ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

மாவீரர்!- உரைப்பா! (1995)

விடுதலைக் காய்த்தன் உயிரை
வீரர்கள் ஈந்ததை எண்ணி
நெடுமனத் தேற்று வணங்கும்
நேரிலா நாளிது; மக்கள்
விடுதலை, கண்ணியம் மற்றும்
விளிவறு காப்புடன் வாழும்
விடுதலைக் காக இறப்பை
விரும்பிமேற் கொண்டனர் அன்றே!

பிறந்து வளர்ந்துநாம் வாழும்
பெட்புடை இந்தநன் நாடே
மறைந்த எமதரும் முன்னோர்
மலர்த்தாள் சுவடுகள் ஏந்திச்
சிறந்துள தித்தரை தானெம்
தேரிய பண்பா டுடனே
பிறங்கிடும் வரலா றென்னும்
பெருவேர் வளர்த்தது மாகும்!

இத்தரை எங்களின் தாய்நா
டென்றா கிடவேண் டுமென
நத்திய தோர்குறிக் கோட்காய்
நண்ணி* மடிந்தனர் வீரர்;
இத்தரை தன்னைத் தலைமை*
இயற்றும் வலிகளை நீக்கி
மெத்த* விடுதலை நாடாய்
மேலெழ சாவினை ஏற்றார்!

நமதுதாய் மண்ணினை மீட்க
நடத்திய துய்தநற் போரில்
எமதுவீ ரர்களின் ஈகம்
இயம்பிட சொற்களே இல்லை;
அமைந்தயிப் பார்வர லாற்றில்
அறிந்திடா மேன்மைச் செயல்கள்
எமதிந் நிலத்தில் நிகழும்
எம்மின் விடுதலைக் கன்றே!

மேன்மை மிகப்படை திட்ட
வீர வரலா றிதனை
ஈன்ற மறவரின் வேட்கை
இனிதொரு நாள்நிறை வேறும்;
தான்எனும் செல்வச் செருக்கும்
தனது படைவலி யாலும்
ஈண்டொரு மாப்படை யாழ்மண்
இறக்கியுள் ளானெம் எதிரி!

பழம்பெரு மைமிகு யாழ்மண்
      பாழ்படக் குண்டினை வீசும்
இழிந்தவர் வன்கவர் புப்போர்
      இயற்றிடும் நோக்கம் யாழின்
எழிலுறு செல்வ வளத்தோ
டெம்மின் கலைமர பனைத்தும்
அழித்துநம் மக்களின் வாழ்வின்
      ஆணிவேர் வீழ்த்துவ தன்றோ!

நடைபெறும் இப்போர் தமிழர்
      நாட்டை அழிப்பதே அன்றிப்
படையெடுத் தேகும் அரசு
      பகருதல் போல நமது
விடுதலை வேங்கைக் கெதிராய்
விளைந்ததில்; சிங்களர் கூட்டம்
தொடுக்கும் இனவெறிப் போரின்
தொன்மை மிகநீண் டதாகும்!

புலிதொன் றுமுனம் பிறந்து
      போந்த வரலா றிதனை
அலிமகள் சந்திரி காவின்
      அப்பனே தொற்றுவித் தான்இன்(று)
அலிமகள் சந்திரி காவின்
      அமர்வெறிப் போக்கிற் குமிகப்
பொலிவுறு தோற்றம் முழுதாய்ப்
      போர்த்திடப் பட்டுள தன்றே!

தலைமைஆதிக்கம்; மெத்த -மிகவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக