செவ்வாய், 29 ஜூலை, 2025

133. ஊடல் உவகை!

 

133. ஊடல் உவகை!

 

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்

வல்லது அவர்அளிக்கு மாறு! 1321

 

பேரன்பென் மேற்செய்யப் பேருதவி செய்கின்ற

காரணத்தால் ஊடலைக் கைக்கொண்டேன்; – ஆரமுத

அன்பர்தம் மீதில்லை அப்பழுக்கென் றாலுமவர்

பொன்றிடாக் காதல் பொருட்டு!

 

 

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி

வாடினும் பாடு பெறும்! 1322

 

சின்னதோர் துன்பம் சிறகடிக்கும் நான்போடும்

மென்பிணக்குச் சண்டை விளையாட்டில்; - அன்பர்தம்

அன்புசிறு வாட்டம் அடைந்தாலும் பின்புறும்

பொன்பெறும் நன்மதிப்பே போன்று!

 

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு

நீர்இயைந்து அன்னார் அகத்து! 1323

 

செல்லச் சினங்கொண்டு செய்யும் சிறுவம்பிற்கு

இல்லை சுவர்க்கமும் ஈடென்பேன் – நல்ல

நிலத்தினில் நீர்பொருந்தி நிற்றல்போல் என்றன்

உளத்தினில் நின்றார் உடன்!

 

புல்லி விடாஅப் புலவினுள் தோன்றுமென்

உள்ளம் உடைக்கும் படை! 1324

 

கட்டித் தழுவிஅக் கட்டவிழா வண்ணம்நான்

இட்டு நிரப்பும் எரிச்சலுள் – நெட்டி

மலங்கடிக்கும் முற்றும் வளர்ந்திருக்கும் நெஞ்சைக்

கலங்கடிக்கும் போர்வெங் கணை!

 

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள்

அகறலின் ஆங்கொன் றுடைத்து! 1325

 

தப்பே சிறிதுமிலை தாரத்தின் மீதெனினும்

தொப்பென்று போட்டுத் தொலைவிருத்தல் – அப்ப‍ப்பா!

போதாத காலமிது போவென்னும் போதுமிதில்

ஏதோஓர் இன்பம் இருக்கு!

 

உணலினும் உண்டது அறலினிது காமம்

புணர்தலின் ஊடல் இனிது! 1326

 

உண்பதைக் காட்டினும் உண்ட உணவுநன்றாய்க்

கண்டசெறி மானம் களிப்பாகும்; – மண்டையில்வை!

பொன்நிமிட வேர்வைப் புதுப்புணல் ஆடுதலின்

சின்நிமிட ஊடல் சுகம்!

 

ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்

கூடலிற் காணப் படும்! 1327

 

கொண்ட பிணக்கத்தின் கொண்டை பிடித்தங்கு

மிண்டாமல் தோற்றாரே வென்றார்;இவ் – உண்மை

உடுக்கை இடைமீதே ஒட்டியுற வாடும்

படுக்கையில் காணப் படும்!

 

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வியர்ப்பக்

கூடலில் தோன்றிய உப்பு! 1328

 

வட்டச் சிறுநெற்றி வாய்க்கால் வழிந்தோட

ஒட்டிக் கலந்தின்பம் உய்வேனோ? - முட்டத்தான்

முன்னேறு கின்ற முயலிரண்டு கொண்டாளை

இன்னொருபொய்ச் சண்டை இழுத்து!

 

ஊடுக மன்னோ ஒளியிழை யாய்இரப்ப

நீடுக மன்னோ இரா! 1329

 

ஏற்ற இறக்கமெலாம் ஏய்ந்தவணி யாள்மனதை

மாற்ற முயன்றிடுவேன் மன்றாடி – ஆற்றல்

திரட்டித்தான் ஆங்கு திமிரட்டும் பெண்மான்;

இரட்டிப்பா கட்டும் இரவு!

 

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்! 1330

 

காதலுக் கின்பமக் காதலர் போடும்பொய்

மோதலி னாலே முளைவிடும்; – மோதற்குக்

கூடுதல் இன்பத்தைக் கூட்டும் உடலையுடல்

மூடுவ தாலே முகிழ்ந்து!

 

சும்மாசும் மாஎந்தன் 

   தோலுரித்துத் தொங்கவிடும்

அம்மாஅம் மாஉனக்கென் 

   ஆரத்தி – இம்மா

அரங்கத்தில் வைத்தே 

   அடிக்காமல் விட்டால்

தரத்துணிவேன் என்றன் 

   தலை!

 

வாங்காச் சுதந்திரநாள் 

   வாலிபரே! எம்நெஞ்சின்

நீங்கா நினைவலையின் 

   நேசகரே! – பூங்காஉன்

பாடல்கள்; பிள்ளைகள்நாம் 

   பார்வைப்பொன் வாண்டுகளால்

தேடத்தான் செய்கின்றோம் 

   தேன்!

 

தோப்பனே! என்னுடைய 

  தோள்வலியே! உன்னிடம்நான்

தோப்பனே; இல்லையதில் 

   தொந்தரவே; – மேய்ப்பனாய்ப்

பார்த்தனே என்நெஞ்சப் 

   பாழ்ஆட்டை; ஊள்ளாடும்

கூத்தனே! இந்தா!கை 

   கூப்பு!

 மணக்குமா என்ன

மறுநாளும் வைத்து
குணவதி தந்த
குருமா? - தணல்வைத்துச்
சூடாகத் தின்றால்
சுமாராய் இருந்திடும்;
சூடாறும் முன்னே
சுவை!

காதல் பித்து!


உட்சென்று நெஞ்சுள்
ஒளிய வரங்கேட்டால்
வெட்கத்தைத் தந்து
விலகுகிறாய் – வட்டநிலா
மேகத்துள் சென்று
மெதுவாய் மறைவதுபோல்
மோகத்தை நாணால்
முறித்து! 001
பாதரசம் சாப்பிடுதல்
பாழாகும்; பாவைஉன்
பாதரசம் தானெனக்குப்
பாயாசம்; – நாதரசம்
உன்பேச்சென் காதுக்கே
ஊட்டிவிடு; வாழ்தற்கே
உன்மூச்சை என்மூக்கில்
ஊட்டு! 002
ஊர்த்தெருவில் போகின்றாய்
ஓரா யிரம்நிலவு
ஊர்வலமே போவதாய்
ஊர்சொல்லும் – தேர்வலம்தான்
தேவதைநீ செல்வதாய்ச்
சேதிவரப் பாரென்று
மாவதைதான் செய்யும்
மனம்! 003
கூதலுக்கு யார்தான்
குடைபிடிப்பார்? பொங்கியெழும்
காதலுக்கு ஊரார்
கவிவடிப்பார்; – சேதமின்னும்
மென்மேல் அதிகரிக்கும்;
நெஞ்சம் பரிதவிக்கும்;
சொன்னால்யார் கேட்கின்றார்
சொல்! 004
காத்துவரும் போதெல்லாம்
கன்னியுன் வாசனைதான்
பூத்துவரும்; ஏதோஓர்
போதைதரும்; - நேத்துவந்த
நெத்தியின் நாற்றமா
நெஞ்சை நிறைத்துவிடும்?
புத்தியிலே நீயிருக்கும்
போது! 005
தேர்போகும் வீதியிலே
தேவி உனைக்கண்டு
கார்போகும் சோலையிலே
காதலித்தேன் – யார்கண்கள்
பட்டதென்று நானறியேன்
பற்பலநாள் மெய்க்காதல்
கெட்டதென்று நீசொல்லக்
கேட்டு! 006
ஒன்றேதான் காதல்;
ஒருத்தியே காதலி
என்றே வரைந்தேன்
இதயத்தில்; - இன்றே
கணியெனக்கு என்னாச்சு?
காயமெங்கும் காதற்
பிணியெனக்கு உன்னாலன்
பே! 007
பெட்டிக் கடைமிட்டாய்
பிள்ளைகளை ஈர்ப்பதுபோல்
கட்டி இழுக்கின்றாய்
கண்களால்; – துட்டில்லா
ஏழைச் சிறுவன்போல்
ஏங்குகிறேன்; தாராய்இப்
பாழைக்குத் தான்சொப்
பனம்! 008
கருவாச்சு நின்மீதே
காதல்;அடி போடி
கருவாச்சி உன்மீதே
காதல் – உருவாச்சு;
நீதின்று போட்ட நெடுயமாங்
கொட்டையிதை
யார்திங்க? நீயே
எடு! 009
நீயழகி நின்பின்
நிறைய பயல்வரலாம்;
வாயருவி நீந்தி
மகிழ்ந்திடலாம்; – நாயுருவி
நானென்ற போதென்மேல்
நாட்டம் செலுத்துவதார்?
தெனென்று நீயென்னைச்
சேர்! 010
தாயமாய் நெஞ்சைத்
தரையில் உருட்டுகிறாய்;
காயத்தைக் கண்ணால்
கழட்டுகிறாய்; – தாயத்து
நான்கட்டிக் கொண்டாலும்
நாளுமுன் காதற்பேய்
தேன்சொட்டாய்த் தின்குதெனைத்
தீர்த்து! 011
இந்நாள் வரைபிறந்த
எல்லா அழகியரும்
உந்தன்முன் மூன்றாம்
முடப்பிறைதான்; – தந்தானே
பொன்னால் முழுமதியைப்
பூமிக்கே; அவ்வகையில்
ஊன்னப்பன் தான்பிரம்மன்;
ஓ..! 012
வண்டெல்லாம் உன்னை
வளைவீசித் தேடுதுபார்
செண்டென்று நம்பியுன்னில்
தேனெடுக்க; – பெண்ணழகே!
என்னிடமும் கண்வண்டு
இரண்டுண்டு அனுப்புகிறேன்
உன்தா வணியை
ஒதுக்கு! 013
சிறுபுள்ளிச் சுற்றளவும்
தோற்கும் இடைமேற்
பெறுமொட்டி யாணம்
சுமைதான் – குறுந்தகடு
பூங்கீறல் பெற்றதுபோல்
பூவுதடு பெற்றவளே!
தாங்குகிறேன் என்நெச்சில்
தாவு! 014
ஆழி எடுத்துன்
அறைக்குடுத்து; என்மனத்
தாழி திறந்தென்
தவம்கடை; – வாழிஉன்
பூவிழி மத்து;அதனால்
போகிறேன் செத்து;உன்னால்
தீவிழித்த தேநெஞ்சத்
தே! 015
நிழல்நிலத்தில் வீழ்தல்
நிதர்சனம்; பூவுன்
நிழல்விண்ணில் வீழ்ந்து
நிலவாச்சு; – அழகியே!
பாவலன் நான்சொன்னால்
பைத்தியம் என்கின்றார்;
நீவலம் வந்து
நிறுவு! 016
நான்கிறுக்கன் பூங்கவிதை
நன்றாய்க் கிறுக்குவேன்
ஏய்பொறுக்கி என்றேன்னை
ஏசாதே; – வான்வழுக்கிப்
பூவிக்கு வந்தநிலா
பூத்ததென் கட்டிலிலா?
சாமியே! நின்தாள்
சரண்! 017
புரியவேண்டி யாட்குப்
புரிந்தாலே போதும்;
புரியா மலேயெங்குப்
போகும்? – அரியவளே!
எல்லாம் தெரிந்தவுனக்கு
என்னைத் தெரியாதா?
கல்லாச்சா உன்நெச்சு?
காட்டு! 018
விண்ணிலவில் நீருண்டா?
விஞ்ஞானம் ஆய்கிறது;
வெண்ணிலவே! நின்உடல்
வேர்ப்பதனைக் – கண்டிருந்தால்
வெட்டிச் செலவு
விரயமில்லை; விஞ்ஞானம்
குட்டிச் சுவரென்பேன்
கூர்ந்து! 019
இல்லா தவள்நீ
இடையளவில் என்னளவில்
போல்லா தவள்நீ
புரிந்துணர்வில்; – நல்லாய்
உனக்கென்னை விட்டால்
உறவுண்டு; உறவென்று
எனக்குன்னை விட்டால்
எவள்! 020
ஆளரவம் இல்லா
தறிந்துமுத்தம் இட்டுவைத்தாய்
நீளரவம் ஊரும்
நெடுங்காட்டில்; – ஆளரவம்
உள்ள இடத்தில்
உறவல்லார் போல்நடந்து
கொள்வதெனைச் செய்யும்
கொலை! 021
வான்நீலம் மொத்தம்
வழித்தாலும் போதாது;
மீன்கடல்நீர் நீலம்
மிகக்குறைவு; – நான்விரும்பி
ஏடெடுத்தேன் உன்னை
எழுதிட; மைவிழிக்
கூடெடுத்து வந்து
கொடு! 022
தூணிலும் நீயே;
துரும்பிலும் உள்ளாயே;
காணிடம் எல்லாம்உன்
காட்சியே; – நீணிலத்தில்
ஆண்டவனும் நீயுமொன்றே;
அண்டிவந்து அன்புருக
வேண்டியவை ஈயா
விடத்து! 023
பல்முத்தம் என்றேபண்
பாடினேன்; நெஞ்சில்என்
சொல்குத்திற் றோ?தூக்கில்
தொங்கியதே; – மெல்லியலே!
நாக்கில் நரம்பின்றி
நான்சொன்ன தாய்உனது
மூக்கின்கீழ் புல்லாக்கு
முத்து! 024
தேவி சிரிப்பே திருவிழா;
நான்தொலைந்து
கூவியழு கின்றேன்
குழந்தையாய்; – ஈவிரக்கம்
காட்டாமல் கூட்டம்
கலைகிறது; பேரச்சம்
வாட்டாமல் வாட்டுதெனை
வந்து! 025
பேச்சரங்கப் போட்டியிலே
பேரைநீ சேர்க்காதே
கூச்சல் இடக்கூடும்
கூட்டத்தார்; – பேச்சரங்கைப்
பாட்டரங்காய் மாற்றுவதாய்ப்
பாவையுன் பூங்குரலில்
ஆட்பட்ட தாலே
அதிர்ந்து! 026
நீர்மோக்க நீவந்தால்
நீர்ப்பரப்புப் பாசிகள்நின்
சார்பாகத் தான்சற்றே
தள்ளிநிற்கும் – ஊர்க்குடங்கள்
வாய்பிளந்து பார்த்திருக்கும்;
வாய்ப்பிதுபோல் தங்களுக்கும்
வாய்க்கா ததினால்
வழிந்து! 027
நீர்மோந்து நீள்கரையில்
நீநடந்தால் நீர்க்குடம்கண்
ணீர்சிந்தி பாரம்
நினைந்தழும்; – ஊர்வரைக்கும்
தன்னைச் சுமக்குமோ?
தாளாது ஒடியுமோ?
மென்மருங்குல் என்றுள்ளம்
வேர்த்து! 028
நின்னை வரைந்ததற்பின்
நீர்க்குளத்தில் போய்ப்பிரம்மன்
தன்கை அலம்பமலர்த்
தாமரையும், – பொன்னிறத்துத்
தூரிகையைத் தானலம்பத்
துள்ளியெழும் மீன்பொதியும்,
நீரிலே தோன்றினவே
நேற்று! 029
கோவிலுக்குப் போனபூ
கொண்ட உவகையினை
நாவிருந்தால் கூறிவிடும்
நால்வரியில்; – தேவியுன்
கூந்தலுக்கு வந்தபூ கூறப்
புறப்பட்டால்
பூந்தமிழிற் சொல்தீர்ந்து
போம்! 030
-தொடரும்-

வெள்ளி, 25 ஜூலை, 2025

வெண்பா!

 காலால் மிதித்தவனைக்

   கையால் எடுக்கவைக்கும்

மேலான முள்ளதன்

   மேன்மையிது; - சாலா!நீ

தாலால் மிதித்தோன்

   தலையால் சுமக்கு(ம்)வரை

ஏலாதென் றெண்ணா(து)

   எழு!