சனி, 20 பிப்ரவரி, 2010

கவிப்பேரரசுக்கு...

பெண்ணைத்தான் கவிபுனைய தஞ்சை மண்ணைப்
.....பெயர்த்தெடுத்துக் கவிபுனைந்தாய் புலவா! நானும்
உன்னைப்போல் கவிபுனைய வேண்டும் என்ற
.....உளத்தாசை உந்துதலால் எழுத வந்தேன்!
தென்னையைப்போல் ஈந்துவிட பசுவைக் கேட்டால்
.....தந்துவிடும் தனைமுழுதும் தாரை வார்க்கும்
கண்ணைப்போல் பார்வைபெற நகக்கண் ஆமோ?
.....கவிஞனுனைப் போலெழுத என்னால் ஆமோ?

திணையிரண்டில் விளைவதனைத் தேர்ந்தெ டுத்துத்
.....தன்பெயராய்ப் புனைந்திட்டாய்! புதுமை தன்னின்
துணைகொண்டு மரபதனின் மயக்கம் தீர்த்தாய்!
.....துடிப்பாயுன் குருதியினைக் கொடையும் செய்தாய்!
பனைபோலக் கருத்திருந்தும் பால்நி லாப்போல்
.....பாவெங்கும் ஒளிசெய்தாய் சிறுபிள் ளைகள்
உணவுண்ண பால்நிலவைக் காட்டல் போல
.....உன்னெழுத்தால் நானெழுதப் பழகிக் கொண்டேன்!

பொதுவாய் எதுவாய்? முத்துப் பற்கள்
.....பூத்துவரும் செவ்வாய் அதுவாய்! நீயோ
மதுவாய் விருத்தத்தில் சிலம்ப மாடி
.....வாயென்னும் வார்த்தையதை வாழ வைத்தாய்!
இதுவாய் எனுமளவு சிவந்தி ருக்கும்
.....இளையவளின் செவ்வாயில் உனது ஜீவன்
புதிதாய்க் குடிபுகுந்து பொலிந்தி ருப்ப
.....தறியாவிஞ் ஞானத்திற் கேது ஞானம்!

பொருப்புடனே மழையதனை பொழியும் வானை
.....பொய்முகங்கள் காட்டுகின்ற சமுதா யத்தை
விருப்புடனே இலைமரத்தை வைய கத்தை
.....விடலையிலே வருங்காதல் வியந்து பாடி
கருப்பத்தில் சுமந்தீன்று காத்த தாயைக்
.....கவிதையிலே கண்முன்னே கொண்டு வந்தாய்!
‘இறப்பதனை நீயெய்தால் இன்னோர் தாயும்
.....எனக்குண்டோ?’ எனும்வரிகள் பிழியும் நெஞ்சை!

எண்ணமெலாம் உன்“பழைய பனைஓ லைகள்”
.....இதழில்”கொஞ் சம்தேனீர் நிறைய வானம்”
“இன்னொருதே சியகீதம்” “இந்தப் பூக்கள்
.....விற்பனைக் கல்ல”வெனும் இவைகள் நான்கும்
இன்னுமென் நினைவோடு “கொடிம ரத்தின்
.....வேர்கள்”போல் வாடாமல் வாழக் கண்டேன்
கண்ணெல்லாம் கல்வெட்டாய்க் கனவினோடும்
.....“கருவாச்சி காவியத்தைக் காணு கின்றேன்!

எத்தைநீ எழுதாமல் விட்டு வைத்தாய்?
.....இலை,சேரி, குண்டூசி முதலாய்த் தொட்டு
அத்துணையும் அழகுகவி ஆக்கி வைத்தாய்
.....அதில்முற்றும் முழுமைதனை அடுக்கி வைத்தாய்!
சித்தத்தால் நானமர்ந்து சிந்தித் தாலும்
.....சிலநேரம் உன்சாயல் தெரியு தப்பா!
பித்தேயுன் சாயலுக்குக் கார ணம்ஆம்
.....பேரரசே! கப்பம்நீ கேட்டி டாதே!

அகரம் அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக