சனி, 22 ஆகஸ்ட், 2009

முருகடியான் அடியான் சொன்னேன்!

வளமான பொருளைத் தேடி
..வழங்குசொற் சிலம்ப மாடி
அளவான தமிழை நாடி
..அழுதகவி என்றும் பாடிக்
குளமேவு குமுதம் போன்ற
..கோலமிகு புகழைச் சேர்த்தும்
உளமேவும் தமிழால் வாழும்
..முருகடியான் பெருமை சொல்வேன்!

நேர்த்தியாய்க் கவிதை தீட்டி
..நெஞ்சத்தை ஆளும் பாட்டன்
கீர்த்திமிகு கவியால் கம்பன்
..கிளர்த்தபுகழ் பாடும் பூட்டன்
வார்த்தகவி வயலில் நன்றாய்
..வண்ணப்பா வார்க்கும் தோட்டன்
ஈர்க்குமிடை முலையர் பாடா(து)
..இறைவனிசை பாடும் ஏட்டன்

பூவான தமிழைக் கொய்து
..புத்துவமை நாரில் நெய்து
நாவாறப் பாடும் கிள்ளை
..ஞாலத்தில் இவர்போல் இல்லை
தேவாரத் தமிழை இன்று
..செய்புலவர் சிலரே யுண்டு
ஆவாரே அவருள் என்றன்
..ஆசானே முதன்மை என்று!

பணிஓய்வு கொள்ளு கின்ற
..பருவமதை அடைந்த போதும்
பிணிஓய்வு கொள்ளத் தோன்றும்
..பேருறுதி பெற்ற நெஞ்சன்
நனிதோயும் தமிழே மூச்சாய்
..நாற்றிசையும் அதுவே பேச்சாய்த்
தனித்தாய்ந்த தமிழில் பாடத்
..தணியாத யாப்பின் தஞ்சன்!

ஒப்பில்லா என்னா சான்கை
..உவந்திரு எழுது கோலை
அப்பெரும் பிரம்மன் கேட்டே
..அடம்பிடிப் தழுது தீர்ப்பான்
முப்போகம் விளைச்சல் காணும்
..முந்நாடு நந்தம் நாடு
எப்போதும் விளைச்சல் காணும்
..என்னாசான் கைப்பொன் னேடு!

பஞ்சினால் ஆன நெஞ்சம்
..பார்வையோ கணினி யொக்கும்
அஞ்சிடா ஆண்மைத் தோற்றம்
..அடுத்தவர்க் கீயும் கைகள்
நெஞ்சுநேர் செல்லும் கால்கள்
..நீசரை ஒடுக்கும் தோள்கள்
மஞ்சுதான் மேனி வண்ணம்
..மாண்புறும் இலர்நல் லெண்ணம்!

மருவிடும் தமிழைக் காக்கும்
..மாண்பதே மாண்பா மென்றே
செருப்புகுந் தாடும் வாளாய்
..சீற்றத்தோ டெழுந்து பொங்கி
அருவியாய்ப் பொழிவார் தம்மை
..அல்லகவி என்பார் யாக்கை
குருதியால் நிறைந்த தாமோ?
..குக்கல்வாய் உமிழ்நீ ரன்றோ?

அன்பினால் அடிக்கக் கூட
..ஆகுமாம் ஆனால் கொஞ்சம்
வம்பினால் அணைக்கக் கூட
..வகைபடாப் பண்பு கொண்ட
நேஞ்சனாம் என்றன் ஆசான்
..நில்வழி நானும் நிற்பேன்
வஞ்சனைப் பேய்கள் என்னை
..வளைப்பினும் சூழ்ச்சிக் கஞ்சேன்!

திமிங்கிலம் என்னா சான்போல்
..தீந்தமிழில் நஞ்சாய் சேரும்
தமிங்கிலம் எதிர்த்து நிற்பேன்
..தமிழில்தான் கவிப டைப்பேன்
அமிழ்தமிழ் தென்றே ஓத
..அமிழ்திலும் தமிழே உண்டாம்
உமிழ்பிற மொழிக்க லப்பை
..முருகடியான் அடியான் சொன்னேன்!

அகரம்.அமுதா

8 கருத்துகள்:

 1. அக்கா அமுதா. முருகப்பெருமானுக்கு இப்படி ஒரு மட்டமான கவிதை எழுத எப்படி மனம் வந்தது

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. //////jaisankar jaganathan சொன்னது…
  அக்கா அமுதா. முருகப்பெருமானுக்கு இப்படி ஒரு மட்டமான கவிதை எழுத எப்படி மனம் வந்தது/////

  வணக்கம் நண்பரே!! நான் எழுதியது முருகப்பெருமானுக்கில்லை. எனதாசான் முருகடியானுக்கு. பாடலை நன்றாகப் படிக்க வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. திகழவர்களுக்கு வணக்கம். தங்கள் இம்மடல் என் மின்மடலுக்கு வந்துள்ளதே! ஒருவேளை நான்ஆன்லைனில் இருக்கும்போது அனுப்பியிருப்பீர்கள். சிக்னல் வீக்காக இருக்கும் போது மின்மடல் வந்துசேரத் தடையேற்படுகிறது.

  எந்த நூலகத்தில் வாலியில் அப்பொத்தகத்தைப் பார்த்தீர்கள்? நூலின் பெயரென்ன?

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. செய்திகளுக்கு மிக்க நன்றிகள் நண்பரே! ஓய்வுகிடைக்கும் போது நூலகம் சென்று கற்க முயல்கிறேன். நன்றிகள்.

  பதிலளிநீக்கு