சனி, 18 செப்டம்பர், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (14)


சிரித்த பிழைப்புப் பிழைப்போர்* சிதற
விரையும் கரும்புலியர் வீச்சில் –எரியும்
அனுரா தபுரம்* அழியத் துடித்தார்
இனியாது செய்குவம் என்று! (131)

என்று முடியுமோ ஈழத் தவர்துயர்
அன்று பிறக்கும் அமைதியிதை –நன்குணராச்
சிங்களர்க்கே நானிலமும் சென்றுதவ போர்க்களத்தில்
எங்களவர்க்(கு) உற்றதுணை யார்? (132)

யாதோர் துணையுமின்றி ஆங்குநீ போர்செய்யத்
தீதோர் வடிவான சிங்களர் –சூதோர்ந்(து)
உனைக்கொன்ற தாய்ச்சொல்லி ஊருக்(கு) உரைத்தார்
நினைக்கப் பொறுக்குதில்லை நெஞ்சு! (133)

நெஞ்சில் வலியோடும் நீர்வழியும் கண்ணோடும்
எஞ்சிய எம்மவரை ஈழத்தே –கஞ்சியின்றி
முள்வேலி யுள்ளடைத்து மூடர் கொலைபுரிந்தார்
அல்லும் பகலோடும் அங்கு! (134)

அங்கெமது மக்கள் அடையும் துயர்சொன்னால்
பொங்கும் விழிநீர் புனலாறாய் -சிங்களர்
போலப்போர்க் குற்றம் புரிந்தார் எவருமில்லை
காலக் கணக்கேட்டில் காண்! (135)

காணாக் கொடுமைபல கண்முன்னே கண்டுமதைக்
காணா துலகம் கடப்பதனால் -நாணாத
நாயனைய காடையர்கள் நாளும் நடத்துகிறார்
தீய செயல்பலவுந் தேர்ந்து! (136)

தேரலரால் எம்மவர் செத்து மடிகின்றார்
நேரிழையார் கற்பிழந்து நிற்கின்றார் -சீரிழந்த
சிங்களப் பேடிகளால் செந்தமிழச் சேய்களும்
தங்கள் உயிர்விட்டார் தாழ்ந்து! (137)

தாழம் இழந்து தவிக்கும் தமிழரைச்
சூழும் இடுக்கண் சொலவொணுமோ? -ஆழம்
தெரியாமல் கால்விட்ட சிங்களர்தஞ் சென்னி
அரியா தகல்வதோ அன்று! (138)

அன்மைச் செயல்செய் தகங்குளிரும் தெவ்வரால்
புன்மை அடைந்து புழுங்குகிறார் -இன்னமும்
எத்தனை தீத்துயர் எம்மவர் காண்பதோ?
புத்தனே கொஞ்சம் புகல்! (139)

புகலிகளாய் ஓரியர் போந்தவந் நாள்தொட்டு
அகதிகளாய் எந்தமிழர் ஆங்கே -நுகர்துயரம்
கொஞ்சமோ? இந்தக் கொடுமைகளைக் காண்பார்கண்
துஞ்சுமோ கீழிமை தொட்டு! (140)

சிரித்த பிழைப்புப் பிழைப்போர் –எள்ளத்தக்க வாழ்க்கை வாழ்கின்ற சிங்களர்; அனுராத புரம் –அனுராதபுரம் வான்படைத் தளத்தைக் குறிக்கிறது.


அகரம் அமுதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக