திங்கள், 17 ஆகஸ்ட், 2009

ஏற்பீர்பாத் தென்றலா ரே!

சத்துடனே வார்த்திட்ட சங்கமமாம் பாவியத்தைப்
பொத்தகமாய்க் கோர்த்துப் புழங்கவிட்டீர் -பித்துடனே

மொய்த்ததனை மோகித்து மும்முரமாய் வாசித்து
மெய்த்தமிழை நான்கண்டேன் மேன்மையெலாம் -மொய்த்தநற்

கற்பனையைக் கண்டேன் கவின்நடையும் தான்கண்டேன்
விற்றொடுத்த அம்பாய் விரைந்துவரும் -சொற்கண்டேன்

நாணமிலார் வாய்பாட்டால் நற்றமிழுக் கேற்படும்
ஊனத்தைப் போக்கும் உரம்கண்டேன் -தேனமுதம்

கொட்டும் அருவியன்றோ கோலக் கவியுன்றன்
பட்டுக் கவியெலாம் பார்த்தறிந்(து) -அட்டியின்றிப்

பக்குவமாய்ச் சொல்கின்றேன் காக்கைகளின் மத்தியிலே
குக்கூ வெனுக்குயில்நீர் குக்களிடை -நற்பிடிநீர்

சேற்றிலொரு செங்கழுநீர் தெண்ணீரில் தேன்குளிநீர்
ஏற்பீர்பாத் தென்றலா ரே!

சங்கமம் -பாத்தென்றல் முருகடியான் வெளியிட்ட நூல்களுள் ஒன்று.

அகரம் அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக