தொடரும் துயரைத் தொலைத்துத் தமிழர்
கடல்சூழ்ந்த நாட்டில் களிக்க -அடல்தனிக்
கோனே! மறவா! கொலைவாள் எடுத்து
வானே புறங்காட்ட வா! (141)
வாவந்தெம் மக்கள் வருந்தும் நிலைமாற்றித்
தாவன்று தெவ்வர் தலைகொய்து -நீவென்று
பாயும் புலிப்படையைப் பார்வியக்க நீநாட்டி
சீயம் தலைதாழச் செய்! (142)
செய்யுள்அச் சீயரின் செந்நீரைப் பாய்ச்சிநாம்
செய்வோம் விளைச்சலைச் சீர்மையுடன் -மெய்யாய்
தமிழர்க் குனைவிட்டால் தக்கதுணை இல்லை
அமிழ்கின்றார் துன்பத்தில் ஆங்கு! (143)
ஆங்குத் தவிக்கும் அருந்தமிழர்க்(கு) ஆறுதலாய்த்
தாங்கிப் பிடிக்க தலைவா!வா! –ஈங்குன்
நெடுந்தோள் நிமிர்ந்தி நெடுவான் வியக்க
அடுவெங் களத்தை அடை! (144)
அடையார்*க் கழிவை அளிக்கும் உரஞ்சேர்
படையாள் பவனே! பரிதுன்* –குடைக்கீழ்
எமையாள் பவனே! எதிரிக் கழிவை
உமையாள் மகனே! உணர்த்து! (145)
உணராப் பதர்கட்(கு) உணர்த்தல் தகுமோ?
துணவாய்* அவரைத் துணிப்பாய்* –தினவால்
திமிருமத் தீயோரைத் தீய்த்துத் தமிழர்
நிமிருமந் நாளை நினை! (146)
நின்போல் எமைக்காக்க நேரொருவன் இல்லையெமை
முன்போல் நலங்காக்க முன்னேவா! –பின்போய்ப்
பகைவர் அழிய படைதோற்று விப்பாய்;
இகல்*நீக்கும் நீயெம் இறை! (147)
இகல் –பகைவர்.
இறைஞ்சி* வருவோர்க்(கு) இனிதருளும் வேந்தே!
நிறைகெட்ட காடையரை நீக்கி –அறைமுரசுக்
கையா! எனையாள் அரசே! எழிற்கதிர்க்
கையா! கடைக்கண்ணைக் காட்டு! (148)
காட்டிக் கொடுத்த கயவன் அருளன்*
நீட்டி உறங்கிடல் ஞாயமோ? –நாட்டிலவன்
வீணாய் உலவுவதும் வேண்டாமே! கொன்றொழித்துக்
காணாப் பிணமாக்கல் காப்பு! (149)
காப்பிட்டுக் காடையரைக் காலன் இடனனுப்பக்
கூப்பிட்டோம் எங்கள் குறைதீர்ப்பாய் –கூப்பிட்டோர்க்(கு)
ஏவலாள் ஆனவனே! எல்லாளா! தாள்பணிந்தோம்
காவலாய் வந்தெம்மைக் கா! (150)
அடையார் –பகைவர்; பரிது –பெரிது; துணவு –விரைவு; துணித்தல் –வெட்டுதல்; இறைஞ்சுதல் –வணங்குதல்; அருளன் –கருணா.
அகரம் அமுதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக