விடுதலை கோவிலுக்கே அணிசேர்த்துச்
சென்றவெங்கள் வீரர்க் கின்று
வடிவுறு வணக்கமிட்டு மேன்மைசெய்யும்
துய்தநன்னாள்; மற்றிந் நாளோ
மடிதலுக் கஞ்சியழும் துயர்நாளன்(று)
அதுவுமன்றி வருத்தம் தோய்ந்து
மிடி*யுறும் நாளுமல்ல; ஈகத்தின்
திருநாளே இந்நாள் ஆகும்!
உண்மையுறு குறிக்கோட்காய் இன்னுயிரை
ஈகித்த* உயர்ந்த வீரர்க்(கு)
இன்றெமது நெஞ்சமெனும் பசுமையினில்
நினைவுறுத்தி ஏற்றம் செய்வோம்;
நன்றவர்கள் மறத்திற்கும் மிகவுயர்ஈ
கத்திற்கும் தலை குனிந்து
நின்றுவணக் கம்செய்வோம்; விடுதலைக்காய்க்
கொடுத்தவிலை அரிய தன்றே!
இறைமைபெற்று மேன்மையுடன் எம்மக்கள்
வாழுமொரு இலக்கிற் காக
மறவர்செய் ஈகங்கள் வரலாற்றில்
ஒப்பிலதாம்; எக்கா லத்தும்
தரைகண்ட போர்களிலே நிகழாத
வியப்பீவு* நிகழ்ந்தி மாந்த
வரலாற்றில் காணொல்லா வீரமிகு
பாவியமெம் மண்ணில் செய்தோம்!
ஒப்பிலது –இணையில்லாதது; வியப்பீவு –வியப்புமிகுந்த தியாகம்
எம்முள்ளே எரிகின்ற விடுதலை
நெருப்பணைக்க எதிரி யோடு
தம்கைகள் கோர்த்தோரால் பலகாலும்
சரிவுகளைச் சந்திக் கும்நாம்
எம்வலியின் மேலான வலிகளொடு
போராடும் வலிவந் தத்தால்*
எம்மிந்த விடுதலைக்கு நாம்கொடுக்கும்
விலையுலகிற் பெரிய தன்றே!
உயிரைவிலை யாக்கொடுத்தே விடுதலைத்தீ
அணையாமல் வீரர் காத்தார்
அயிர்ப்பின்றி* நாமவரை நம்தேசக்
காவலிறை களாக மேன்மை*
செயல்வேண்டும்; விடுதலைச் செலவி(ல்)*பல
நெருப்பாற்றைக் கடந்தோம்; இந்தத்
தழல்புகுகை* தனிலழியா திருத்தற்கெம்
உறுதியொன்றே கரணி யம்மாம்!
அயிர்ப்பு –ஐயம்; மேன்மை –கௌரவம்; செலவு –பயணம்; தழல்புகுகை –அக்னிப்பிரவேசம்.
இனவழிவு அடக்குமுறை யால்நைந்த
எம்மக்கள் இன்னல் தீரத்
தனித்ததொரு தன்னாட்சி கோருமெங்கள்
குறிக்கோலில் தவறொன் றில்லை;
முனைப்பொடுநாம் பற்றிநிற்கும் குறிக்கோலே
மலையளவு மொய்ம்பைத் தந்து
தனித்துவமும் சிறப்பான வரலாறும்
இயக்கத்திற் கீந்த தாகும்!
ஈழத்தில் அதிர்ந்திட்ட அரசியற்
சூழ்நிலைக் கேற்ற வாறு
வாழவழி யறியாமல் அழிந்தபல
குழுக்கள்போல் மறைந்தி டாமல்
சூழவரும் சூழ்ச்சிகளை எம்முறுதி
யால்வென்றோம்; தூய நெஞ்சின்
ஆழத்தில் நாம்கொண்ட உறுதியினை
எவ்வலியால் அகற்ற ஒல்லும்?
எம்மண்ணை விழுங்கவந்த இந்தியத்தின்
படையெடுப்பே அன்று நம்மின்
மொய்ம்புமிகும் உறுதிக்குப் பெருவினாவாய்த்
தோன்றியது; முகிழ்ந்த அந்த
பொய்ம்முகத்து வல்லரசின் மேலாண்மை
எமைவலிவாய்ப் போந்து தாக்க
மெய்ம்மையுடை உறுதியொன்றே எம்மிறுதி
ஆய்தமாய்* மிளிர்ந்த தன்றே!
இந்தநாள் புதியதொரு வன்கவர்புப்
போரையெதிர் கொண்டு நின்றோம்;
சந்திரிகா அரசென்ற வடிவங்கொண்
டெமதுவர லாற்றுத் தெவ்வர்*
செந்தமிழர் இனவழிப்புப் போர்நடத்தித்
தமதுபடைத் திறத்தை எல்லாம்
வந்தொன்று திரட்டியென் வடபுலத்தை
வன்கவர்பால் வளைத்து நிற்கும்
பலப்பலவாய் வெடிபொருட்கள் பேரளவிற்
படையணிகள் பயன்ப டுத்திப்
புலிப்படையின் வலுவழிப்ப தேயிந்த
வன்கவர்புப் போரின் மூல
வலிமையுடை சூழ்ச்சியென வாய்க்கினுமக்
குறிக்கோளை அடைவ தில்தான்
வலிவிழந்து படுதோல்வி அடைந்திட்ட
சிங்களர்கள் வாடி நின்றார்!
நாற்புறமும் கடல்சூழ்ந்த நிலவியலின்
அடிப்படையில் நமக்குக் கேட்டை
ஏற்படுத்தும் நிலப்பரப்பில் பெருஞ்சமர்கள்
தொடுத்தெமது செம்மல்* மாய்க்கப்
பார்க்கின்ற படையணியின் சூதறிந்து
நாம்நடக்க யாழ்மண் மீது
மேற்கொண்ட சமரவர்க்குக் கைகூட
வில்லையிது மெய்மை யன்றே!
கரந்தடிபோர்* முறையிலுயிர் இழப்பகற்றி
ஆளணியைப் பின்ன கர்த்தி
உரிமையுடை நிலப்பரப்பை இழப்பதுவும்
தற்பொழுதைப்* பின்ன டைவே;
உரமுறுதி மொய்ம்பிருப்பின் ஏற்புறுநற்
பொழுதிற்போர் ஒலித்துத் தெவ்வர்
உரமழிக்க இயன்றிடுமுன் பிழந்தநிலம்
மீட்டிடவும் ஒல்லு மன்றே!
முல்லையில்நான் ஈட்டியதோர் பெருமைமிகு
வினைத்திறனே* அதற்குச் சாட்சி;
தொல்லைதரும் சிங்களருக் குயிரியப்பை
இப்போரில் தோற்று வித்துக்
கொல்லவரும் பகைவலியை மெலியச்செய்(து)*
இழந்தநிலம் கொண்டோம்; நம்மின்
வல்லமையைப் பேணியத்தால் வந்தவெற்றி;
படைவலியை மேலும் சேர்த்தோம்!
‘அமைதிப்போர்; தமிழவிடு தலைக்கான
படையெடுப்’பென் றார்த்து நம்மின்
அமைதிகுலைத் தகதிகளாய் அடிமைகளாய்ப்
பொருள்வளத்தை அழித்தென் றும்மில்
குமைமிக்க அவலத்தைக் கொடுத்துள்ளார்;
அமைதியெனும் கொள்கை பேசி
எமக்கெதிராய் அமர்க்களத்தைச் சந்திரிகா
அரசியற்றி
யாழ்திறந்த வெளிச்சிறையாய் மாற்றப்பட்(டு)
உயர்பாது காப்பென் றாங்கே
தாழ்குழிகள், மண்மேட்டின் அரண்களோடு
முள்வேலி தமிழ நாட்டின்
சூழ்புறமெல் லாம்காவல் நிலைய(ம்)பல
காட்சிதரத் தொன்மை மிக்க
யாழ்மண்ணில் படையினரின் அச்சுறுத்த
ஆட்சிநடை பெறுதல் காண்பீர்!
தளைப்படுத்திச் சிறைவைப்பும் உடலூறும்*
வல்லுறவும் நிகழ்த்தி யாங்கே
கொலைகளொடு காணாமற் போதலும்பின்
புதைகுழியிற் கண்டெ டுப்பும்
தலைதூக்கும் கொடுமைமிகு நிகழ்வுகள்
படையினர்சூழ்ந் தாளு மெம்மின்
நிலத்திலின வழிப்பைமறை முகமாகச்
செய்கின்ற தென்றே காட்டும்
வன்கவர்புப் பகுதிகளில் நிகழ்கின்ற
அட்டூழி யங்க ளோடு
தென்னிலங்கை தனில்தமிழர் பகைச்செயலும்
சந்திரிகா அரசின் உண்மைத்
தன்மையெனும் இனவாத முகத்தைவெளிப்
படுத்தியுள்ள தவரின் ஆட்சி
முன்னாண்ட அரசுகளை விடத்தமிழர்
ஆதனை*ப்புண் படுத்திற் றன்றே!
சந்திரிகா அரசுதமி ழர்க்குநயன்
மை*வழங்கப் போவ தில்லை;
எந்தமிழர் தேசியத்தின் சிக்கலுக்கும்
நன்னெறி*யில் தீர்வு காணார்;
இந்தபெரும் உண்மையினைத் தொடங்கமுதல்
நாமறிவோம்; அமைதிப் பேச்சில்
இந்தரசின் கடும்போக்கும் கரவுமனத்
தாலுமெமக் கேமாற் றம்தான்.
தமிழர்தம் எளியநிலை*த் தேவைகளை
யும்நிறைவு செயம றுத்துத்
தமதுபடை மேலாண்மை நலம்பேண
முனைந்ததினால் அற்றைப் பேச்சின்
அமர்வுபொருள் அற்றுமுடி வடைந்தது;தம்
படைவலியை நம்பிப் பேச்சின்
அமர்வுக்கு முதன்மைகொடா(து) அரசுபேச்சை
முறிவடையச் செய்த தன்றே!
தமிழர்தம் தாயகத்தில் படையினரிம்
மேலாண்மை* தன்னை நாட்டி
தமதாய்தத் துணைகொண்டு நமையாளும்
விழைவதனால் சிக்கல் நீண்டு
அமைதிகுலைந் தென்றுமிலா அளவிற்போர்
விரிவடைந்தே அழிவைச் சேர்க்கத்
தமதுபொருள் வளங்குன்றி மீளொல்லா
நெடுக்கடியால் தவித்து நிற்கும்!
மேலாண்மை -மேலாதிக்கம்
(பின்வரும் ஐந்து பாடல்களும் ஒருதொடர்)
சந்திரிகா அரசினின வழிப்புப்போர்
தமிழர்தம் நாட்டில் வாழ்வில்
வந்துபெரும் சீரழிவைச் செய்ததுடன்
முழுஇலங்கை நாட்டி னையும்
முந்திவரும் பேரழிவிற் தள்ளுவதை
அனைத்துலகும் உணர்ந்து கொண்ட(து)
இந்தபெரும் போர்க்கெதிராய் எழுமுலகின்
அழுத்தத்தைத் திசை திருப்ப
சந்திரிகா அரசமைதி சைகைசெயத்
தொடங்கி யுள்ள(து)
இந்தபெரும் சிக்கலினைத் தீர்த்திடமூன்
றாந்தரப்பு நடுவம் என்றும்
வந்திருந்து புலிகளுடன் பேசிடவும்
அனியமென்றும் அறிக்கை விட்டு
வந்துபுலி இயக்கத்தார் ஆய்தத்தை
ஒப்படைக்க வேண்டும் என்னும்
நகைப்புமிகு வன்கட்டுப் பாட்டினைமுன்
வைக்கின்றார் நாடி வந்தித்
தகையமதிப் பற்றதொரு வன்கட்டை
எந்தஒரு தன்ம திப்பும்
மிகப்படைத்த விடுதலை இயக்கமுமே
ஏற்றிடப் போவ தில்லை;
தகைமிக்க தமிழர்தம் தேசத்தை
மீட்டெடுக்க எழுந்த இந்த
விடுதலைப்போ ராட்டத்தை ‘அச்சுறுத்தப்
புரட்சி’*யென்றும் விடுத லைக்காய்
அடுகின்ற இயக்கத்தை ‘அச்சுறுத்த
அமைப்பெ’ன்றும் அனைத்து நாட்டிற்(கு)
எடுத்துத்தீ விரைவுபரப் புரைசெய்து
உலகினிலெம் இயக்கத் திற்குத்
தடைவிதிக்கப் பெருமுயற்சி செய்துவரும்
இவ்வேளை ஓராண் டுக்குள்
புலிப்படையை ஒழித்திடுவோம் என்கின்ற
அறைகூவல் விட்டுப் போரை
வலிந்துதொடங் கிடபடையை அனியநிலைப்
படுத்துமிந்த சூழ லில்தான்
அலி*மனத்துச் சந்திரிகா அரசமைதி
தனைப்பேசி ஆர்க்கும் போக்கில்
புலிகளெமக்(கு) அவரணுகு முறைதன்னில்
மிகவையம் தோன்று மாதோ!
மிடி –துன்பம்; வலிவந்தம் –நிர்பந்தம்; தழல்புகுகை –அக்னிப் பிரவேசம்; முகமை –முக்கியம்; செம்மல் –வலிமை; கரந்தடிபோர் –கொரில்லாபோர்; தற்பொழுது –தற்காலிகம்; தெவ்வர் –பகைவர்; வினைத்திறன் –சாதனை; மெலியச்செய்தல் –சேதப்படுத்துதல்; தளைப்படுத்தல் –கைதுசெய்தல்; உடலூறு –சித்திரவதை; ஆதன் –ஆன்மா; நயன்மை –நீதி; நன்னெறி –நியாயம்; எளியநிலை –சாதாரணம்; வன்கட்டு –நிபந்தனை; அடுதல் –போராடுதல்; அச்சுறுத்தப் புரட்சி –தீவிரவாதம்; அலிமனம் –தீமனம்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக