செவ்வாய், 5 மே, 2026

ஜோசப் விஜய்எனும்நான்...!

ஜோசப் விஜய்எனும்நான்...

 

ஜோசப் விஜய்எனும்நான்... தூயதோர் ஊழலற்ற

தேசமுரு வாகச் செயல்படுவேன்; – பாசபந்தப்

பற்றற்றுப் பாமர‍ரின், பாட்டாளி வர்க்கத்தின்,

வெற்றிக்குப் பாடுபடு வேன்!

 

பள்ளிகளில் கஞ்சா பயன்பாட்டை வேரறுத்துப்

பிள்ளைகளுக் கீவேன் பெருங்கல்வி; – நள்ளிரவில்

பூவையர் அச்சமின்றிப் போய்வரலாம்; கைவைத்தால்

தீவைத் திடுவேன்சே தித்து!

 

ஏவல் துறையாய், எடுபிடியாய்ப் போய்விட்ட

காவல் துறை,தன் கடமையை – ஆவலுடன்

செய்யும் படிச்செய்வேன்; சேவை மனப்பான்மை

உய்யும் படிச்செய்வேன் ஓர்ந்து!

 

பாமரனோ, இல்லை பணங்கா சுடையவனோ,

மாமனோ, மந்திரிக்கு மச்சானோ, – தீமைசெய்யத்

திட்டமிடும் போதே சிறையில் அடைத்திருவேன்;

சட்டமெல் லார்க்கும் சம‍ம்!

 

போதை கலாச்சாரம்; பேதை பலாத்காரம்;

தாதை*யால் நேர்ந்த சமாச்சாரம்; – தீதையெல்லாம்

இன்றே நிறுத்துவேன்; எத்தர் திருத்துவேன்;

நன்றே நடத்துவேன் நாடு!

 

தாதை – அப்பா(முன்னாள் முதல்வர் சுடாலின்)

 

கடமையைச் செய்வதற்குக் கையூட்டு வாங்கும்

மடமையைஓர் கையெழுத்தில் மாய்ப்பேன்; – அடகெடுவாய்!

பத்துலட்சம் கோடிகடன்; பாமர‍ருக் கேதுபலன்?

அத்தனையும் தீர்ப்பேன் அடைத்து!

 

அறுவை சிகிச்சையால் அஃதையகற் றாமல்

உறுவ தொருநன்மை உண்டா? – சிறுக‍த்

திரைமறைவில் தோன்றித் திசைவிழுங்கும் ஊழல்

புரையோடிப் போய்விட்ட புண்!

 

கருமமே கண்ணாவேன்; காவலும் ஆவேன்;

தருமத்தின் ஆட்சி தருவேன்; – தெருவெங்கும்

பாலோடும் தேனோடும் பாயாசம் தானோடும்

நாலோடும் ரெண்டோடும் நன்கு!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக