செவ்வாய், 29 ஜூலை, 2025

133. ஊடல் உவகை!

 

133. ஊடல் உவகை!

 

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்

வல்லது அவர்அளிக்கு மாறு! 1321

 

பேரன்பென் மேற்செய்யப் பேருதவி செய்கின்ற

காரணத்தால் ஊடலைக் கைக்கொண்டேன்; – ஆரமுத

அன்பர்தம் மீதில்லை அப்பழுக்கென் றாலுமவர்

பொன்றிடாக் காதல் பொருட்டு!

 

 

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி

வாடினும் பாடு பெறும்! 1322

 

சின்னதோர் துன்பம் சிறகடிக்கும் நான்போடும்

மென்பிணக்குச் சண்டை விளையாட்டில்; - அன்பர்தம்

அன்புசிறு வாட்டம் அடைந்தாலும் பின்புறும்

பொன்பெறும் நன்மதிப்பே போன்று!

 

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு

நீர்இயைந்து அன்னார் அகத்து! 1323

 

செல்லச் சினங்கொண்டு செய்யும் சிறுவம்பிற்கு

இல்லை சுவர்க்கமும் ஈடென்பேன் – நல்ல

நிலத்தினில் நீர்பொருந்தி நிற்றல்போல் என்றன்

உளத்தினில் நின்றார் உடன்!

 

புல்லி விடாஅப் புலவினுள் தோன்றுமென்

உள்ளம் உடைக்கும் படை! 1324

 

கட்டித் தழுவிஅக் கட்டவிழா வண்ணம்நான்

இட்டு நிரப்பும் எரிச்சலுள் – நெட்டி

மலங்கடிக்கும் முற்றும் வளர்ந்திருக்கும் நெஞ்சைக்

கலங்கடிக்கும் போர்வெங் கணை!

 

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள்

அகறலின் ஆங்கொன் றுடைத்து! 1325

 

தப்பே சிறிதுமிலை தாரத்தின் மீதெனினும்

தொப்பென்று போட்டுத் தொலைவிருத்தல் – அப்ப‍ப்பா!

போதாத காலமிது போவென்னும் போதுமிதில்

ஏதோஓர் இன்பம் இருக்கு!

 

உணலினும் உண்டது அறலினிது காமம்

புணர்தலின் ஊடல் இனிது! 1326

 

உண்பதைக் காட்டினும் உண்ட உணவுநன்றாய்க்

கண்டசெறி மானம் களிப்பாகும்; – மண்டையில்வை!

பொன்நிமிட வேர்வைப் புதுப்புணல் ஆடுதலின்

சின்நிமிட ஊடல் சுகம்!

 

ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்

கூடலிற் காணப் படும்! 1327

 

கொண்ட பிணக்கத்தின் கொண்டை பிடித்தங்கு

மிண்டாமல் தோற்றாரே வென்றார்;இவ் – உண்மை

உடுக்கை இடைமீதே ஒட்டியுற வாடும்

படுக்கையில் காணப் படும்!

 

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வியர்ப்பக்

கூடலில் தோன்றிய உப்பு! 1328

 

வட்டச் சிறுநெற்றி வாய்க்கால் வழிந்தோட

ஒட்டிக் கலந்தின்பம் உய்வேனோ? - முட்டத்தான்

முன்னேறு கின்ற முயலிரண்டு கொண்டாளை

இன்னொருபொய்ச் சண்டை இழுத்து!

 

ஊடுக மன்னோ ஒளியிழை யாய்இரப்ப

நீடுக மன்னோ இரா! 1329

 

ஏற்ற இறக்கமெலாம் ஏய்ந்தவணி யாள்மனதை

மாற்ற முயன்றிடுவேன் மன்றாடி – ஆற்றல்

திரட்டித்தான் ஆங்கு திமிரட்டும் பெண்மான்;

இரட்டிப்பா கட்டும் இரவு!

 

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்! 1330

 

காதலுக் கின்பமக் காதலர் போடும்பொய்

மோதலி னாலே முளைவிடும்; – மோதற்குக்

கூடுதல் இன்பத்தைக் கூட்டும் உடலையுடல்

மூடுவ தாலே முகிழ்ந்து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக