திங்கள், 20 ஏப்ரல், 2009

சொன்னது நீதானா சொல்!

மௌனத்தால் கொன்றென்னை மௌனத்தால் வென்றென்னை
மௌனத்தால் நம்காதல் வாழவைத்தாய் -மௌனத்தால்
சொன்ன மொழிமாற்றித் தோகை உனைமறக்கச்
சொன்னவள் நீதானா சொல்!

அகரம்.அமுதா

9 கருத்துகள்:

 1. கொன்றவளெ வென்றதுவும்
  வென்றததனால் வாழ்ந்ததுவும்
  நன்றாகச் சொல்லி விட்டீர் நீரும்
  அன்றவளும்
  பேசவில்லை என்றாலும்
  பேசி நின்றாள் என்கின்றீர்
  கூசுவிழிக் கண்ணாலோ கூறும்

  பதிலளிநீக்கு
 2. உள்ளதைச் சொல்லுகிறேன் ஒப்பில் புலவரே!
  தள்ளாமல் ஏற்பீர் தயவுசெய்(து) -உள்ளபடி
  பேசா மடந்தையவள் பேசும் விழியால்தான்
  கூசாமல் கூறிவிட்டாள் கூர்ந்து.

  பதிலளிநீக்கு
 3. சிங்கைவரு கின்றீர் எனுஞ்செய்தி கேட்டறிந்தேன்
  தங்கள் வரவேண்ணிக் காத்துள்ளேன் -பொங்குதமிழ்ப்
  பாநூல் தருகின்றேன் பாவலரே! நூற்குற்ற
  தேனூற் றுரையளிப்பீர் தேர்ந்து.

  பதிலளிநீக்கு
 4. கவிதை நூல் தயாராகிவிட்டதோ? அதனால் தான் பிரவாகம் பக்கம் வரவில்லையோ? வாழ்த்துக்கள்.

  தங்கள் கவிதைகளை இன்னும் சிலரும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பட்டாம் பூச்சியை தங்கள் வலைபக்கம் பறக்க வைத்துள்ளேன். இது ஆசிரியருக்கு ஒரு மாணவியின் காணிக்கையே. தங்கள் படைப்புக்களின் வாசகி என்ற முறையிலேயே இதை தருகிறேன். ஏற்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்
  உமா.

  பதிலளிநீக்கு
 5. ஆம் உமா அவர்களே! இது எனது முதல் நூல் அல்ல. இரண்டாவது நூலநூலாக வெளிவரவிருக்கிறது. இந்நூலை இம்மாதம் 17-ம் தேதிதான் எழுதத்துவங்கினேன். சற்றேறக்குறைய முடித்துவிட்டேன். இன்று (1.5.09) நெல்லைக் கண்ணன் அவர்கள் சிங்கைக்கு வருகிறார். அவரிடம் உரை பெற்றதன் பிறகு அடுத்த அல்லது அதற்கடுத்த மாதத்தில் வெளியீடு காணவிருக்கிறது. இந்நூலை எழுதி முடிக்கவே கடந்த ஒரு மாத காலமாக இணையப்பக்கம் வரமுடியவில்லை. அல்லது இணையப்பக்கம் வராமல் தவிர்த்திருக்கிறேன். தங்கள் வாழ்த்துகளுக்கு எனது நன்றிகள். இந்நூல் சார்ந்து தங்களது ஆதரவை எதிர்பார்க்கிறேன். நூல் வெளியீட்டின் போது தங்களால் முடிந்த அளவு இணையத்தின் வழியாக பிரபலப்படுத்த வேண்டுகிறேன். தாங்கள் அளித்துள்ள பட்டாம் பூச்சி விருதை மனமுவந்து ஏற்கிறேன். அதற்காக எனது நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 6. அமுதா உங்கள் எழுத்துக்கள் மிகச் சிறப்பானவை, தரமானவை என்பதால் இணையத்தின் மூலமாக மட்டுமல்லாமல் வாய்மொழியாகவும் புத்தகம் படிப்பதில் ஆர்வமுள்ளவர்க்கு எடுத்துச் சொல்வதில் பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்வேன். வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
  நட்புடன் உமா.

  பதிலளிநீக்கு
 7. தங்கள் முதல்நூல் பற்றி விவரம் கொடுத்தால் வாங்கி படிக்க மிகுந்த உதவியாய் இருக்கும்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 8. மிக்க நன்றிகள் உமா அவர்களே! கண்டிப்பாகத் தெரிவிக்கிறேன். உயர்திரு நெல்லை கண்ணன் அவர்கள் சிங்கை வருகிறார் என அறிந்தவுடன் எழுதத்துவங்கினேன். இது இருநூறு குறள் வெண்பாக்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல் . நூலின் தலைப்பு "மழலை மருந்து". இன்னும் இரண்டு மாதகாலத்தில் அச்சேற்றி வெளியீடு கண்டுவிடும் எனக்கருதுகிறேன். இதில் சிறப்பு என்னவென்றால் இந்நூலைச் சற்றேறக்குறைய 10முதல் 15 நாட்களில் எழுதிமுடித்திருக்கிறேன். ஆக இது எனது இரண்டாவது நூல். ஆயினும் முதல்நூலாக வெளிவரவிருக்கிறது. நூல் வெளியீடு காணவிருக்கும் போது கட்டாயமாக தங்களுக்குத் தெரிவிப்பேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 9. அற்புதம், ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு