-செய்தி- 2/1/2009
ஈழமா மங்கை எழிலாள்மேற் காதலுற்ற
வேழமே! விட்டில் வெரும்படை -சூழமாத்
தீச்சுடர் நாணுமா? செய்யும் புதுக்கவியால்
வீச்சுடைப் பாமரபு வீழுமா? -மாச்சுதை*
பிள்ளைச் சிறுகைக்குப் பேர்ந்திடுமோ? பேச்செனுங்
கிள்ளையது பூசை*வரக் கீச்செனுமே! -ஒள்ளொளி*
மிக்கதோர் சூரியனை வீழ்த்திட நக்கியுண்ணுங்
குக்கலால்* ஆமென்றாற் கொள்வரோ? -பக்கலிற்*
காணுங் கனவாற் கதையாமோ? திண்ணைவாழ்
வீணர் உரையால் விளைவதென்ன? -பேணும்
பொருவிற்* றமிழ்மேற் பொருதும் வடவர்
திருவில் மொழியாய்ச் சிறியர் -பொருதிடினும்
வெற்றி உனதன்றி வீணர்க் கமையாதே!
சற்றும் எலிப்படைபார்த் தஞ்சுமா -புற்றரவு?
ஆற்றைத் தளைகொள்ள ஆகலாம் வீசுபுயற்
காற்றைத் தளைகொள்ளக் கற்றவர்யார்? -கூற்றிற்கே
நாட்குறித்தாற் கூடி நகையாரோ நானிலத்தார்?
தேட்கொடுக்கிற் கைவைக்கச் சேர்ந்தவர்யார்? -வாட்பிடியை
விட்டு நுனிவாள் விரும்பிப் பிடித்திடுவார்க்(கு)
எட்டுணையும்* வெற்றி எழுந்திடுமோ? -முட்ட
வழக்குடையான் நிற்ப வலியானைக் கூடும்
இழுக்குடையார் எங்கும் இருப்பர் -சழக்கடையாய்!*
நொச்சி*யது போய்விடினும் நோவில்லை முல்லை*யுண்டு
கச்சையது போயினுமென் கைகளுண்டே -அச்சமிலை
தெய்வம் இருக்குதெனத் தேர்ந்து வருங்காலம்
உய்யும் தமிழினமென் றோர்!
அருஞ்சொற் பொருள்:-சுதை -மின்னல்; பூசை -பூனை; ஒள்ளொளி -மிகுந்தஒளி; குக்கல் -நாய்; பக்கல் -பகல் என்பதன் நீட்டல் விகாரம்; பொருவில் -உவமையில்லாத; எட்டுணையும் -எள் துணையும் (புணர்ச்சியான் இயன்றது); சழக்கு -தளர்ச்சி; நொச்சி -கிளிநொச்சி; முல்லை -முல்லைத்தீவு .
அகரம்.அமுதா!
நண்பரே சொல்ல வார்த்தை இல்லை
பதிலளிநீக்குவரும் செய்திகளைக் கேட்க கேட்க
உள்ளம் உடைகிறது
ஆம் நண்பரே! ஆம். எனக்கும் உள்ளம் பதறுகிறது. யாதுசெய்ய பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பரே!
பதிலளிநீக்குi think the archive you wirte is very good, but i think it will be better if you can say more..hehe,love your blog,,,
பதிலளிநீக்குமிக்க நன்றிகள் நண்பரே!
பதிலளிநீக்கு