கண்ணசை வொன்று போதும்;
காலிடும் கோலம் போதும்;
சின்னகை வளையல் சிந்தும்
சிணுங்கலே போதும்; தோன்றும்
எண்ணமெல் லாமும் நீயே
என்பதை எடுத்துச் சொல்ல
புன்னகை சிந்தும் இந்தப்
பூவிதழ்ச் சொல்லா வேண்டும்?
முன்புறம் இட்ட கூந்தல்
முடிச்சினை அவித்து மீண்டும்
பின்னிடும் கைகள் ரெண்டும்
பேசிடாக் காத லையா
என்னிதழ் பேசக் கூடும்?
எவரோபோற் காணும் கண்கள்
தன்னைப்போல் காதல் சொல்லத்
தக்கதோர் மொழியுண் டாமோ?
பார்வையால் பேசிப் பேசிப்
பழகிய நாளில் காதல்
வேர்வைக்கா திருந்த துண்டா?
வெற்றுச்சொல் வெந்நீ ருக்கா
வேர்வைக்கக் கூடும்? நெஞ்சம்
விழைந்துனை என்னை நீங்க
நேர்ந்தபின் வாய்ச்சொற் கங்கே
நின்றிடும் தகுதி யுண்டா?
முற்றிய காதல் காயை
மௌனமே கனியாய் மாற்றக்
கற்றுள தென்பேன்; காயைக்
கனிசெயப் புகையிட் டாற்போல்
சொற்களைக் கொண்டா காதல்
துளிர்ப்பது? நெஞ்சும் நெஞ்சும்
பற்றுதல் கொண்ட பின்பு
பார்வையே போதும் அன்றோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக