புதன், 24 பிப்ரவரி, 2010

இவனா தமிழன்?

முத்தமிழில் அறிஞனென்பான்; தமிழுலகத் தலைவனென்பான்;
..........முறையாய் ஒன்றும்
அத்தமிழுக் கியன்றுசெய்யான்; வாய்ப்பேச்சால் வென்றிடுவான்;
.........அதுவு மன்றி
முத்தமிழும் தன்னாலே முகிழுதென மேடைதொறும்
.........முழங்கித் தீர்ப்பான்;
முத்தமிழர் காதோடு முகிழ்மலரைச் சூடுவதை
.........முனைப்பாய்க் கொள்வான்!

ஆங்கிலமே கல்விமோழி ஆகிவிட அதையெதிற்கா
.........அறிவுப் பஞ்சை
ஆங்கிலத்தை ஆளவிட்டு தமிழ்நாட்டை விட்டுதமிழ்
.........அகலச் செய்தான்!
பூங்குளத்துத் தாமரைபோற் பூத்ததமிழ் போயொழியப்
.........புரிந்தான் எல்லாம்
ஈங்குலகில் தாய்மொழிக்கே இவன்போலும் இரண்டகமும்
.........இழைத்தா ருண்டோ?

தனக்குற்ற எதிரிகளைத் தகையில்லாச் சொற்களினால்
.........சாடும் கீழோன்
தனக்கென்று தொலைக்காட்சி தன்பெயரில் நடத்திடுவான்
.........தகையில் லாதான்
தனக்குப்பின் தன்மகனே நாடாள வேண்டுமெனத்
.........தவிக்கும் நெஞ்சன்
தனக்குப்பெண் ஆனவளை தில்லியிலே ஆளவிட்டுத்
.........தாங்கி நிற்பான்!

இத்தாலிப் பேய்தேடி இரண்டகனாம் இவன்செல்வான்
.........இணைதாள் வீழ்வான்
செத்தாலும் இந்திநமக் கெதிரியென்பான் தன்மக்கள்
.........சென்று கற்க
ஒத்தாசை செய்திடுவான் ஈழத்தில் எந்தமிழர்
.........உறுக ணுற்றுச்
செத்தாலும் சென்றுதடுத் திடமுனையான் தன்னலத்தான்
.........திருவில் லாதான்!

அகரம் அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக