செவ்வாய், 9 ஜூன், 2009

படம் சொல்லும் பாடல்! (1)


அஞ்சி அழுந்தம்பிக் காறுதல் சொல்லவும்
நெஞ்சில் வலியில்லை; நேற்றுவரைக் –கொஞ்சி
மடியிருத்திக் காத்து மகிழ்ந்தபெற் றோரும்
வெடிவிழச் செத்தனரே வெந்து.
.
கத்தும் ஒலிகேட்கக் காசினிக்குக் காதில்லை;
பொத்தி அழவும் புரியாஇப் பிஞ்சுகளைக்
கொத்தணி குண்டின் கொடுமோசை அச்சுறுத்த
எத்தனையாய் இன்னல் இவர்க்கு! -கவிக்கூற்று-

அகரம் அமுதா

13 கருத்துகள்:

  1. இதுவும் தங்கள் திருத்தி தந்த வெண்பா

    ...............................
    குண்டுகளின் சத்தத்தில் கேட்கவா போகிறது
    வண்டுகளின் சத்தம் ? இரத்தம் வழிந்தோடும்
    உத்தக் களத்தில் அமைதி திரும்புமா ?
    சத்தமும் ஒய்ந்திடு மா ?

    ...............................

    பதிலளிநீக்கு
  2. வட்டில் உணவில்லை வாடி எலும்புடன்
    ஒட்டிய தோலில் உடையில்லை கத்தி
    அழுமோசை காதில் விழவில்லை செத்து
    விழுந்திடுதே செய்கையிலா நெஞ்சு.

    பதிலளிநீக்கு
  3. ஓயும் ஒலியென் றுறுமுகிறான் சிங்களன்
    பாயும் புலியென்னும் பார்வையிலான் -நாயும்
    எறிகல்லாற் சீறுமெனில் ஈழத் துழுவம்
    அரிக்கஞ்சி ஓய்ந்திடுமா ஆங்கு!

    பதிலளிநீக்கு
  4. இறைவா ! இவர்களுக்கு ஏனிந்த இன்னல் !
    உறைவிடமும் இல்லை ! உணவும் இல்லை !
    கரைவது கேட்கிறதா உந்தன் செவியில்
    விரைந்து வழியென்று காட்டு.

    பதிலளிநீக்கு
  5. ஆயுதம் தந்து பலனடைந்த நாய்களால்
    தாயிழந்து தந்தையின்றி போயின சேய்களிங்கே
    மண்ணில் இதயமற்ற இந்தியப் பேய்களால்
    கண்ணீர்க் கதையான திங்கு.

    பதிலளிநீக்கு
  6. வழியொன்று காட்ட வருவான் இறையென்று
    தொழுதொன்றிக் கேட்டால் துயர்போமோ? -அழுகின்ற
    பிள்ளக் காறுதல் சொல்லும் வகைகாணேன்
    உள்ளம் துடிக்கிறதே ஓர்ந்து.

    பதிலளிநீக்கு
  7. இழுதைபோல் வந்தெம் இனத்தை அழிக்கும்
    கழுதைகள் ஆர்த்துக் களிக்கக் -கழுத்தில்
    கயிரிலா மூளியும் சிங்களரும் சேர்ந்தே
    பழிதீர்த்தார் நம்மைப் பரிது!

    பரிது -பெரிது.

    பதிலளிநீக்கு
  8. ////வட்டில் உணவில்லை வாடி எலும்புடன்
    ஒட்டிய தோலில் உடையில்லை கத்தி
    அழுமோசை காதில் விழவில்லை செத்து
    விழுந்திடுதே செய்கையிலா நெஞ்சு.////

    அருமை உமா அவர்களே! வாழ்த்த சொற்கள் இல்லை. மிக அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. ////வட்டில் உணவில்லை வாடி எலும்புடன்
    ஒட்டிய தோலில் உடையில்லை கத்தி
    அழுமோசை காதில் விழவில்லை செத்து
    விழுந்திடுதே செய்கையிலா நெஞ்சு.////

    கத்தும் ஒலிகேட்கக் காசினிக்குக் காதில்லை;
    பொத்தி அழவும் புரியாஇப் பிஞ்சுகளைக்
    கொத்தணி குண்டின் கொடுமோசை அச்சுறுத்த
    எத்தனையாய் இன்னல் இவர்க்கு!

    பதிலளிநீக்கு
  10. உங்கள் வாழ்த்துகளைப் பெற்றதில் மகிழ்ச்சி.

    இன்னல் அகன்று இனிதாய் இவர்வாழ
    மின்மினிகள் கைக்கோர்த்து கண்ணோ[டு] விளையாட
    கற்று உயர்ந்திவர் காதலித்த றம்நாட
    கற்பனைச் செய்திடுதே நெஞ்சு.

    நடக்க வேண்டும் நம்பிக்கைக் கொள்வோம்.

    பதிலளிநீக்கு