புதன், 10 பிப்ரவரி, 2010

ஒருவர்க் குமிலை துணிவு!

தொன்னைச் செயலைத் தொன்று தொட்டுச்
சூழ்ந்து புரியும் சீயர்
தன்னை யொறுத்துத் தமிழரைக் காத்த
தலைவா! எழிற்கரி காலா!
உன்னை யெதிர்க்கு முரனில் லாதார்
உலகை யுறுதுணைக் கழைத்துச்
சின்ன செயலைச் செய்து முடித்தார்
சிதைந்ததே ஈழ கனவு!

செல்வதெவ் வழியெனத் தேராச் சிங்களர்
சென்றுமுள் வேலியு ளடைத்துக்
கொல்வதெவ் வழியெனக் கூடியா ராய்ந்து
குலைக்கிறா ரீழரை யொறுத்து!
இல்வழக் கோடு மிருட்சிறை யோடும்
எஞ்சியோ ரழிவது கண்டும்
ஒல்வது செய்யவு முதவவு முலகில்
ஒருவர்க் குமிலை துணிவு!

==== ===== ==== ==== ==== ==== ==== ==== ====

தொன்னைச் செயல் –ஈனச்செயல்; ஒல்வது –இயல்வது.

==== ===== ==== ==== ==== ==== ==== ==== ====


அகரம் அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக