செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

ஊதிவத்தி!

வேர் கிளை
இலை விடாத
விருட்சம் நீ...

உன்
வெள்ளை விழுதுகளோ
வான்நோக்கி எழுகின்றன...

நீ பூத்தநெருப்பில்
மணம் அவிழ்கிறது
எந்த வண்டிற்காக?

விழிப்பில் கறைகின்ற
கனவுபோல
காற்றில் கறைகிறது
நீ பரப்பும் மணம்!

மலரிதழ்கள் அல்லாத
மகரந்தம் தாங்கிய
மலர்க்காம்பு நீ...

புகை ஓவியம் தீட்டும்
அதிசயத் தூரிகை...

குறள் வெண்பாவினும்
குறுகிய வெண்பா...

எந்த மீன்களுக்காய்
நீ
புகைத் தூண்டில்
வீசுகிறாய்?

நீ
நின்று தவமிருக்க
சாம்பல் புற்று
உன்னை
முழுமையாய்ச் சூழ்ந்து
முற்றுகையிடுகிறதே!

உனக்குப்
பலரறிய அவையில் வைத்துத்
தீ மகுடம்
சூட்டுகிறோம் நீயோ
கூந்தல் அவிழ்க்கிறாய்
திரௌபதியைப் போல...

அகரம்.அமுதா

2 கருத்துகள்:

  1. அழகான கற்பனை. மரபில் மட்டுமல்ல புதுக்கவிட்தையிலும் அசத்த
    றீங்க. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு