வெள்ளி, 30 செப்டம்பர், 2011

காது கொடுத்தால் சேதி சொல்கிறேன்


காது கொடுத்தால் சேதி சொல்கிறேன்
காலம் போகிற போக்கைச் சொல்கிறேன்
காசு கொடுத்தா நாலும் செய்கிற
காலம் இதிலே கவனம் என்கிறேன்
(காது)
அழகாய்ச் சிரித்து அறிவாய்ப் பேசி
அனைத்தையும் சுரண்டும் உலகமடா –தினம்
அதனால் எத்தனை கலகமடா
விழுங்கி ஏப்பம் விடுவதில் இந்த
வீணருக் கில்லை உவமையடா –அவர்
விழுந்து மடிந்தால் உவகையடா!
(காது)
தனக்கு என்றால் தப்பைச் சரியெனத்
தயக்கம் இன்றிப் பறைசாற்றும் –அவர்
தன்னலம் ஆடும் வெறியாட்டம்
மணக்க மணக்கப் பேசும் இந்த
மடயரின் மனதில் முடைநாற்றம் –அது
முற்றிலும் அறிவை வெளியேற்றும்
(காது)
காசுக் காக கல்வி விற்குற
கல்விக் கடைகள் நிறைஞ்சாச்சு –பணம்
மனுசனின் கண்களை மறைச்சாச்சு
பேசும் தரமும் வாழ்வும் குணமும்
மேலை நாட்டை ஒத்தாச்சு –தமிழ்
தமிழரின் நாவினில் செத்தாச்சு!
(காது)
போதையின் பாதையில் போகிற கூட்டம்
பொழுதை அதிலே கழிக்குது –பெரும்
பொருளை அதிலே அழிக்குது
மாதரும் போதையின் வழியில் செல்கிற
வகையும் நாட்டில் செழிக்குது –கண்டு
மானமும் கற்பும் விழிக்குது
(காது)
புதுமை நோக்கில் எதையும் செய்து
புதையின் குழியில் விழுவானே –அது
புரிந்தபின் உட்காந் தழுவானே
எதுமெய் பொய்யென அறியும் தெளிவும்
இவனுக் கில்லை மொழிவேனே –இவன்
இருந்தால் பயனென் பதுவீணே!
(காது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக