அம்குயில் ‘குக்கூ’ வென்னும்;
காக்கையும் ‘காகா’ வென்னும்;
கரிபரி நரிநாய் போன்ற
மாக்களும் தத்தம் வாயால்
மலர்ந்துதாய் மொழியே பேச
ஆக்கமில் தமிழா நீயோ
ஆங்கிலம் பேசு கின்றாய்!
மலத்தினில் மொய்க்கும் ஈயாய்
மாறிடல் நன்றா? செங்க
மலத்தினில் மொய்க்கும் ஈநீ
மறந்திடல் வேண்டா; தங்கள்
குலத்தினை அழிக்க வந்த
கோடரி காம்பே! இங்காங்
கிலத்தினில் பேசிப் பேசி
இன்றமிழ் கொன்று போட்டாய்!
படித்தவன் என்று காட்ட
பைந்தமிழ் தடையா? மேன்மை
படைந்தவன் என்று நாட்ட
பழந்தமிழ் முடையா? நாவில்
அடுத்தவன் ஆங்கி லத்தை
அடுக்குதல் சரியா? சீச்சீ
குடித்தவன் கூட உன்போல்
கொன்றிடான் தமிழை போ!போ!
அருமை. அருமை.
பதிலளிநீக்குபாவேந்தர், காசி.ஆனந்தன் போன்றோரின் கவிதைகளைப் படிப்பதைப் போன்ற சிலிர்ப்பு , தங்கள் கவிதைகளைப் படிக்கும் போது ஏற்படுகிறது.
நன்றிகள் சிவகுமரன் அவர்களே! நான் தங்கள் கவிதைகள் அவ்வப்போது படித்து வியந்து போயிருக்கின்றேன். அத்தனை ஆழமாகவும், பொருட்செறிவோடும் எழுதுகிறீர்கள்
பதிலளிநீக்குஅருமை அய்யா.. ஆயினும் ஒரு சிறு பிழையைச் சுட்ட விழைகிறேன். அது கோடரி காம்பன்றிக் கோடரி’க்’ காம்பல்லவோ? அவ்வாறின்மையின் அடியேனை மன்னித்தருள வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குஇவண்
இராகவன்
மொழி என்பது ஒரு கருவி என உணர்ந்து, தன்மொழியும் தரணியில் சிறக்க தாய்மொழியில்
பதிலளிநீக்குஅனைவரும் பேசிட ஓர் ஊக்கம் தரும் கவிதை
அருமை
இராகவன் அய்யா அவர்களுக்கு நன்றிகள். பிழைசுட்டியமைக்கு. இதோ திருத்திவிடுகின்றேன்.
பதிலளிநீக்குநன்றிகள் வேல்முருகன் அவர்களே