மாற்றார்க்குத் தப்பிவிடின் மண்வீழ்ந்து –தோற்றாராய்
ஆக்கத் தெரிந்த அழகிறகுப் பந்தே!என்
ஏக்கமறிந் தென்னவள்கண் ஏகு!
ஏகும் முனமென் இளநெஞ்சைத் தொட்டுப்பார்!
வேகும் அவள்நினைவின் வெப்பத்தால்; -ஆகம்*
இழைபோல் இளைத்த இவன்நிலையைச் சொல்லி
அழைப்பாய் அவளைச்சென் றாங்கு!
ஆங்கவளைக் கண்டார்த் தருங்கதைகள் பேசிப்பின்
தேங்குவளைக் கண்ணாட்குச் சேவைசெய்! –பாங்காய்ப்பின்
என்நிலையைச் சொல்க! எழுங்காதல் மிக்குடையாள்
தன்நிலையைச் சொல்வாள் தளர்ந்து!
தளர்ந்து தனித்துத் தவிக்கின்றேன் நீபோய்
வளர்ந்தமுலை மாதை வரச்சொல்! –குளம்வாழ்
மரைமுகத் தாளும் மறுப்பாள் எனிலோ
இறப்பான் இவனென் றியம்பு!
இயம்புங்கால் அன்னவளின் இன்முகத்தை நோக்கு!
மயங்கும் விழிகள்; மருள்வாள்; -தயங்காதே!
நண்டுறை நீர்த்துறையில் நானுள்ளேன்; என்னுயிரோ
ஒண்டொடி தன்சொல்லில் உண்டு!
உண்டா எனக்கேள் உறுகாதல் என்மீதிற்
பெண்டாள் இலையென்னாள்; பின்பென்ன? –பண்டென்
உளங்கள வாடி உவந்தாள்தன் மேனி
வளங்கள வாடுகிறேன் வந்து!
வந்தாரக் கட்டி வளஞ்சேர்க்கச் சொல்தன்னைத்
தந்தாலே என்னுயிர் தங்குமெனும் –அந்தப்பேர்
உண்மையினைச் சொல்லி உளமறிந்து வா!இந்த
நன்மையினைச் செய்க நயந்து!
நயந்தேன்; அவளின் நறுந்தேன் உடலை
வியந்தேன்; இதனை விளம்பத் –தியங்குமென்
ஆவியுண் கண்ணாள் அருகிருந்தென் னையணைக்கத்
தூவிறகுப் பந்தே!போ தூது!
தூதாக நீயுமத் தோகை இடஞ்செல்லத்
தோதாவாய் என்பதினால் சொல்லிவைத்தேன் –போதாயோ?
மெல்லப்போ கின்ற மிறல்*பந்தே! பெண்நெஞ்சை
வெல்லப்போ கொஞ்சம் விரைந்து!
விரைந்துநீ போய்யென் விருப்பம் உரைப்பாய்
கரந்தமனத் தாளவளின் காதில் –சுரந்துவரும்
வாயிதழின் சாற்றில் வழுக்கிவரும் சொல்லேயென்
காயத்தை வாழ்விக்கும் காற்று!
சொற்பொருள்:-ஆகம் –உடல்; தியங்குதல் –கலங்குதல்; மிறல் –பெருமை.
அகரம் அமுதா
ஈற்றெடுப்பு, தூது என்று மிக மிக அழகாக எழுதுகிறீர்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துப் பாவோடு வருகிறேன்.
ஈற்றெடுப் பென்றே இனியத் தமிழ்செய்தாய்
பதிலளிநீக்குநாற்றெனவே நற்கருத்தை நாட்டியே நற்றமிழில்
தீங்குறளை, தூதை,நீ தீட்டிவைத்தாய் உந்தனுக்கே
ஈங்கில் லையேயோ ரிணை.
இணையில்லை உந்தனுக்கே இந்தமிழில் பாவெழுத
துணையாகப் பந்தையே தூதாக்க,- துணையாக
வந்தாளோ பாவை தனியாக விட்டாளோ
செந்தமிழாள் சேர்வாள் உனை.
உந்தனையே சேரும் உயர்ந்தோரின் பாராட்டு
வந்தனை யானுனை வாழ்த்திட,தந்தனையே
போற்றுமோர் தூதும் பொருள்நிறை வெண்பாவும்
ஏற்றுமே உந்தன் புகழ்.
"பேணுகிறாய்" என்றீர் பெருந்தமிழை! உம்வாழ்த்தால்
பதிலளிநீக்குநாணுகிறேன் நங்காய்! நவிலுங்கால் -
சாணளவே
உள்ளயெனக் கொப்பாய் ஒருவரும் இல்லையென்றீர்!
உள்ளீர்நீ ரன்றோ உணர்!
குறிப்பு:- ஈற்றடியைக் கொண்டுகூட்டிப் பொருள்கொள்ள வேண்டும்.
"நீங்கள் உள்ளீரன்றோ (அதனை) உணர்வீராக!" -என்பது கருத்து.
அமுதா நீங்கள் தமிழ்க்கடலில் மூழ்கி சில முத்துக்களை கோர்த்துள்ளீர்கள், நானோ கடலோரத்தில் அலைகளில் கால் நனைததபடியே அதன் நுரையையே முத்தென நினைத்து மகிழ்ந்திருக்கின்றேன். மலைக்கும் மடுவுக்குமா ஒப்புமை. உங்கள் உயர்ந்த உள்ளததிற்கு நன்றி.
பதிலளிநீக்குஉண்மையைத்தான் உரைத்தேன் உமா அவர்களே! ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்புத்திறன் உள்ளது. அப்படி இருக்கும்போது யார் பெரியவர்? யார் சிறியவர்? யாரும் யாவர்க்கும் நிகரே யன்றோ!!!!
பதிலளிநீக்கு