பார்
நன்கு! 08
மால்
வியக்கத்தான் வைக்குது
விஞ்ஞானம் நாட்டை
இயக்கத்தான் செய்யுதுமுன்
னேற்றம் – மயக்கம்தான்
கூடுது காசே
குறியாய் உறக்கமின்றி
ஓடுது நிக்காமல்
ஊர்! 09
ஜீசஸ் :-
கையை விடச்சிறிய
கைப்பே சியில்உலகம்
கையைக்கட் டிக்கொண்டு
காட்சிதரும்; – ஐயையோ!
நாம்வாழ்ந்த நாளில்
நமக்கிந்த வாய்ப்பின்றி
ஏமாந்து போனோம்
இராம்! 10
மால் :-
எல்லா வசதிகளும்
இந்நாள் இருந்தாலும்
நல்லவழி தேடி
நகராமல் – வல்ல
இயற்கை கெடுத்துலகை
ஏய்த்துமிக வாழச்
செயற்கைபின் நிற்கின்றார்
சென்று! 11
ஜீசஸ் :-
ஆலயமோ சர்ச்சோ
அவசியமா? நாமெந்த
காலத்தில் அங்கே
கடைவிரித்தோம்? – மேலெழுந்த
வாரியாய் நம்சொல்லை
வாய்கள் முணுமுணுத்துப்
பேரிகை கொட்டுவதா
பேறு? 12
மால் :-
நான்சொல்லிக் கேட்பானா
நீசொல்லிக் கேட்பானா
தான்என்று துள்ளும்
தரைவாசி? – வான்நின்று
காட்சிகளைக் கண்டு
களித்திருப்போம் பூமிநம்
ஆட்சியின்கீழ் இல்லை
அறி! 13
ஜீசஸ் :-
கடல்நீல வண்ணாஉன்
காதல் கதைசொல்
உடல்நீலம் ஆன
விடைசொல் – அடநானும்
வாலிபத்தில் உன்போல
வஞ்சியரைக் கூடாமல்
சோலியில் மூழ்கினேன்
சொல்! 14
மால் :-
வான்,கடல் நீலத்தை
வாங்கியதால் வந்தநிறம்
ஏன்என்று கேட்டால்நான்
என்சொல்ல; – கான்மேய்க்கப்
பெற்றங்க ளோடிளம்
பெண்கள் வரஎடுத்தேன்
வற்றிடாக் காதல்
வகுப்பு! 15
ஜீசஸ் :-
வாலிப நாளில்
வளமான வாழ்வைத்தான்
ஜாலியாய் வாழ்ந்து
சலித்துள்ளாய் – கேலிகளுக்கு
ஆளாக்கி என்னை
அறைந்தார் சிலுவையில்
கோளாறு கொண்ட
குடி! 16
மால் :-
‘ஒற்றைவிரல் பட்டால்
ஒயினாகும் தண்ணீ'ரென்று
இற்றைவரைப் பேச்சாய்
இருக்கிறதே – பற்றுவிட்டோய்!
மற்றைவிரல் பட்டால்
மதுக்குடங்கள் என்னாகும்?
முற்றும் உரைப்பாய்என்
முன்! 17
ஜீசஸ் :-
குடிவெறியில் யாரோ
குழறியது நானா
அடிமடியில் காய்ச்சி
அளித்தேன்? – வெடிச்சிரிப்புப்
போதைக்கு நானா
பொருத்துகிற ஊறுகாய்?
கீதைக்கு நாயகா!
கேள்! 18
மால் :-
ஆடுகள் எங்கோ
அகன்றன; மேய்ந்தபடி
மாடுகள் எங்கோ
மறைந்தன; – தேடுபோய்
ஆடுகளை; நான்போய்
அதட்டி மறிக்கின்றேன்
மாடுகளை; பின்பார்ப்போ
மா? 19
ஜீசஸ் :-
காயாம்பூ வண்ணனே!
காதலிளங் கண்ணனே!
சாயாக் கதிர்மேற்கே
சாய்கிறது – போயாக
வேண்டும்நான் இப்பொழுது;
வேறொருநாள் பார்க்கலாம்
மீண்டும்நாம் செல்பியொடு
வீற்று! 20
அகரம் அமுதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக