சிலையோ? கொடியோ? செழுமாங் கனியோ?
கலைமான் உருவோ? கடல்மீன் வகையோ?
இலையோ எனநான் வினவும் இடைமேல்
மலையோ? மலரோ? மறைத்தாய் அணங்கே!
நாட்டைப் பிடித்து நலிக்கும் வறுமைக்
கோட்டின் பிடியில் கொடியாம் இடையே
மாட்டி உழல மணிமார் பகமோ
மேட்டுக் குடிபோல் மிகவாழ் கிறதே!
அடிமேல் அடிவைத் தகலும் பொழுதிற்
கொடிமேல் கனிகள் குலுங்கும் அழகில்
அடியே! எனைநான் மறந்தேன் இழந்தேன்
பொடிமண் விழுந்த புழுவாய் நெலிந்தேன்
இருநீள் விழியால் இவன்தோள் அளக்கும்
அருமாங் கனியே! அழகின் அழகே!
தருவாய் உனையென் தளிர்க்கை சேர்ப்பாய்
கருவாய் உனையென் கவியில் வார்ப்பாய்!
அகரம் அமுதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக