வியாழன், 21 அக்டோபர், 2010

மாவீரர்! -உரைப்பா! (1990)

தன்னுயிர் ஈந்தும் செந்நீர்
தனையீந்தும் ஈழம் காத்துப்
பின்னவர் பின்பற் றித்தம்
பெருமறம் நாட்டு தற்கு
மன்னிய நடுகல் ஆன
மறவரைப் போற்ற நாமும்
உன்னிய நாளே இந்த
உயர்திரு நாளாங் கண்டீர்!

இறுதியை அடைந்த வீரர்
இழப்(பு)அவர் பின்ன வர்க்கே
உறுதியை ஈந்தும் வீர
உணர்வினை ஈந்தும் நெஞ்சில்
கருதிய செயல்மு டிக்கும்
கடமையை ஈந்தும் தங்கள்
இறுதியைப் பொருளு டைத்தாய்
இயற்றி‘நல் லுயிரன்’ ஆனார்!

தன்னின விடுத லைக்காய்த்
தன்னில மீட்புக் கும்மாய்
இன்னுயிர் ஈயும் வீரர்
இணையிலாக் கொள்கை யாளர்!
தன்னலம் பேணா வாழ்வும்
தமருக்காய் வாழாப் பெட்பும்
மன்னிய அவர்தஞ் சீர்க்கு
மற்றொன்றும் ஈடே இல்லை!

விடுதலை வீரர் என்றும்
விளிவதில்; நிகழும் சாவைச்
சடுதியில் சரித்தி ரம்மாய்ச்
சமைக்கிறார்; கொள்கைத் தீயாய்
அடுத்தமா மறவர் நெஞ்சில்
அமர்கிறார்; இனத்தின் மேன்மை
எடுத்துரை சின்ன மாக
எழுகிறார்; புகழ்பே றுற்றார்!

ஓரியர் படைத னையும்
உலகினிற் பெரும்ப டையாம்
ஆரியர் படைத னையும்
அடுகளத் தெதிர்த்து நின்று
வேரிறச் செய்வ கையால்
வியத்தகு வரலா றானோம்!
சீரிய எம்தி றத்தைத்
திசையெலாம் எட்டச் செய்தோம்!

சொல்லரும் இன்னல் கண்டும்
துவண்டிடா மனத்திட் பத்தால்
மெல்லரும் வலிகள் தாங்கி
விடுதலை ஒன்றே கோளாய்
வெல்லரும் படையை வெல்ல
விரைவதும் வென்று வீழ்ந்தும்
கல்லுரு வான வீரர்
கவின்சொலச் சொற்கள் உண்டோ?

என்னுயிர்த் தோழர் எம்மின்
எழிற்றள பதிகள் நெஞ்சில்
மன்னுபோ ராளி கள்தாம்
மறப்போரில் மடிதல் கண்டே
என்னுயிர் சோரும்; தம்மின்
இன்னுயிர் ஈக ரைநாம்
உன்னவே சோரும் நெஞ்சம்
உறுதியோ டுரனும் வைகும்!

உயிரினும் மேல தாய
உயிர்த்தயிந் நாட்டை யெண்ணி
செயிர்க்களம் சென்று மாண்ட
செயல்மல்லர் தம்மை ஈன்றோர்
அயிர்த்திடா தடைவீர் பெட்பை!
அவர்மரித் தாரில் லைநம்
உயர்சரித் திரமே யானார்!
உயிர்த்தெழும் விதையும் ஆனார்!

அடிமைவி ளங்கு டைத்தே
அடல்தனித் தமிழர் காணும்
மிடிமைவி ரட்டி வாழ
விடுதலை ஒன்றே ஆறாம்!
விடிதலை வேண்டும் போரில்
விளிதலும் இயற்கை யன்றோ?
மடிந்தநம் வீரர் வீழ்ந்து
மணிவிதை ஆனார் வாழ்க!

நல்லுயிரன் –சிரஞ்சீவி; மல்லர் –வீரர்; பெட்பு –பெருமை; மிடிமை –துன்பம்.

அகரம் அமுதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக