வெள்ளி, 28 மே, 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (11)


உவக்காண் உடலின் உறுப்பிழந்தோர் ஓலம்;
இவக்காண் இறந்தோரை என்றே –உவப்பான்
உலங்கூர்தி ஓட்டுநனும் உள்ளிருக்கும் மற்றை
விலங்கும்ஆம் என்னும் விரைந்து! (101)

விரட்டிவரும் வான்படையை வீழ்த்த விரைந்துன்
முரட்டுப் படையர் முனைந்தார் –திரட்டி
அடித்ததில் ‘‘நாயக’’ வான்தளம் வீழும்
வெடித்(து)உலங்(கு) ஊர்திபல வெந்து! (102)

நாயக –கட்டுநாயக வான்படைத்தளம்.

வெந்து தணிந்ததில் விம்மினர்; வீங்கினர்;
நொந்து நொடிந்தனர் நோக்கிலார்; –வந்து
அமைதி உடன்படிக்கை ‘நார்வே’ அமைக்க
தமைநொந்து கொண்டனரே தாழ்ந்து! (103)

தாழப் பிறந்தோர் தரைமீதில் பல்லாண்டு
வாழப் பிறந்தயெமை வாட்டினார் –பாழும்
சிறுமதியர்க்(கு) இந்தச் சிறுசெயலை நீயே
முரசறைந்து சுட்டினாய் முன்பு! (104)

முன்னே அமைதி முரசினொலி ஓயும்முன்
பின்னே படைநடத்திப் பாய்ந்திடுவார் –என்னே
அமைதி குலைத்தாயென்(று) ஆங்கவரைக் கேட்க
உமையன்றி வேறிலரே ஓர்ந்து! (105)

ஓர்ந்து பிரித்தார்நம் ஒப்பில் படையணியை;
சேர்ந்தான் ‘அருளன்*’அச் சீயருடன் –நேர்ந்த
பழியறியும் பண்பில்லான் பாழும் வழிசென்(று)
இழிந்தோர்க்(கு) உதவினனே இங்கு! (106)

அருளன் –கருணா; சீயர் –சிங்கத்திடமிருந்து பிறந்தவராகச் சொல்லிக் கொள்கின்ற சிங்களர்.

இங்குன் படைப்பிரிவை ஏற்று நடத்தியவன்
அங்குளவு சொல்லி அடிவீழ்ந்தான் –எங்கும்
இவன்போல் இரண்டகனை இவ்வுலகம் காணா;
இவன்போல் இவனே எனும்! (107)

எடுத்தகுறிக் கோள்வழி ஏகா(து) அதனைக்
கெடுத்த அருளனில் கேடால் –விடுதலைப்போர்
நட்டாற்றில் தத்தளிக்கும் நாவாயைப் போலாச்சே!
எட்டாக் கனியாச்சே ஏன்? (108)

ஏற்றிப் பிடித்தார் இனப்பகையை; இந்தநிலை
மாற்றத் துடித்த மறவனுனைத் –தூற்றித்
தடைபோடும் மண்ணுலகம்; தாங்கியதை வென்று
நடைபோடும் நம்மியக்கம் நன்கு! (109)

நன்முறையில் வாழாத நாடற்ற சிங்களரைத்
தன்வலியால் வெல்லும் தகையாளா! -உன்னால்
நிலைத்திட்ட இன்ப நிறைவாலெந் நாளும்
நலங்கண்டோம் இல்லை நலிவு! (110)

அகரம் அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக