செவ்வாய், 1 ஜனவரி, 2013

தமிழன்கை அன்றே ஓங்கும்!


மலையாளி ஆண்டான்; நம்மை
வடுகனுமே ஆண்டான்; தண்ணீர்
இலையென்ற கன்ன டத்தின்
எழில்மங்கை ஆண்டாள்; என்றும்
நிலையாகத் தமிழர் நாட்டை
நின்றாளத் தமிழன் போந்தால்
கொலைவாளுக் கஞ்சி யோடும்
கோழைபோற் பதுங்கு கின்றோம்!

அண்டைமா நிலத்தா ரெல்லாம்
ஆள்கிறார் நம்மை; வந்து
மண்டைமேல் ஏறிக் குந்தி
மகிழ்கிறார்; எதிர்த்துக் கேட்டால்
சிண்டைத்தான் பிடித்து ஆட்டிச்
சிதைக்கிறார்; துடித்தெ ழுந்து
பெண்டைத்தான் நிமிர்த்தா விட்டால்
பேடிகள் நாமென் றாவோம்!

தானாடா விட்டா லென்ன?
சதையாடும் என்பார்; அந்த
ஊனாடா விட்டா லென்ன?
உயிராட வேண்டும்; நம்மை
ஏனாள வேண்டும் மாற்றான்
      எனும்கேள்வி எழுந்தால் போதும்
தானாக மாற்றம் தோன்றும்
      தமிழன்கை அன்றே ஓங்கும்!

2 கருத்துகள்:

  1. அருமை.. மனம் நிறைந்த ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்..என்றும் அன்புடன் தமிழ்நேசன்

    பதிலளிநீக்கு
  2. தமிழர் புத்தாண்டு மற்றும் பொங்கள் திருநாள் வாழ்த்துக்கள் தமிழ்நேசன்

    பதிலளிநீக்கு