தீராப் பழியைத் தரும்!
இல்லாள் அகத்திருக்க இன்னொருத்தி யைத்தேடல்
நல்லார்க்(கு) அழகோ நவில்!
அகத்தாள் இருக்க அயலவளைக் கூடல்
முகையிருக்க முள்நுகர்ந் தற்று!
உனக்கென்(று) ஒருத்தி உளக்கால் உளத்தால்
நினையாய் அயலவளை நீ!
கூட ஒருத்தியைக் கொண்டபின் மற்றவளை
கூட நினைத்தல் கொடிது!
ஒருத்தியோ(டு) உற்ற உயர்வாழ்வே வாழ்வாம்
கருத்தினில் ஏற்றல் கடன்!
நினைவோடும் மற்றொரு நேரிழையை எண்ணாய்!
மனையாளோ(டு) இன்புறுதல் மாண்பு!
இருமனையாள் தேடி இணைவதுவும் வேண்டா;
ஒருமனையாள் போதும் உணர்!
அகரம் அமுதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக