சமச்சீர் கல்விபற்றிய உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் எழுதப்பட்டது.
எழுத்தினை ஆய்த மாக்கி
ஏந்திய புலவா! வெள்ளைக்
கழுகினை வீழ்த்தப் பாப்போர்
கண்டயெம் தலைவா! சாதி
அழுக்கினை அடித்துப் போக்கி
அகவாடை வெளுத்த வா!நேர்
செழுந்தமிழ்க் கிலையென் றார்த்த
சீர்மிகு மறவ னேவா!
‘தமிழினி மெல்லச் சாகும்’-
தகையிலாப் புன்சொல் கேட்டே
குமிழியென் றுடைந்த நெஞ்சிற்
குரியவா! இன்றோ அந்த
அமிழ்தனை மொழியை நீக்கி
ஆங்கிலக் கல்வி ஓங்கச்
சமைத்ததோர் ‘சமச்சீ ரு’க்கும்
தடையிடப் பார்க்கின் றாரே!
‘நெஞ்சுபொ றுக்கு தில்லை
நிலைகெடு மனிதர் கண்’டென்
றன்றுநீ சோன்ன சொல்லே
அய்ய!யின் றைக்கும் மன்னிற்
றொன்றிரண் டாஅ வர்கள்
உற்றதோர் பிரிவி னைகள்?
நன்றென்றோர் அரசு செய்யின்
அன்றென்றோர் அரசு நீக்கும்!
குடிமக்கள் காப்ப தாய்த்தன்
குடிதனைக் காக்கு மிந்தக்
கொடியரின் ஆட்சி நீக்கிக்
கொழுந்தமிழ் நாடு மீள
விடுதலைப் பாவி சைக்க
விரும்பினேன்; விரைந்தே அந்த
விடிதலை ஏற்ப டுத்த
விரைந்துநல் வல்ல மைதா!