ஞாயிறு, 17 அக்டோபர், 2010

மாவீரர்! -உரைப்பா! (1989)

இன்றிந்நாள் தமிழீழ எழுச்சிக்காய்க் களங்கண்ட
எழிலார் வீரர்
பொன்றியதை நினைவுறுத்தும் புகழ்க்குரிய பொன்னாளாய்ப்
பொலியக் காண்பீர்
பொன்றுந்தன் மறவரினைப் போற்றுகின்ற மாமரபைப்
புவிமேல் நாமும்
பின்பற்றி இந்நாளைப் பெட்புமிகும் நன்னாளாய்ப்
பிறங்கச் செய்வோம்!

இன்றுவரை ஆயிரத்தை எட்டிவிட்டார் தம்முயிரை
ஈந்த வீரர்
என்பதனால் தனித்தனியே எழில்மறவர் நினைவுறுநாள்
எடுத்தல் நன்றோ?
அன்றுமுதன் முதலாய்த்தன் ஆருயிரைக் களப்போரில்
அளித்த சங்கர்
பொன்றியயிந் நாளினையே புகழ்மறவர் நாளாகப்
பொலியக் காண்போம்!

உயிரீகம் செய்தாருள் உயர்ந்தோர்யார்? தாழ்ந்தோர்யார்?
உரிமைப் போரில்
உயிரீகம் செய்தவரை ஒப்புரவாய்க் கண்டிடவும்
ஒருவர் செய்த
உயிரீகம் மேலதெனும் உரைதோன்றா வகையுறவும்
ஒருசார் பின்றி
உயரியயிந் நாளினையே உயிர்துறந்த மாவீரர்க்
கோர்ந்து கண்டோம்!

ஈரமிகு தமிழீழம் ஈன்றெடுக்கப் பிறந்திட்ட
சேய்கள் தம்முள்
வீரமிகு மாமறவர் விளைவதில்லை என்னுமுரை
விரிக்கும் வாய்கள்
சோரமிகப் பலமறவர் தோன்றிவிட்டார் தமிழீழம்
தோன்றும் காலம்
தூரமிலை எனப்பார்க்குச் சொல்லுமிந்த நன்னாளைத்
தொழுவோம் வாரீர்!

அகரம் அமுதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக