செவ்வாய், 25 மே, 2010

சங்கத் தமிழனைத்தும் தா!


கரையென்னும் மன்னவனைக் கட்டி அணைக்கத்
திரையென்னும் கைநீட்டித் தீதில் –நுரையென்னும்

முத்தம் இடுகின்ற மூவாக் கடலே!நல்
முத்தம் பிறக்கும் முதலிடமே! –மொத்தஉடல்

உப்பாய் விளங்கும் உவரியுனை நாடியவர்க்(கு)
உப்பிடும் வள்ளலே! ஓங்குமழைக்(கு) –அப்பனே!

நீரலையைப் பேரலையாய் நீட்டி நிலமழிக்கப்
பாரினிலே வாய்த்த பகையரசே! –நேரெதிர்த்(து)

அந்நாளில் எங்கள் அருங்குமரிக் கண்டத்தை
எந்நாளும் தோன்றா இடரலை –தன்னால்

அழித்துக் களிப்புற்(று) அருந்தமிழ் நூல்கள்
செழித்த சுவடழித்துச் சென்ற(து) –எழிலாமோ?

பண்ணுக் கினியமொழி பால்மழலைக் கேற்றமொழி
எண்ண உவகைதரும் இன்பமொழி –மண்ணுலகில்

முன்தோன்றி மூத்தமொழி முச்சங்கம் கண்டமொழி
தன்னேரில் லாத தமிழ்மொழியாம் –நன்மொழியின்

எண்ணிறந்த ஏடழித்(து) ஏதும் அறியாத
பெண்ணெனவே வீற்றிருத்தல் பேறாமோ? –கண்ணினிய

எங்கள் தமிழழித்த இன்கடலே! நீயழித்த
சங்கத் தமிழனைத்தும் தா!

அகரம்.அமுதா

2 கருத்துகள்: