வியாழன், 25 செப்டம்பர், 2025

தேனிலவு மீன்பிடிப்போம் தேர்ந்து!

தேனிலவு மீன்பிடிப்போம் தேர்ந்து!
ஆத்துமீன் சாப்பிட்டு
அலுத்திருச்சு; வாடுதடா
மாத்துமீன் கேட்டு
மனந்தவிச்சு; – பூத்திருக்கும்
விண்மீனைக் கொண்டு
விருந்து சமைப்போமா?
எண்ணமுன தென்ன?
இயம்பு! 01
துக்கடா மீன்களைத்
தூக்காமல் போகவிட்டுக்
கொக்குறு மீன்களையே
கொத்துதல்போல், – அக்கடான்னு
வானில் உலாத்துகிற
வண்ணவண்ண மீன்விடுத்துத்
தேனிலவு மீன்பிடிப்போம்
தேர்ந்து! 02
மேகம் இடைபுகுந்து
வெண்ணிலவைக் காப்பாத்த
வேகம் எடுத்தால்
விலாவையொடி; – போகவிட்டுப்
பின்னால் நிலாக்குத்தும்
பேச்சுக் கிடமில்லை
சொன்னால்கேள் நண்பா!என்
சொல்! 03
பத்தடி தூரத்தில்
பால்நிலா வந்தஉடன்
குத்தி இழுடா
குடலுருவி; – மெத்தனமாய்
விட்டுவிட்டால் அப்புறம்
வீசிப் பயனில்லை;
சட்டெனக் கம்பெடுத்துச்
சாத்து! 04
புலிக்குத்தி பூதத்தைக்
குத்திப் பிறகம்
புலிக்குத்த வேணுமா
போடா! – நலிச்சுட்டி
நல்லிரவில் ஆளனில்லா
நாயகியைத் தேடிப்போய்க்
கொல்லுவது தான்நிலாக்
கோடு! 05
போகும் விமானத்தைப்
போகவிடு; வான்பயணம்
நோகும் படிச்செய்யும்
நோக்குவிடு; – ஏகும்முன்
வட்ட மதியின்
வயிற்றைக் குறிபார்த்தே
எட்டின தூரம்
எறி! 06
நேற்றைக்கு நானடித்த
நெற்றித் தழும்புடனே
ஆற்றில் குளிக்கவரும்
அம்புலியைக் – காற்றடித்த
வட்டபலூன் மீதூசி
வாகாய் இறங்குதல்போல்
விட்டெறிந்து கைக்கோலால்
வீழ்த்து! 07
வானில் செயற்கைக்கோல்
வட்டம் அடிக்கிறது
வீணில் அதைக்குத்தி
வீழ்த்தாதே; – ஏணிவைத்து
ஏறிச் சரிசெய்ய
ஏகச் செலவாகும்
மீறிஅடிக் காமல்
விடு! 08
தூரம் இருந்தபடி
தோஷம் கொடுத்துமனப்
பாரம் அதிகரிக்கப்
பண்ணுகிற - காரணத்தால்
செவ்வாய்க் கிரகத்தின்
சீவன் முடிப்பதற்குத்
தவ்வி அதையடித்துத்
தா! 09
இடிமேலே ஈட்டி
இறக்கடா! உச்சி
இடியச்சம் காட்டும்
எனக்கே; – கொடிமின்னல்
அஞ்சுசாண் வேண்டும்
அரைஞாண் கயிற்றுக்குக்
கொஞ்சமாய்ப் பிய்த்துக்
கொடு! 10
போடடா பொத்தலைப்
பொத்து வழியட்டும்
காடெலாம் வாடுதே
காஞ்சிப்போய்; – நாடெலாம்
முற்றும் விளைச்சலை
முப்போகம் காணட்டும்
குற்றமில்லை மேகத்தைக்
குத்து! 11
அலைகடலைத் தாண்டிவந்து
ஆங்கிலேயன் ஆள,
குலைநடுக்கிக் கப்பம்நாம்
கட்ட, - நிலைகொண்டு
நின்ற துருவமீன்
நிச்சயக் காரணம்;
கொன்றழிப்பாய் அந்தக்
கொசுறு! 12

திரைத்தீ!

 

தீப்பிடித்த தண்ணீரே!
தீபமேற்றும் தண்ணீரே!
தீப்பொறியை எங்கே
திருடினாய்? – தீப்பரவித்
தண்ணீர்ப் பரப்பைத்
தணலால் மெழுகினால்
உண்ணீர்க்கென் செய்யும்
உலகு!? 01
நுரைப்பல் துலக்க
நெருப்புப் பசையா?
கரைமணற் சாம்பல்
கறையா? – தரைமீதில்
தண்ணீர் எரிந்தால்
தணிப்ப தெதைக்கொண்டு?
கண்ணீர்க் கடலிலையே,
கண்! 02
அலையாத்தி கண்டோம்;
அடியாத்தி! காணோம்
அலையேதீ ஆன
அவலம்; - நிலைமாத்தி
நின்றெரியக் கூடும்தண்
ணீரென்றால் மீனினம்
ஒன்றுமிருக் காதே
உயிர்த்து! 03
ஒற்றை வரிசையில்
ஓடிவரும் சிற்றெறும்பாய்ப்
பற்றி நெருப்புப்
பரவிவர – அற்றை
மதுரைபோல் தீக்கிரையாய்
மாறிடுமோ ஆழி?
எதுவரையில் போகும்
எரிந்து!? 04
அலையே நெருப்பாய்
அடித்தால் கரையின்
நிலையென்ன ஆவது?
நீசொல்! – மலையளவு
கோபத்தால் கண்ணகி
கொங்கை எறிந்தெரித்தாள்;
பாபத்தைச் செய்யாதே
பார்த்து! 05
எறியம்பால் ஓர்கோடு
இராமன் கிழித்தான்
மறியாள் அதைத்தாண்டா
வண்ணம்; – குறிப்பாய்இத்
தண்ணீர்த்தீக் கீறலையார்
தாண்டா வணம்வரைந்தாய்?
உண்மைசொல் ஆழி!
உரத்து! 06
மறியாள் – மான்போன்ற சீதை.
மார்பினைக் கீறி
மழலை புதைப்பர்வெம்
போர்பல கண்டஎம்
பூந்தமிழர்; – நீர்த்திரைதன்
மார்பிலே கீறி
மணலில் புதைகிறதோ
போர்க்கலங்கள் காணாத
போது!? 07
நெருப்பிலே நாருரிக்க
நீகற்ற தெங்கே?
இரும்நீர் எரிபொருளா
இங்கே? – கருந்துளையின்
பக்கம் ஒளிவளையும்;
பாய்அலைக்கும் தான்வளைந்தால்
செக்கரழா தோகண்
சிவந்து!? 08
கரை,அம்மி யாகக்
கதிர்,மஞ்ச லாகத்
திரை,குழவி யாகித்
திரிக்க – நுரைமுகம்பொன்
மஞ்சலே பூசி
மணிநடனம் ஆட,இருள்
அஞ்சனமே பூசும்
அசந்து! 09
மின்னல் கொடிபோலே
தண்ணீர் கொடிதானோ?
கன்னல் அலைமேல்
கனல்தானோ? – என்னஇது
தொட்டால் சுடுமோ?
சொடுக்குமோ கைவிரல்
பட்டவுடன் மின்சாரம்
பாய்ந்து!? 10
தீயைக் கயிறாய்த்
திரிக்கும் அலைகண்டு
வாயைப் பிளந்தசரும்
வையகம்; – பாயையிட்டு
மாலைக் கதிரவன்
மல்லாந்து தான்படுத்து
காலை விழிக்குமோ
கண்!? 11
தரைக்கும் திரைக்குமென்ன
சண்டையா? ஞாயம்
உரைக்கக்கூப் பிட்டதார்
உன்னை? – துரைத்தனம்
காட்டிப் பிரிக்கக்
கதிரே! இடைபுகந்து
மாட்டித் தவிக்கிறாய்
வந்து! 12
நெருப்புப் பிழம்பா?
நெலியும் தழும்பா?
சுரும்பமரும் தண்ணீர்
அரும்பா? – விரும்பித்
தலைகீழ் எரியும்
தணலின் குறும்பா?
மலைக்கும் குறும் பா
மனசு! 13
வெய்யோன் குடலுருவி
வீசியதும் யாரோ?தீ
அய்யோ! எனவழுத
கண்ணீரோ? – மெய்யாய்
நெருப்பு நதிநடந்து
நீந்திவரும் ஆற்றின்
பெருந்தடமோ? வேறெதுவோ
பின்பு!? 14
-அகரம் அமுதன்-



 குரங்கின் கூற்று:-

உள்ளுர் தினத்தந்தி,
ஓங்கோல் முரசோலி,
விள்ளுவது எல்லாமும்
வீண்வதந்தி; – உள்ளபடி
அப்படியே ஒப்பிக்கும்
ஆங்கில நாளேட்டை
இப்படித்தா தம்பி
எடுத்து! 01
வனக்குரங்கு நானமர்ந்து
வாசிக்கச் சேரை
முனமெடுத்துப் போடடா
மொட்டை! – எனக்கெதுக்கு
ஊள்ளூர் கதைகள்?
உலக விசயங்கள்
கொள்ளுவ தொன்றே
குறி! 02
காப்பி குடிச்சபடி
காலையில் கண்ணார
பேப்பர் படிப்பதே
பேரின்பம்; – சாப்பிட
வாழைப் பழமொன்றை
வாய்க்குத்தா! ஈயுமுள்ளம்
ஏழை உனக்குள்
இருக்கு! 03
இந்தியன் எக்ஸ்பிரஸ்
இல்லையா? நான்படிக்க
இந்துஸ்தான் டைம்ஸுமே
இல்லையா? – இந்துவுமே
இல்லையா பையா!
எதைநான் படிப்பதிப்போ?
தொல்லைத் தமிழ்ஏடா?
சோல்! 04
அச்சுப் பிழைகளில்லா
ஆங்கில ஏடுகள்போல்
பச்சைத் தமிழேட்டைப்
பார்த்ததுண்டா? – கொச்சை
எழுத்துச் சுதந்திரத்தால்
ஏடுகள் கெட்டுக்
கொழுத்து மிகுந்தனவே
கோது! 05
பத்தூர் விளம்பரப்
பத்திகளால் நாளேடு
சுத்தமாய்ப் போச்சே
சுயமிழந்து; – புத்தி
மழுங்கடிக் கின்ற
மடஎழுத்தால் நெஞ்சில்
புழுக்கம் அதிகரிச்சுப்
போச்சு! 06
ஆள்வோர்க்கே ஜால்ரா
அடிக்கின்ற நம்செய்தித்
தாள்கள்தான் நாட்டின்
தரித்திரம்; – சூள்கொளுதா
கிஞ்சித்தும் ஏட்டால்
கிளர்ச்சி? துடைஇதனாற்
பிஞ்சுக் குழந்தையின்
பீ! 07
நட்ட நடுப்பக்கம்
நாயக நாயகியின்
அட்டைப் படங்கள்
அலங்கரிக்க, - மட்டைப்பந்து
ஆட்டம் கடைசியில்
அல்லோல கல்லோலம்
காட்டிப் பறிக்குதே
கண்! 08
கொட்டை எழுத்தில்
கொலைகொள்ளை பற்றியே
எட்டுக்கா லத்திற்கு
எழுதுகிறான்; – பெட்டிக்குள்
கள்ளக்கா தல்செய்தி
காட்சிப் படுத்துகிறான்
பிள்ளைகளில் பேரையுமே
பெய்து! 09
நம்மூரின் செய்திகளை
நான்படிச்சாக் கொத்தடிமை
கம்மென்றில் லாமக்
கதறுவான்; – ஜம்மென
இந்தியச் செய்திகளை
இங்குநான் வாசிச்சா
வந்திழுப்பான் சங்கியுமே
வம்பு! 10
உலகத்துச் செய்திகளை
ஒவ்வொன்னாப் பாப்போம்;
கலகமெந்த நாட்டிலென்று
காண்போம்; – மலபோலக்
கொட்டிவெச்ச ஆயுதத்தைக்
கொண்டாந்து எவன்தலைமேல்
இட்டுவெச்சான்? பாத்துடுவோம்
இங்கு! 11
உக்ரைனை ரஷ்யா
உதையாய் உதைப்பதை
இக்கணமே நிப்பாட்டு
எனச்சொல்லும் – மக்கு ட்ரம்ப்
பாலஸ்தீன் மக்கள்மேல்
பாவம்பாக் கின்றானா?
பாலத்தான் ஊத்துகிறான்
பாத்து! 12
ஈரானின் மேலே
எடுத்துவந்து போட்டேனே
பேராபத் தான
பெருங்குண்டை; – யாராச்சும்
தப்புன்னு சொல்லிஇஸ்ரேல்
சட்டை புடிச்சானா?
சப்புன்னு போச்சே
சமர்! 13
கத்தாரைத் தாக்கிக்
கதற உடுகின்றான்
நித்தமொரு நாட்டை
நெதன்யாகு; – குத்தத்தைக்
கண்டிக்க எந்த
கவர்மெண்டால் ஆகிறது?
மண்டியிட மாட்டான்ஹ
மாஸ்! 14
‘பாய்மார் சவுதியொடு
பாகிஸ்தான் ஒப்பந்தம்’,
நாய்பார்த்தாக் கூட
நகைக்குமே; – வாய்த்த
அடிமைகள்தான் ரெண்டும்;
அமெரிக்கா வின்காற்
பொடியள்ளி நெத்தியிலே
பூசு! 15
நிலவுலகம் எல்லாம்தன்
நீழல்கீழ் என்று
கலகத்தி னாற்கல்லாக்
கட்டி, - உலகப்
பெரியண்ணன் வேஷமிடும்
பேடியைஅக் கக்காப்
பிரிச்செடுக்க வேணும்
பிரிக்ஸ்! 16
யானையும் ட்ராகனும்
அன்பால் இணைஞ்சாத்தான்
கேனையன் ட்ரப்பின்
கெதிமுடியும்; – பூனைக்கு
யாரால் மணிகட்ட
ஆகுமென எண்ணாமல்
கூரா யுதஅறிவால்
குத்து! 17
சொல்லி அடிக்கிறான்
துள்ளி அடிக்கிறான்
கில்லி நெதன்யாகு
கெட்டவன்; – வல்லவர்போல்
வாய்ச்சவடால் பேசும்
வளைகுடா நாடெல்லாம்
நாய்ப்புடுக்காய்த் தொங்கலாம்
ஞான்று! 18
பேரலுக்கு அஞ்சு,புதின்
பெர்சன்டேஜ் கம்மிபண்ணித்
தாரயிலும் நூறைபெட்ரோல்
தாண்டுதே; – ஊரயே
ஏச்சித்தான் அம்பானி
ஏப்பம் விட,ராகுல்
கூச்சல் இடறானா
கூறு! 19
ஆப்கன் விமானதளம்
வேண்டி அமெரிக்கா
கூப்பாடு போட்டால்
கொடுப்பானா? – காப்பாளன்
தாலிபன் அங்கே
தடாலடி காட்டுவதும்
ஜாலிதான்; பார்த்திருப்போம்
ஜஸ்ட்! 20
வரிமேல் வரிபோட்ட
வக்காளி ட்ரம்ப்மேல்
தெரிஞ்சே வரிபோட்டுச்
சீனன் – சரிக்குநிகர்
நின்னாம்பார் நெஞ்ச
நிமித்தி; அமெரிக்கன்
பின்வாங்கிட் டானே
பிறகு! 21
இந்தியப் போரை
இவனா நிறுத்தினான்?
சிந்திச்சுப் பாத்தா
சிரிப்புவரும்; – அந்திக்குள்
ஆடிச் சரியாய்
அமரை முடிச்சதெல்லாம்
மோடி;இவன் நீட்டுவதேன்
மூக்கு!? 22
ஆப்பிரிக்கன் சேகுவரா
ஆன தரோராவின்
ஆப்புக்கே அஞ்சி
அமெரிக்கா – கூப்பாடு
போடுவதைக் காண்கின்றோம்;
புர்கினோ பாசோவாம்
நாடு நலம்பெறட்டும்
நன்கு! 23
பாசோவைச் சுற்றியுள்ள
பற்பல நாடுகளும்
பாசோவின் பின்னே
பயணித்தால் – பாசோபோல்
தன்மானத் தோடு
தரணியிலே வாழலாம்
பின்வாங்கும் காலணியப்
பேய்! 24
காலணிய ஆதிக்கக்
கால்விலங்கைப் போட்டுடைத்து
மேலெழத்தான் வெண்டும்
மெலிந்தவர்கள்; – ஞாலத்தில்
வல்லான் வகுத்ததே
வாய்க்கால் எனும்விதிகள்
மெல்லப் பொடிபடட்டும்
வீழ்ந்து! 25
ஏகாதி பத்திய
ஏய்ப்பை எதிர்கொள்வோர்
சாகாது வாழ்க
தரணியில்; – நோகாமல்
கொல்ல முயலும்
கொடுங்கோல் அமெரிக்கப்
பல்லைப் பிடுங்கணும்
பாய்ந்து! 26
மக்கப் பயலுக
மண்ணின் எதிரிகளாய்
நிக்கத் துணிஞ்ச
நிலைமையில் – வெக்கமின்றி
எங்களின் வம்சம்தான்
இந்த மனுசனுன்னு
எங்குப்போய்ச் சொல்வேன்?
இயம்பு! 27
வன்முறை செய்யா
வனக்குரங்கு போல்மனிதன்
மென்முறையில் வாழ
மெனக்கிடணும்; – அன்முறையில்
ஆளத் துணிவதே
ஆபத்து; தன்னைத்தான்
ஆளப் புகுதல்
அழகு! 28

