திங்கள், 20 அக்டோபர், 2008

அலைகடலா? கொலைமடலா?

26.12.2004- அன்று ஆழிப்பேரலையால் தமிழகக் கரையோரங்கள் அழிந்தபோது!

எடுத்து வலைவீசும்
எம்மக்கள் நடுநிசியில்
படுத்து உறங்கையிலா
பார்கடலே பதம்பார்த்தாய்?

மீன்பிடித்தக் கையோடு
மோகம் மூண்டுவர
மானணைத்துக் கிடக்கையிலா
மற்போர் நீபுரிவாய்?

கத்துகடல் நீரலையே!
கரையுடைத்த சேதியென்ன?
எத்தனைநாள் பகைமையடி
ஏனோ கொலைபுரிந்தாய்?

நிலமே நடுநடுங்கி
நிலைகொள்ளா திருக்கையிலே
உளமே பதறும்படி
ஊரழித்த மாயமென்ன?

ஊர்புகுந்து ஊரழித்(து)
ஒருநூறு பேரழித்துப்
பார்புகுந்து பாரழித்தாய்
பாற்கடலே! நாயமென்ன?

துடுப்புப் பிடிப்பவரை
துடுக்காய்ப் பகைமுடித்தாய்...
மூழ்கிமுத் தெடுப்பவரை
மூழ்கடித்துப் பரிகசித்தாய்...

ஏனென்று கேட்கஒரு
நாதியில்லாக் காரணத்தால்
எழுந்து வந்தாயோ?
எமனுருவம் தரித்தாயோ?

பொதுவாய் வீரனுக்குப்
பொருதுவது தான்சிறப்பு!
முதுகில் குத்துகிற
மூடமதி உனக்கெதற்கு?

வெறிநாய்க்கு நாவினிலே
வியர்ப்பதுபோல் அலைநாவைத்
தெரியக் காட்டினையே!
திண்றொழித்(து) ஓடினையே!

வயல்வெளியை உழுவதுபோல்
அலைவெளியை உழுபவரை...
மூச்சடக்கி முத்தெடுக்க
முனைந்தோடி வருபவரை...

ஏன்டி பகைமுடித்தாய்?
எழுந்துவந்து கொலைபுரிந்தாய்;?
தூண்டில் புழுவாட்டம்
துடிதுடிக்கச் சீரழித்தாய்?

ஒருதாலி உதிர்ந்தாலே
உட்கார்ந்து ஊரழுவும்...
ஊர்த்தாலி பரித்தாயே!
உதிரத்தைக் குடித்தாயே!

உன்பசிக்கு ஊர்ந்துவரும்
நதிவெள்ளம் போதாதா?
ஊனோடு உயிரள்ளி
உணவாக்கிக் கொண்டாயே?

அண்ணாந்து வாய்பிளந்து
ஆகாயம் வரையெழுந்து
கண்ணயரும் குடிசைகளை
கல்லறையாய்ச் செய்தாயே?

துள்ளும் நீரலையே
தூக்குக் கயிறானால்
எள்ளும் தண்ணீரும்
இரைப்பதற்கு ஆளேது?

சூழ்ந்துள்ள கடல்யாவும்
சுட்டெரிக்கும் தீயானால்
ஏழ்கடலும் சுடலையெனும்
ஏளணப்பேர் தோன்றாதா?

விதவிதமாய் ஆமைகள்
விரிகடல்நீ பெற்றிருந்தும்
அதனினும் சிறப்பான
ஆமையொன் றில்லையென்பேன்!

பல்லாமை இருந்துமென்ன?
பாழ்கடலே! பிறவுயிரைக்
கொல்லாமை வேண்டுமடி
கொடியவளே! கற்றிடுவாய்!

அகரம்.அமுதா

2 கருத்துகள்: