திங்கள், 3 மே, 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (9)நலிந்த இனத்தின் நயன்மைதனைப் பேண
வலிந்தபோர் செய்வோர் வருந்த -களத்தில்
சுழன்றாடும் தோளா சுமைதாங்கி ஆனாய்
எழுமீழம் உன்னால் இனிது! (81)

இனிப்போர் அதுவே எமைக்காக்கும் என்று
நனிநுண் அறிவால் நவின்றாய் -தினித்தார்
நமையந் நிலைக்கந்த நஞ்சின் கொடியார்
நிமைப்போதும் சூழ்ச்சிவழி நின்று! (82)

நின்போலே காடையரை நேரெதிர்க்கக் கற்றவர்யார்?
முன்னாள் தமிழ்மறத்தை முன்னெடுக்க -உன்போலே
கோனொருவன் உண்டோ குவலயத்தே? உன்றனையே
நானிலமும் வாழ்த்தும் நனி! (83)

நன்கெம்மைக் காத்து நலஞ்சேர்க்கும் நாயகனே
பொன்கொம்பில் பூத்த புதுமலரே! -என்கண்ணில்
வந்துலவும் அம்கனவே! மள்ளன் இவனென்றே
இந்தவுல கேற்றுமுனை யே! (84)

ஏம்பல் எமக்களிக்கும் எல்லாளா! மன்றல்சூழ்
ஆம்பல் மலரொத்த அம்நகையோய்! -சாம்பல்
பொடிபூ சிறைவனெனப் போய்நஞ்சை ஏற்ற
படையுன் படையென்னும் பார்! (85)

பாரில் புலிப்படைபோல் பாராளும் மாப்படையை
யாரிங்கே நாட்டியவர் யானறியேன் -சீரிளங்கும்
ஆளர் படையும் அணங்கையர் தம்படையும்
ஆளப் படைத்தநீ ஆண்! (86)

ஆண்பெண் இருபாலர் ஆங்குன் படைப்பிரிவில்
மாண்புடனே சேர்ந்தீழ மண்காத்தார் -யாண்டும்
பழகும் வகையும் பழுதில்லாக் கற்பும்
அழகுப் படையின் அணி! (87)

அணிந்தாயே கற்பதனை ஆன்ற அணியாய்
பணிந்தோமே உன்தாள்கள் பாராய்! -இணைந்தோமே
உன்னணியில் இன்றமிழர் ஓர்ந்தாங் கெமைக்காத்த
பின்னணியில் நீகாண் பெரிது! (88)

பெரிதோ இமயம்? பெரியோயுன் போலே
அரிதோ அமிழ்தும்? அழகுக் -கரிகாலா!
நீழற் குடையே! நெடுந்தோளா! நீயன்றோ
ஈழத்தை ஆளும் அரசு! (89)

அரிய பிறப்பே! அரசுக் கரசே!
கரிய நிறக்காலா! கற்பிற் -பெரியவளாம்
கண்ணகியின் ஆண்பாலாய்க் கண்முன்னே நிற்பவனே!
நண்ணுநா! நீவாழ்க நன்கு! (90)

அகரம் அமுதா

2 கருத்துகள்:

  1. திரு.அமுதா. வியப்பாக இருக்கிறது. மிக அழகான சொல்லாளுமை, நிறைய விடய ஞானம், அழகாக வெண்பா வில் ஈற்றெடுப்பு மிக அருமை. இதனுடன் வெண்பாவலையில் தொய்வில்லாமல் கற்றும் தருகிறீர். உங்கள் திறமைக்கும் , பொறுமைக்கும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியும்.

    பதிலளிநீக்கு