ஞாயிறு, 17 ஜூலை, 2011

தாலாட்டு!


விழியில் நீரோடை ஏனோ தாமரையே
விடியும் நாள்தூரம் இல்லை வான்பிறையே
சிவனுக்கும் அன்னை தந்தை கிடையாதம்மா
அவன்போலே மண்ணில் வந்து பிறந்தாயம்மா
--- --- ---
பெண்ணாய் வந்து பூமியில் பிறந்தது
பிழையென அழுதாயா
ஈன்றவர் உன்னை எடுத்தெறிந் ததனால்
இருவிழி கசிந்தாயா
ஆடும் மயிலும் கூவும் குயிலும்
அழுவது கிடையாதே
சூடும் மலரே சுந்தர நிலவே
சோகத்தில் துவலாதே
உனக்காக வானம்வந்து நீர்வார்த்தது
எதற்காக உந்தன்கண்கள் நீர்கோர்த்தது -ஒரு
பூவைப்போலே வாழும் –பெண்
புயலாய் மாறக்கூடும் –விழும்
சோதனைகள் –எழும்
சாதனைகள் –ஏன்
வேதனைகள்?
--- --- ---
ஓடும் நதியில் ஓர்துளி என்றே
உன்னை நினைந்தாயா
நாளைப் பொழுது உனக்கென விடியும்
நம்பிக்கை இழந்தாயா
ஆடும் காற்றில் அகல்விளக் கணையும்
சூரியன் அணையாதே
நாணல் போலே நம்பிக்கை வளைந்தால்
நன்மைகள் பிறக்காதே
வலிசெய்யும் வாழ்க்கைதானே வளமானது
உளியின்றிச் செற்பங்களெங்கே உருவானது -ஒரு
புலியைப் போலே பாயும் –துயர்
போனபின் இன்பம் சூழும் –வரும்
காலங்கள் –இனி
வளமாகும் –சுகம்
உனதாகும்!

3 கருத்துகள்:

  1. நாளைப் பொழுது உனக்கென விடியும்

    நம்பிக்கை இழந்தாயா

    ஆடும் காற்றில் அகல்விளக் கணையும்

    சூரியன் அணையாதே

    நாணல் போலே நம்பிக்கை வளைந்தால்

    நன்மைகள் பிறக்காதே

    சொல்லிய வரிகள் ஒவ்வொன்றும்-ஏதும்
    சொல்லக் குறையில்ஒவ்வொன்றும்
    துல்லிய மாகப் பொருள்தருமே-நாளும்
    தொடர்ந்து எழுதின் வளம்பெறுமே
    உள்ளம் மகிழ என்போன்றார்-தமிழ்
    உணர்வில் ஆழ்ந்திட உம்போன்றார்
    வெள்ளம் போல மரபுப்பா-வந்து
    வீழின் தமிழுக்கு உரமப்பா

    ப்புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  2. ''...புலியைப் போலே பாயும் –துயர்
    போனபின் இன்பம் சூழும் –வரும்
    காலங்கள் –இனி
    வளமாகும் –சுகம்
    உனதாகும்!...''
    ''..வலிசெய்யும் வாழ்க்கைதானே வளமானது
    உளியின்றிச் செற்பங்களெங்கே உருவானது..''
    இனிய தாலாட்டு-நல்ல வரிகள். ரசித்தேன். வாழ்க!
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு