புதன், 27 அக்டோபர், 2010

மாவீரர்! -உரைப்பா! (1991)

இந்தநாள் நமது வீரர்
இன்னுயிர் ஈகம் செய்து
நந்தமிழ் இனத்தைக் காக்க
நடுகற்க ளான தெண்ணிப்
புந்தியில் அவரை வைத்துப்
போற்றுவோம்! குறிக்கோ ளுக்காய்த்
தந்தனர் உயிரை அந்தத்
தகைஞரை வணங்கச் செய்வோம்!

வியர்வை,கண் ணீர்செந் நீரால்
விளைந்தயிவ் விடுத லைப்போர்
வியத்தகு குறிக்கோள் வாழ்வில்
மிகுப்பல இடுக்கண் துய்த்தும்
அயர்வுறா வீரர் கண்ட
அம்கன விவையெல் லாமும்
இயல்புறு வெளிப்பா டாக
இயைந்ததால் பிறந்த தன்றோ?

செருக்களில் எம்போல் பாரில்
தேர்வுகள்* எதிர்பா ராத
திருப்பங்கள் நிறைந்த போரைத்
திறமுடன் கண்டா ருண்டோ?
நெருக்கடி நிறைந்த தாயும்
நீண்டதும் கடின மாயும்
இருக்கிற செலவை* எங்கள்
இயக்கமே தொடரக் காண்பீர்!

ஏற்பிலா இரண்ட கத்தோ
டேமாற்றம் எம்மைச் சூழக்
கூற்றெனப் பகைவர் பாயும்
கொலைக்களம் ஒருபு றம்மும்
வேற்றவர் வன்க வர்பை
விரட்டிட மறுபு றம்மும்
ஆற்றொணா அழிவின் எல்லை
அடைந்துமே மீட்சி கண்டோம்!

அப்பெரும் புயற்கு வெற்பாய்
அசைவுறா நெஞ்சத் திட்பம்
மெய்ப்புறு தூண்க ளாக
மிசையெழுந் தியக்கம் தாங்க
இப்பெரும் போரில் நந்தம்
இணையிலா வீரர் செய்த
செப்பரும் செயலால் அன்றோ
செருவிடை நிமிர்ந்து நின்றோம்!

உளத்திடம் ஊன்று கோலாய்
உதவிட; சூழ்ச்சி வென்று
விளிவிலாக் குறிக்கோள் ஒன்றே
விடுதலைச் செலவில் வெற்றி
அளிப்பதைத் துய்த்த றிந்தே
அறைகிறேன்; செந்நீ ராலும்
விளிவொடு* துன்பத் தாலும்
விளைதலே விடுத லையாம்!

தின்னுணா தடையோர் பக்கம்
செருப்படை* இன்னோர் பக்கம்
இன்னொரு நெருக்க டிக்குள்
எமைவிட முனையும் மாணார்*
சென்றுயாழ் நாட்டைச் சூழ்ந்து
செய்தடை யாலே ஊனுக்
கென்றுமில் லாப்பஞ் சத்தை
எம்மக்கட் கியற்றி னாரே!

இடக்குகள் இயற்றி எம்மை
இடுக்கணுள்* தள்ளி நாளும்
அடக்குமு றையாம் தீயில்
அமுக்கினார்; இறப்பின் நீழல்
படுத்துறங் கிடுமெம் மையிப்
பட்டினி என்ன செய்யும்?
விடுதலைப் பசியுற் றார்க்கு
வேறொரு பசியுண் டாமோ?

அடுகளக் கருவி ஏந்தி
அமைதிசை கையுங் காட்டும்
கெடுமனச் சிங்க ளர்காள்!
கிளர்ந்தெழும் அமைதி யோடே
அடுகளப் போருக் கும்நாம்
அணியமே;* இரண்டில் எத்தை
நெடுமனத் தேற்கின் றாயோ
நேரதை நாமேற் கின்றோம்!

எழுந்தயிப் போராட் டத்தில்
எம்பக்க நயன்மை தன்னைத்
தொழுதுநாம் பார்க்குச் சொல்லத்
தோதான வாய்ப்பை நல்கி
அழுத்தமும் மேலாண் மையும்
அடக்குமுறை கட்டுப் பாடும்
ஒழிந்தநற் பேச்சுக் கென்றால்
உரை;அணிய மாக உள்ளோம்!

போர்வெறி கொண்டோ மில்லை;
போய்இனப் பகையும் உள்ளோம்;*
பாரந்த சிங்க ளர்நம்
பகைவராய்க் கருத வில்லை;
நேரவர் நாட்டை நாங்கள்
நெஞ்சினில் ஒத்தேற் கின்றோம்;
நேரவர் பண்பாட் டைநாம்
நேசித்தோம்; இடறி யற்றோம்!

அங்கவர் வாழு தல்போல்
அழகுறும் ஈழ நாட்டில்
மங்கலம் பொங்க நாமும்
வாழவே விரும்பு கின்றோம்
இங்குதே சியயி னம்மாய்
எழுவதைப் பொருத்தி டாத
சிங்களர் ஒத்தி சைவைச்
செப்பும்நாள் அமைதி தோன்றும்!

தன்படை வலியால் எம்மின்
தாயக சிக்கல் தீர்க்க
உன்னினார்;* ஒல்லா* தென்னும்
உணர்விலார்; மேலும் மேலும்
வன்கவர் பாலெம் மண்ணை
வளைக்கவே விரும்பு கின்றார்
முன்பொரு பெரும்ப டைபோல்
முகமுடை படுவா ரன்றோ?

என்னுயிர் ஈழ மக்காள்!
இப்பெரும் செலவில்* நம்மை
நண்ணிடும் சோர்வு; நாளும்
நனிசுமை நமைய ழுத்தும்
தன்குறிக் கோளை உன்னித்
தகைவுடை உறுதி யோடு
நின்றிடின் நமையெ திர்க்க
நேரெதிர்ப் படுவார் இல்லை!

நெஞ்சினில் உறுதி பூண்டு
நேரெதிர்த் தடுக ளத்தில்
துஞ்சிய மறவர் வாழும்
தூயகல் லறையொ லிக்கும்
விஞ்சரும் விடுத லைப்பா
விளம்பிடும் உறுதி தன்னை
விஞ்சிய கருவி இல்லை
விரைந்துமனத் தேற்போ மாக!

அகரம் அமுதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக