திங்கள், 8 செப்டம்பர், 2025

நெஞ்சிற் குரைத்தல்!

 வாரம் முழுதும் உழைத்துக் களைத்தவன் வார இறுதி நாளில் பத்துமணிவரை தூங்கிப் பரவசமடையும் வாய்ப்பு, வள்ளுவன் சுட்டும் ‘பின்தூங்கி முன்னெழும் பேதை’க்கு வாய்த்ததென்றால்...

(பாவையின் மனவோட்டம் பாக்களாக)
நெஞ்சிற் குரைத்தல்!
வாசல் தெளித்துவிடும்
வானம்; வளர்தென்றல்
தூசைப் பெருக்கித்
துடைத்துவிடும்; – ஆசையுடன்
பூமரம் போட்டுவிடும்
பூக்கோலம்; கண்துஞ்சும்
மாவரம் வாங்கி
மயங்கு! 01
பால்வழங்கு கின்ற
பசு,நாளைக் காலையில்
தேவழங்க உத்தரவு
செய்தாச்சு; – கால்வலிக்கப்
பாழடுப்பைத் தேடிப்
பதற்றம் அடையாமல்
வாழலாம் தூக்கத்தில்
வைத்து! 02
பெட்டையிடம் பேசிவிட்டேன்
பித்துப் பெருஞ்சேவல்
கட்டைக் குரலெடுத்துக்
கத்தாது; – வட்டக்
கதிரெழுமோ வென்ற
கவலைகள் இன்றி
மதியம்வரை தூக்கம்
வளர்! 03
வெம்புலிதான் என்று
வெருளாதே; ராவுலவும்
அம்புலிதான் நெஞ்சே!
அலறாதே; – கம்பளிக்குள்
நூறு கனாவாங்கி
நோகாமல் கண்தூங்கி
ஆறுமணி தாண்டி
அயர்! 04
தூரத்துப் பேராழி
துள்ளும் அலைச்சத்தம்
பாரத்தைக் கூட்டிப்
படுத்தாது; – வாரத்தின்
ஏழ்நாள் உறக்கத்தை
இன்றே உறங்கியெழு
வாழ்நாள் கனவிது
வாய்! 05
சிற்றுண்டி செய்து
சிரமப் படவேண்டாம்
வெற்றுண்டி யோடு
விழிதூங்கு; – மற்றபடி
மத்திய வேளை
வயிறார சாப்பிடலாம்
பத்தியம்போல் கொஞ்சம்
பசிக்கு! 06
மாரன் கணைக்கு
மறுப்பு வரைந்துவிட்டேன்
ஈரத் துணியோடு
இமையிரண்டுஞ் – சேர
விரித்த படுக்கை
விரிப்புக் கசங்கா
அரிதான தூக்கம்
அடை! 07
அடுத்தநாள் பற்றிய
அச்சங்கள் நீக்கி
இடுப்பொடிக்கும் வேலைகள்
இன்றிக் – கடுக்கும்
பகற்கனவு கொண்ட
பதவி பிடுங்கி
அகமே! உறக்கத்தில்
ஆழ்! 08

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக