சனி, 13 நவம்பர், 2010

மாவீரர்! -உரைப்பா! (1993)

உரமிக்க போர்கள்செய் துடைத்தடிமைத் தளையகற்றி
உயிர்த்த நாட்டில்
பொருள்மிக்க விடுதலையைப் புரிந்தவரைப் போற்றுகிறோம்;
பூந்தாய் மண்ணின்
உரிமையெமக் குரியதென ஊருலகிற் குணர்த்தினரெம்
ஒப்பில் லாத
வரலாற்றுச் சிற்பிகளாம் மாவீரர் தம்நினைவால்
மலர்ந்த திந்நாள்!

அழுதுபுலம் பிடுதற்கோ அண்டிஅள றுறுதற்கோ
அல்ல இந்நாள்
எழிலுறபுத் துயிர்க்கும்நாள்; ஏற்புறுதி யால்தேச
எழுச்சி நாளாம்!
தழுவியதோர் உயர்ந்தகுறிக் கோளுக்காய்த் தன்னுயிரைத்
தந்தார் ஈகம்
தொழத்தகுமச் செயல்மறவர் தூயமறை வெளியதெனச்
சொல்வா ருண்டோ?

தீதறுநல் மாமறவர் ஈகமது விடுதலையின்
செப்ப ஒல்லா
ஆதனிக விருப்பத்தை அறைகிறது; வேட்கையுடன்
அன்னை மண்ணின்
காதலுறு விடுதலைக்காய்க் களங்கண்டே ஈகியராய்க்
கால மானார்
ஓதமுறும் ஈகைவிடு தலைவேள்வி தன்னிலெழும்
ஒளியு மாகும்!

நம்தாய்மண் தனிலுறங்கும் நல்வீரர் கல்லறைகள்
நன்கொ லிக்கும்
செம்மாந்த விடுதலையின் செம்பாடல் இங்கெமது
செருக்க ளத்தில்
அம்மாப்போ ராட்டத்தின் அரிதான இயங்குதிறன்
ஆக மாறி
எம்மாறா யிரமீகர் உறுதியுரி மையிவற்றால்
எழுந்த தன்றே!

நீண்டபெரும் போராட்டில் நேர்ந்தபல சிக்கல்கள்
நீளி டுக்கண்
யாண்டுமெமைத் தொடர்ந்தாலும் யாமெமது நிலைப்பாட்டில்
வழுவா நிற்போம்
ஈண்டெமது சிக்கல்கட் கோர்தீர்வாய் இறையாண்மை
மிக்க ஈழம்
வேண்டுமெனும் எம்முறுதி உலகிற்கும் பகைவர்க்கும்
விளங்கும் நன்றே!

தனியீழம் பெறமக்கள் தம்மாணை பெற்றபல
தமிழர் கட்சி,
‘இனிதீழம் தோற்றமுற எடுத்திடுவோம் கருவி’யென
இயம்பிச் சென்ற
நனிகுழுக்கள் இவையிரண்டும் இரண்டகமே இழைத்துளன;
நாமே ஏற்ற
தனியீழக் குறிக்கோளைத் தடம்பிறழா துறுதியுடன்
தாங்கி நின்றோம்!

தமிழீழக் குறிக்கோளைச் சார்வதிலே வெற்பனைய
தடைகள் உண்டு;
நமதுகுறிக் கோட்கெதிராய் நடக்கின்ற வலிகளையும்
நாம றிந்தோம்;
எமைச்சூழ்ந்த மண்டலத்து வல்லரசின் நுண்ணுத்தி
யாலே தோன்றும்
சுமைமிக்க குறுக்கீட்டைத் துணிந்தெதிர்த்தோம்; விளிவினிலும்
சுணங்கா நின்றோம்!

அனைத்துலகின் கொள்கைக்குள் அடங்கியதே எமதுவிழை(வு)
அதுவு மன்றித்
துணையெனவே நயன்மையெங்கள் மருங்கிருக்க உறுதியுடன்
தொடர்ந்தோம் போரை
எனைத்துமொரு தன்னுரிமை தனிநாடு பெறுந்தகுதி
எமக்கு முண்டாம்
அணைந்துறுதிப் பற்றதனை அகமேற்றால் விடுதலையை
அடைய ஒல்லும்!

மாந்தநெறி எனுமச்சில் மண்ணுலகம் சுழலவில்லை;
மக்கள் மேன்மை
சார்ந்தஅற நெறி,உரிமை பேணவில்லை; தம்நயன்மை
சாற்றி முன்வைத்
தேந்திடுவர்; பொருள்,வணிகம் இவையுலகின் ஒழுங்குறவை
இயற்ற வாய்மை
சார்ந்தஎங்கள் நன்னெறியைத் தரணியுடன் பட்டேற்கத்
தயங்கு மன்றே!

எமக்கிணக்க மானதொரு நற்சூழல் நானிலத்தில்
எழலாம்; அன்று
நமதினிய நயன்*மிக்க குறிக்கோளை நானிலமும்
நத்தக் கூடும்;
நமதுபெரும் போராட்டம் உண்மையிலிவ் உலகத்தை
நம்பி இல்லை;
எமதுவெற்றி எம்முறுதி முயற்சிவலி இவற்றைச்சார்ந்
திருக்கக் காண்பீர்!

அறநெறிசார் நயன்மையொன்றே வெற்றிதரா; வலிமைமிகும்
அருங்கோட் பாட்டில்
உறுதிமிக உடையவராய் உயிர்குடிக்கும் போர்த்தொழிலில்
உறப்பு* மிக்க
திறமைமிகப் பெற்றவராய்த் திகழ்ந்திடவும் வேண்டும்நம்
தேசம் தன்னின்
முறைமையுறும் ஒத்தேற்புக் காய்நாமே போராடல்
முறைமை ஆகும்!

சிங்களரின் இனப்பகைமை அரசுநயன் மைவழியில்
சிக்க லைத்தீர்த்
திங்கணுறும்* எனவெதிர்பார்த் திடவொல்லா; வன்முறையின்
திசையில் சென்றே
இங்குள்ள சிக்கலினை எதிர்கொள்ளப் பார்க்கின்ற
திரக்க மற்ற
தங்க(ள்)படை அணுகுமுறை யால்நாற்பான் ஆண்டாயெம்
சிக்கல் நீளும்!

ஆதனிகம் –ஆன்மீகம்; ஓதம் –பெருமை;நுண்ணுத்தி –தந்திரம்; சுணங்காது –சோராது; விழைவு –விருப்பம்; எனைத்தும் –முழுதும்; நயன் –நீதி; உறப்பு –செறிவு; இங்கண் –இவ்விடம்.

அகரம் அமுதன்

2 கருத்துகள்:

 1. "மாற்றமிலா அமைதிவழி தீர்வுதனை வைக்குமெனில்
  மருங்கு நிற்போம்;
  ஏற்றமுறு தன்னாட்சிக் கட்டமைப்பை முன்வைக்கின்
  ஏற்றுக் கொள்வோம்".......

  எல்லாம் பழங்கதையாய் வெறுங்கனவாய் ஆகிப் போசசே.

  பதிலளிநீக்கு
 2. சிவகுமாரன் அவர்களுக்கு! இப்பா தமிழினத் தலைவன் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் 1993 -ஆம் ஆண்டு மாவீரர் நாளன்று ஆற்றப்பட்ட உரையின் பாவடிவம்.

  ஆக அது பழங்கதையாகத்தானே இருக்கும்!?

  பதிலளிநீக்கு