 ஏனவுத்து வீசுற?

எல்லா அலைதுணியும்
தானவுத்து வீசுறது
தப்பிலையா? – மானமில்லாப்
பைத்தியமே! உன்னழகப்
பாக்குதே ஊர்கூடி;
வைத்தியமே பாக்கலாம்
வா!

 பித்தன் பிதற்றிய

பிங்க்நிற பஸ்இதுதான்;
மொத்தம் உளதிதுபோல்
முந்நூறு - சத்தம்
கொடுத்திவற்றை ஊர்வலமாய்க்
கொண்டுவந்தால் ஆட்சி
அடுத்துமிவர் கைக்குவரும்
ஆம்!
சத்தம் - வாடகை

 பெண்களை வைத்துப்

பிழைப்பு நடத்திப்பின்
பெண்ணுரிமைப் பேத்தல்
பெருந்தடியன்; – கண்ணினிய
தாய்த்தமிழைக் கண்டபடி
சாடிய சண்டாளன்;
வாய்முழுதும் ஏச்சு
மலம்!
தாரம் மணியம்மை
தந்தையிவன் என்பதன்றிச்
சீரெதுவும் இல்லாத்
தெருப்பொறுக்கி; – காரசார
வாயையே வாடகைக்கு
விட்ட திராவிட
மாயையே அன்றோஇம்
மாடு!

 பாராட்டுக் கானதா?

பாவம்; பரிதாபம்;
'பீரா'ட்டுக் கானதாய்ப்
பின்பாச்சே; - ஊரார்
சிரிக்கும் படிதான்
சிறப்புகள் செய்தார்;
விரிந்தஇசை ராஜா
விழா!

 வெட்டிப் பெரும்பேச்சை

விட்டுக் களத்திலே
முட்டிக் கழுத்தை
முறிக்காமல் - மட்டிப்
பயல்நட்பு நாட்டோடு
பாங்கோ துவதால்
இயல்பு திரும்பிடுமா
இங்கு!?

 வல்லான் வகுத்ததே

வாய்க்கால்; நெதன்யாகு
சொல்லியடிக் கின்றான்
சுறுசுறுப்பாய்; - வெல்ல
அரபுலகில் எந்தஓர்
ஆண்மகனும் இல்லை
வரலாறு மாறிடு
மாறு!


 அழித்தொழித்த பின்னாலே

ஆதரவை நல்கிப்
பழிகளையப் பார்க்கின்ற
பாரே! - இழிசெயலை
முன்பே தடுக்காமல்
மூங்கையைப் போலிருந்து
கொன்றதும் நீதானே
கூறு!



சனி, 13 செப்டம்பர், 2025

மதுப்பிரியர் வெண்பா!

 


மதுப்பிரியர் 1:-

பாதையில ஒக்காந்து
பட்டப் பகலுலயே
போதையப் போட்டுப்
புளகிப்போம்; – கீதைகள
அப்புற மாக
அவுத்து உடலாம்நீ
இப்பக் குடிடா
இதை! 01
மதுப்பிரியர் 2:-
பச்சைத்தண் ணீரையே
பத்துருவா மேல்வச்சி
எச்சைப் பயலுக
ஏய்க்கிறான்; – பிச்சையெடுத்து
அன்னாடம் கோட்டருக்கே
அல்லாடும் நம்மிடமே
என்னாடா கொள்ளை
இது!? 02
மதுப்பிரியர் 1:-
தண்ணியப் போட்டாலே
த்துவம் பேசுவநீ...
புண்ணியமாப் போகும்,
புலம்பாதே! – ‘அண்ணியார்
கண்ணாலச் சேதியக்
கண்டதுஞ் சின்னவர்
புண்ணானார்’; கட்டிங்கப்
போடு! 03
மதுப்பிரியர் 2:-
எம்பது கோடியில
பேனா சிலையெடுத்து
அம்பது கோடிக்கு
மைவாங்கி – அம்பதுல
பாதிக்குக் காகித
பண்டலுமே வாங்கிருக்கான்
பேதியில போற
பெரிசு! 04
மதுப்பிரியர் 1:-
அடிச்சேன்றான்; கால
ஒடிச்சேன்றான்; கொன்னு
முடிச்சேன்றான் ‘சிந்தூர்’ல
மோடி; – வெடிச்சத்தம்
காத்துவாக் கில்வந்து
காதில் விழும்முன்ன
தீத்துவச் சேன்றானே
ட்ரம்பு! 05
மதுப்பிரியர் 2:-
பக்கத்து நாடெல்லாம்
பத்தி எரியுதே
வக்கத்த தீயிங்கே
வாராதா? – கொக்கரிக்கும்
சங்கிப் பயலுகளச்
சாவள்ளிப் போகாதா?
இங்குத் திராவிடமும்
இத்து! 06
மதுப்பிரியர் 1:-
என்னடா இந்த
இசுரேல் நெதன்யாகு
சொன்னாலும் கேட்காம
துள்ளுறான்? – இன்னிவரை
பாவத்துக் கஞ்சாம
பாலத்தீன் மக்களக்
கோவத்தில் கொன்னு
குவிச்சு! 07
மதுப்பிரியர் 2:-
கோட்டர் விலையேறக்
கூடும் டொனால்ட்ட்ரம்ப்
போட்டவரி யால்,அதுக்குப்
பொங்காம – மேட்டரை
நாடுவிட்டு நாடு
நகத்துறியே என்னடாஉன்
கேடுகெட்ட புத்தி?
கிளம்பு! 08
மதுப்பிரியர் 1:-
மரியாத இல்லாம
பேசாத மச்சான்;
புரியாம பண்ணுதா
போதை? – தெரிஞ்சிருந்தும்
கூப்பிட்டு வந்தவனைக்
கூர்பார்க்கச் சொல்லுதா
சாப்பிடத் தந்த
சரக்கு!? 09
மதுப்பிரியர் 2:-
பொத்துடா வாய
பொறம்பொக்கு; போதையிப்போ
பத்தல, வேற
பணமிருக்கா? – சுத்துற
உந்தலைய வித்தா
ஒருநூறு தேராதே;
எந்தலையும் விப்போம்
எழு! 10

வெள்ளி, 12 செப்டம்பர், 2025

 

Anbuvalli Thangavelan

ஏழென்று நீ சொன்னால் எப்படிப்பா நீயென்றும்

ஏழரையா யிற்றே இதைமறுத்து‌ - வாழ்வாரார்

உன்பாட்டுக் கீடாய் ஒருவர் உளரோயாம்

அன்புடைய ரானதத னால்!

 

யார்சீண்டினாரோ எதற்கிந்தச்சீற்றமோ

சீர் மிக்காய்சீற்றமிது தீர்!

 

அகரம் அமுதன்

தீண்டும் அளவிற்குத் தீரன் எவனுள்ளான்?

காண்டில் முதுகின்பின் கத்தலாம்; - தூண்டியது

வெண்பா வடிக்க விடலைப் பயல்படம்;

பண்பாய் உளமுரைத்தேன் பார்த்து!

 

ஏழா? எனக்கறிவு ஏழரையா? கண்டுரைத்த

தாயார் தமக்குத் கலைவணக்கம்; - பாழான

நாளில் படிக்கின்றேன் நான்பாடல்; நூற்றாண்டின்

நீளம் எனதுபெரும் நோக்கு!