செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

கட்டில் தாலாட்டு!

மலராத மலரே! கண்ணுறங்கு –என்
மாரோடு தேனுண்டு மயங்கு!

கண்ணாளன் கதைசொல்லும் நேரம் –ஏன்
கண்ணா! உன் விழியோரம் ஈரம்?

மலராத மலரே! கண்ணுறங்கு! –என்
மாரோடு தேனுண்டு மயங்கு!

சொன்னாலும் கேட்கவுன் அப்பன் –எனைத்
தின்னாமல் பசிதீர மாட்டான் –நீ
கண்ணாலே அதைக்கான நினைத்தால் –அல்லி
மலராலே கன்னத்தில் அடிப்பான்!

ஒருமடியில் இருதலைகள் வேண்டாம்
தொட்டிலிலே நீதூங்கச் சென்றால் –அவனைக்
கட்டிலிலே நான்தூங்க வைப்பேன் –மார்புக்
கொட்டிலிலே நான்தூங்கிக் கிடப்பேன்!

உனைப்போலே அவனும்ஓர் பிள்ளை
உனக்கேனோ அதுவிளங்க வில்லை
கணக்காக நீஎன்னைப் பகிர்ந்தால்
பிணக்காலே தலையணையை அணைப்பான்!

புரியாத புதிருக்கு விடைகாண வேண்டும்…
பக்கத்து நலவே! -நீ
அழுதாலது நடக்காது!
தனிமைதான் உனக்கேற்ற இனிமை –ஆடை
வறுமைதான் இப்போதென் உடைமை.

அவன்தானே உனைஎனக்குத் தந்தான் –என்
மடியணைத்து நீயழவே நொந்தான்…

தொட்டிலுக்குத் துணைவேண்டும்
அதுவேஉன் ஆசை…
எனக்கல்லோ புரியும் –இரு
பல்லிடுக்கின் பாஷை…

உன்தம்பி நாளைக்கு வருவான்
நீவெம்பி அழுதாலோ வருவான்?

பூங்காற்று கைகொண்டு அணைக்க
தேனூற்று கண்மூடிக் கிடக்க
மலராத மலரே! கண்ணுறங்கு...

அகரம் அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக