வியாழன், 18 மார்ச், 2010

தாய்ப்பால் தருவீரே!


புதல்வர் வேண்டிப் பூசைகள் பலவும்
புரியும் தாய்மாரே!
மதலை அழுதால் வயிற்றுப் பசிக்கு
மடிப்பால் தந்தீரோ?
முதன்மை அழகென முலைப்பால் தவிர்த்தல்
முறைகே டாகாதோ?
புதுமை நோக்கில் புட்டிப் பால்தரல்
புகழைப் போக்காதோ?

ஆவின் பாலை அதன்கன் றிற்கே
அளிக்க மறுக்கின்றீர்
தாவிச் சென்றதைத் தட்டிப் பறித்துத்
தன்சேய்க் களிக்கின்றீர்
ஆவின் கன்றிற் கதன்தாய்ப் பாலே
அமுதம் ஆகாதோ
தாவின் றித்தன் தகைமை காக்க
தாய்ப்பால் தருவீரே!

சேயின் உடல்நலம் பேணக் கண்டதைத்
தின்னக் கொடுக்காதீர்
தாயின் பாலே சேய்நலம் காக்கத்
தக்க மருந்தாகும்
நோயின் பிடியில் தாயும் விழுவாள்
தாய்ப்பால் கொடுக்காக்கால்
தாயிதை உணர்ந்தால் தன்முலைப் புற்றைத்
தவிர்த்திட லாமன்றோ!

அகரம் அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக