செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

ஓட்டுனர்க்கு… !

நடையர்க்(கு) அச்சம் நல்கா(து) ஊர்தியைத்
தடையின்றிச் செலுத்தல் தலை!

ஒலியெழுப்பி மக்களுக்(கு) உறுகண் இழைக்காமல்
வழியளித்துச் செல்லுதல் மாண்பு!

முந்த முயல்வாரை முந்தாது வழிவிட்டுப்
பிந்திச் செல்வதைப் பேண்!

எதிரில் வருமூர்திக்(கு) இடமளித்(து) உன்வழியில்
மிதவிரைவிற் செல்வதே மேல்!

மிகுவிரைவு கூட்டுதல் மிகப்பெரும் இடருக்கு
வகுக்கும் வழியொன்றை வந்து!

புகைத்த படியே போயூர்தி ஓட்டாதே!
நிகழும் நேர்ச்சியை நினை!

மதுவின் மயக்கத்தில் மகிழுந்(து) ஓட்டுதல்
எதிர்கொண்(டு) எமனழைத்தற்(கு) இணை!

சாலை சட்டத்தை சார்த்து நடப்பதே
கோளென நெஞ்சில் குறி!

ஊர்தியை ஓட்டுகையில் ஒருவரொடும் பேசாதே!
நேர்ச்சிக்கு வழிகோளாய் நீ!

எரிபொருளைச் சேமித்தல் ஏலும் மிதவிரைவைச்
சரியாய்க் கையாளுங் கால்!

அகரம் அமுதா

4 கருத்துகள்: