திங்கள், 5 செப்டம்பர், 2011

பூமியிலே வாழவிடு!


ஓ! மனிதர்களே!
இது நீர்நடுவே அமைந்த
தேசம் என்பதாலா
எங்கள் கண்களிலெல்லாம்
நீர்கோர்க்கச் செய்கிறீர்

அறம்பற்றிப் பாடுவதும்
அறம் பாடுவதும்
தமிழனுக்கே உரியது
என்பதாலா
இன்று
அறம்பற்றிப் பேசவும்
அஞ்சுகிறீர்

உரிமைக்குப் போராடும்
எங்களின் உயிர்களை
உணவாக்கிக் கொள்ளும்
ஓநாய்களுக்கு உதவுவதையா
உயர்வெனக் கருதுகிறீர்

அகிம்சை ஆயுதம் கொடுக்க
காவிகள் இங்கே
களமாடுகின்றன

வெள்ளையரிடம் எடுபட்ட அகிம்சை
கொள்ளையரிடம்
கோமாலித்தனமாகிப் போனதே
எதார்த்த உண்மை

ஓ! மனிதர்களே!
நாங்கள் அன்பாய்த்தான் கேட்டோம்
ஓங்கி அடித்தே
இல்லை என்றன
ஓநாய்கள்

எங்கள் கைகளை
ஓங்கச்செய்யும் வேலையை
அந்த ஓநாய்களே
ஓய்வின்றிச் செய்தன

நாங்கள் தட்டிக்கேட்டே
பழக்கப் பட்டவர்கள்
முன்பு அவர்கள் கதவுகளையும்
பின்பு அவர்கள் முதுகுகளையும்

தமிழன்
அயலாரிடம்
அவரவர் தாய்மொழியிலேயே
பேசிப் பழக்கப்பட்டவன்
அதனால்தான்
சிங்களர்களுக்குத் தெரிந்த
ஆயுத மொழியிலேயே
அவர்களோடு பேசிக்கொண்டிருக்கிறோம்

நாங்கள் எங்களுக்குள்
ஒற்றுமையாய்
இருக்கக் கருதியதைவிட
அவர்களோடு ஒற்றுமையாய்
வாழக் கருதியதே அதிகம்

தோசைகூட
இரண்டு பக்கம்தான்
சுடு படுகிறது
நாங்கள் எல்லா பக்கமும்
எல்லா பக்கத்திலிருந்தும்
சுடப்படுகிறோம்

இனிமேல் நாங்கள்
எங்கள் பெண்களை
வர்ணிக்கும்போது கூட
மயிலே என்று
வர்ணிக்கப் போவதில்லை

கற்புமுதல் கண்ணீர்வரை
சேய்முதல் செங்குருதிவரை
தாய்முதல் தாய்மண்வரை
எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்
இனி இழப்பதற்கு எங்களிடம்
ஏதுமில்லை
நீங்கள் எதையாவது கொடுத்து
இழக்கச் செய்தால்தான் உண்டு!

3 கருத்துகள்:

  1. கண்டேன் கண்டேன் அமுத-கவிதை
    கண்டேன் கண்டேன் அமுத
    கொண்டேன் உண்டேன் அமுதே-ஈழ
    கொடுமையை இன்னும் எழுத
    விண்டேன் இங்கே வேண்டி-ஈழ
    வீரத்தை மேலும் தூண்டி
    தொண்டெனச் செய்வோம் நன்றே-உடன்
    தொடங்குவீர் நண்ப இன்றே

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு